ஊழியர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்களுடனான சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Monday, May 13th, 2019

பதவி உயர்வில் புறக்கணிப்பு மற்றும் பதவி நிலையில் பழிவாங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்களில் ஒருதொகுதியினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

தற்போதைய ஆட்சியில் ஊழியர்களின் பதவி உயர்வுகள், தகுதி மற்றும் தராதரங்களின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்றும் இதனால் தகுதியானவர்கள் பலர் பாதிப்புற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய குறித்த ஊழியர்கள் பல ஊழியர்கள் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுத்து பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்த அவர்கள் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தந்து தமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டித்தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

மேலும் யாழ்ப்பாணம் – தீவக மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் உள்ள பற்றாக்குறை மற்றும் இடர்பாடுகளுக்கும் நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்ததுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான போக்குவரத்து சேவையில் பணியாற்றும் ஊழியர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் சேவையிலேற்படும் தாமதம் மற்றும் இடர்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினர் சரியான தீர்வுகளைக் கண்டு மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கவேண்டும். ஏனெனில் தீவகப் பகுதிகளுக்கு பொதுவாக குறைந்தளவான பேருந்துகளே சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில் பாடசாலை மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உரிய நேரங்களுக்கு குறித்த இடங்களுக்கு செல்வதற்கு பேருந்துகளின் சேவை அவசியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Related posts: