உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, May 4th, 2017

நாட்டில் வளர்ச்சியடைந்துவருகின்ற மக்களது தேவைகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தி தொடர்பில் மிக அதிக அக்கறை செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (03) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், உலகிலுள்ள நகரங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு உணவளிக்கும் மாபெரும் பணியானது ஓர் அவசரப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் ஓர் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. அதே நேரம், நகரவாசிகளுக்கு தவறாமல் உணவு வழங்குவதானது 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினையாக உருவெடுககலாம் என்றும் உணவு விநியோக நிபுணர்களால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. அந்த வகையில், தற்போது உலகளாவிய ரீதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவே உலக சனத்தொகையினரிடையே வழங்கப்பட்டுவரும் நிலையிலும், ஒவ்வொரு இரவுகளிலும் உலகளாவிய ரீதியில் சுமார் 84 கோடி மக்கள் போதிய உணவின்றியே நித்திரை கொள்வதாகவும் தெரிய வருகின்றது.

நகரங்களின் வளர்ச்சிப் போக்கானது வர, வர அதிகரித்து வருகின்ற நிலையினில், வேளாண்மைக்கென ஒதுக்கப்பட்ட நிலங்கள் படிப்படியாக கட்டிடங்கள் மற்றும் வேறு பயன்பாடுகளுக்கென எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வேளாண் நிலங்கள் நகரங்களிலிருந்து வெகு தொலைவுகள் நோக்கி நகர்த்தப்படுகின்ற நிலையில், நகரங்களை அண்டியதாக சிறிதளவு உணவுப் பொருட்கள் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், அல்லது அதுவும் உற்பத்தி செய்யப்படாத ஒரு நிலையில்,  இன்றைய உலகானது உணவுப் பொருட்களுக்கான பாரிய கேள்விகள் கொண்டுள்ள பகுதிகளாகவே நகரப் பகுதிகளை ஆக்கிவிட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், ஒரு நாட்டினது உணவுப் பொருள் உற்பத்தியானது நகரப் புறங்களைவிட்டு மிகவும் தூர ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், அவ்வுற்பத்திகளே நகரப்புறங்களுக்கு கொண்டுவர வேண்டிய நிலைக்கு உட்படுகின்றன.

நகரப் புறங்களில் தொழில்சார் வசதிகள் மற்றும் இதர வாழ்க்கை வசதிகளை மையப்படுத்தி மக்கள் கிராமப் புறங்களிலிருந்து நகரப் புறங்களுக்கு அதிகமாக இடம்பெயருகின்ற நிலையில், நகரப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், அம் மக்களால் அவர்களது தேவைக்கான உணவுப் பொருட்கள் யாவற்றையும் கொள்வனவு செய்ய இயலாத நிலையே காணப்படுகின்றது.

எந்த நிலையிலும், ஒரு நாட்டினது நகரப்புறங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதென்பது பெரும் சவாலாக அமைந்து வருவதை நாம் அவதானத்தில் கொண்டு அதனை ஈடுசெய்யக்கூடிய ஏற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், வறுமை நிலை மிகுதியாகக் காணப்படுகின்ற பகுதிகளில் அனைத்து மக்களுக்குமான உணவு என்பது எட்டாத கனவாகவே இன்னும் இருந்து வருகின்றது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வோர், உணவுப் பொருட்கள் கடைகளில் இருப்பதற்கும், அவை கையில் கிடைப்பதற்கும் இடையில் காணக்கூடியதான வேறுபாட்டினையே சுட்டிக் காட்டுகின்றார்கள். கடைகளில் உணவுப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கப்பெற்றாலும், அவற்றின் விலைகளைப் பொறுத்தும், தமது பொருளாதார நிலைமைகளைப் பொறுத்துமே  மக்களால் அவற்றைக் கொள்வனவு செய்ய முடியும் என்பதால், தற்போதைய எமது நாட்டின் பொருட்களுக்கான விலையேற்றங்களுக்கு மத்தியில் பெரும்பாலான மக்களால் அவற்றைக் கொள்வனவு செய்யக்கூடிய நிலைமைகள் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. இதனால் இந்த மக்களிடையே  போசாக்கின்மை நிலைமைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, இந்த நிலை மலையக மக்களை பெரிதும் ஆட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நகரத்தைப் பொறுத்தவரையில் இங்கே காணப்படக்கூடிய மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் என்பவற்றில் பெரும்பாலனவை பெரிதும் பொருத்தமற்ற இடங்களிலேயே அமைந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இவற்றை நோக்கி உணவுப் பொருட்களை கொண்டு வருகின்ற வாகனங்கள் உரிய நேரத்தில் வசதியாக தரித்து நின்று பொருட்களை இறக்குவதற்குரிய வசதிகளின்மையைக் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான இடங்கள் போதிய பராமரிப்புகளின்றியும் அதிகமான குப்பைகள் சேருகின்ற இடங்களுமாகவே காட்சி தருகின்றன.

