ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாம் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்தல்

Wednesday, May 3rd, 2017

ஊடகங்களை அதன் உரிமையாளர்கள் தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறும், லாப நோக்கத்துடனும் நடத்தினாலும், ஊடக தர்மத்தை பின்பற்றியும், சமூக அக்கறையோடும் இன்னமும் ஊடகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று(03.05.2017) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச ஊடக சுதந்திர தினமாகிய இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,நமது நாட்டில் அவர்கள் கொண்டிருந்த கருத்து நிலைப்பாடு காரணமாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா அற்புதராஜா மற்றும் பால நடராஜா ஐயர்,பிரகீத் எக்னலி கொட, லசந்த விக்ரமதுங்க, தராகி சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கௌரவத்துடன் நினைவில் நிறுத்துகின்றேன்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் நியாயம் கிடைக்கவும், பரிகாரங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் உரியவாறு கிடைக்கவும் விரைவான நடவடிக்கை அவசியம் என்பதை இன்றைய நாளிலும் மீண்டும் வலியுத்துகின்றேன்.

அதேபோல் நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்த விடயமான, ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் கிடைக்கச் செய்வதையும்,அவர்களுக்கு தேவையான ஊடகசார் உபகரணங்களை மானிய அடிப்படையில் கிடைக்கச் செய்வதையும் அரசாங்கம் துரிதமாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நாடுகளின் தர வரிசையில் இலங்கை 141ஆவது இடத்திலேயே இருப்பதாக புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிலையிலிருந்து எமது நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் இன்றைய நாளில் கூறிக்கொள்கின்றேன் என்றும் கூறினார்.

Related posts: