உழைப்பவர் தினத்தில் உரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்!…. மேதின செய்தியில் டக்ளஸ் தேவானந்தா

Sunday, April 30th, 2017
உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள் தமது உரிமைக்கு குரல் கொடுக்கும் இன்றைய மேதினத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் நாம் தன்னலமற்ற பாதையில் தனித்துவமாக தொடர்ந்தும் உழைக்க உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது மேதின அறைகூவல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,… உலகத்தொழிலாளர்களினதும் ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் மக்களினதும் உரிமைக்குரல்கள் உலகெங்கும் ஒலித்து வருகின்றன. எங்கெல்லாம் உழைக்கும் மக்களின் குரல்கள் எழுந்தனவோ, எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்ற தேச மக்களின் போராட்டங்கள் நடந்தனவோ அங்கெல்லாம் முடிந்தளவு உரிமைகள் கிடைத்தன. ஆனாலும்,.. தமிழ் பேசும் தேசிய இனத்தின் உரிமைப்போராட்டமோ எமது உழைக்கும் மக்களின் உரிமைக்குரல்களோ இதுவரை நிரந்தர தீர்வை எட்டிவிடவில்லை.
எழுபது ஆண்டுகளாக தீராப்பிரச்சினையாக எமது அரசியலுரிமை பிரச்சினை நீடித்த துயராகவே தொடர்கிறது.. வரலாறெங்கும் கிடைத்த வாய்ப்புக்களை தவற விட்ட சக தமிழ் தலைமைகள் அடுத்த தேர்தலை குறியாக கொண்டே வெறும் வாய்ச்சொல் வீரம் காட்டி வருகிறார்கள்.
போராட்டம் வெடிக்கும் என்றும்,..அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் மாறி மாறி வரும் எல்லா அரசுகளுக்கும் சவால் விட்டு தமது காலத்தை ஓட்டுகின்றார்கள். மாறாக தாம் அபகரித்த அரசியல் பலத்தை தமிழ் தேசிய இனத்தின் அரசியலுரிமைக்காக பேரம் பேசி வெல்லும் அரசியல் சாணக்கிய பொறிமுறையை ஒருபோதும் அவர்கள் கையாண்டது கிடையாது.
எந்தவொரு அரசும் சரி,  தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளையோ அன்றி உழைக்கும் மக்களின் உரிமைகளையோ தாம்பாளத்தட்டில் ஏந்தி வந்து எமக்கு தாமாக