அதே நேரம், உள்@ர் உணவுப் பொருட்களை தொலைவான இடங்களிலிருந்து காலதாமதங்களுக்கு உட்பட்டு நகர் புறங்களுக்கு கொண்டுவருவதனாலும், அநேகமான உணவுப் பொருட்களின் இறக்குமதிகளின்போது, பாவனைக்குதவாத தரமற்ற பொருட்களும் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதனாலும் மேற்படி உணவுப் பொருட்களில் மக்களது நுகர்வுத் தேவைகளுக்கு அப்பாலான கழிவுகளே அதிகமாக எஞ்சிவிடுகின்ற நிலைமைகளும் நமது நாட்டில் இல்லாமல் இல்லை. இதனாலும் குவிகின்ற அதிகளவிலான குப்பைகளை அகற்ற முற்படுகின்ற நிலையினிலேயே நாம் அண்மையில் மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து நிற்கின்றோம். அதுமட்டுமல்லாமல், கண்டி, கொகாகொடை, தேக்கவத்தை குப்பைமேடும் அனர்த்தங்களை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதாகவே அறிய முடிகின்றது. இதே நிலையே யாழ்ப்பாணத்தில் காக்காதீவு பகுதியிலும், எமது நாட்டில் மேலும் பல பகுதிகளிலும் ஏற்படலாம் என்பதால், நாம் இது குறித்து தற்போதே உரிய ஏற்பாடுகளை முன்னெடுத்து, குப்பைகளால் இந்த நாட்டில் மீண்டுமொரு அபாயம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வேகமாக வளர்ந்து வருகின்ற நகரங்கள் முகங்கொடுக்கின்ற தேவைகளை இனங்கண்டு அவற்றைச் சமாளிப்பதில் சர்வதேச அமைப்புகள் கூட பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளன. இந்த நிலையில், கிராம உணவு உற்பத்தியை பெருக்குதல், உணவுப் பொருட்களை போதியளவு மக்கள் பெறக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்தல், புதிய பாதைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை உரிய தரங்களுடன் அமைத்தல், களஞ்சிய சாலைகள் அமைப்பதற்கேற்ற வகையில் தனியார்த்துறைகளுக்கு முதலீடு செய்யும் வழிவகைளை ஏற்படுத்துல் மற்றும் அதற்கான ஊக்குவிப்புகளை வழங்குதல், விவசாய மக்கள், வர்த்தகர்கள், உணவுப் பொருட்களை ஏற்றி இறக்கும் போக்குவரத்துகளில் ஈடுபடுவோர் போன்றவர்கள் நிதியையும், உரிய உள்ளீடுகளையும் இலகுவாகவும், நியாய ஏற்பாடுகளிலும் பெற வங்கி கடன் வாய்ப்புகள் உட்பட்ட வசதிகளை ஏற்படுத்துதல், வர்த்தகம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான உரிய விதிமுறைகளை வகுத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென சர்வதேச உணவு திட்ட வகுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூறுகின்றனர். எனினும், மேற்படி துறைகள் சார்ந்து எமது அரச அதிகாரிகளை மேலும் ஊக்குவிப்பதற்கும், அதற்கான வளங்களை வழங்குவதற்கும் அரசு உரிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகவுள்ளது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அண்மைக்காலமாக எமது நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் காரணமாக சுமார் 09 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியவர்காளக இருந்து வருவதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் கடந்த தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலகட்டத்தை எடுத்துக் கொண்டால் எமது நாட்டில் மொத்த உணவு உற்பத்தியில் நூற்றுக்கு நாற்பது வீதமே பொது மக்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையினையும் காணக்கூடியதாக இருந்தது.

இன்றைய அதிகரித்த சனத்தொகைக்கேற்ப உணவு உற்பத்திகளை மேற்கொள்ளல் என்பது குறுகிய நிலப்பரப்புகளில் அதிகளவு உணவு உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளதால், பல்வேறு இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எமது இயற்கையும், மண்வளமும், நீர்வளமும் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் பாரிய பல நோய்களுக்கு ஆட்படக்கூடிய நிலைமைகள் ஏராளமாகும்.

அந்த வகையிலே தற்போது யாழ்ப்பாண மக்களது பாவனையிலுள்ள குடிநீரில் உலக சுகாதார அமையத்தின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தரத்தைவிட அதிகளவில் நைத்திரேற் மற்றும் தைத்திரேற் என்பன காணப்படுவதாகவும், இதன் காரணமாக எதிர்காலத்தில் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படக்கூடிய நிலை தோன்றுமெனவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலை யாழ்ப்பாணத்து நிலத்தடி நீரில் ஏற்படுவதற்கு மலக்கழிவுகள், விலங்குக் கழிவுகள், அதிகரித்த விவசாய இரசாயனப் பாவiனை என்பனவே காரணமாகும் என்றும் தெரிய வருகிறது. சில அரசியல் தலைமைகளின் சுயலாப நோக்கு காரணமாக சுண்ணாகம் பகுதியிலே கழிவு எண்ணெய்க் கழிவுகளும் அப்பகுதி நிலத்தடி நீரில் கலக்கப்பட்டு அப்பகுதி மக்கள் குடிநீருக்கான பெரும் சவாலுக்கு உட்பட்டு அதிலிருந்து மீள முடியாதவாறு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பிரச்சினை தொடர்பில் நாம் உரிய ஏற்பாடுகளை முன்னெடுத்தாக வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டி,

தற்போதைய ஆட்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கென 20 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இவை ஒவ்வொரு மாதமும் தலா 2 ஆயிரம் ரூபா பெறுமதியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் மூலமாக வழங்கப்படுகின்ற உணவுப் பொருட்கள் தரமற்றவை என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தரப்பினர் உரிய அவதானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும்,

அதே நேரம் அதிகமாகவே எமது நாட்டில் பண்டிகைக் காலங்கள் வருகின்ற காலகட்டங்களிலேயே அதிகளவில் உணவகங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தி நாடளாவிய ரீதியில் அடிக்கடி மேற்படி சோதனைகளை நடத்தி – குறிப்பாக தூர இடங்களுக்கான பேரூந்துகள் நிறுத்தப்படுகின்ற இடங்களிலுள்ள உணவகங்கள் தொடர்பிலும் உரிய அவதானங்களைச் செலுத்தி, சோதனைகளை மேற்கொண்டு மக்களுக்கு தரமானதும், சுத்தமானதும், நியாய விலைகளைக் கொண்டதுமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொலித்தீனுக்கு மாற்றீடாக பனை வளத்தையும் சேர்க்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி விலியுறுத்து!
கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழாரம்!
சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் - பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் ...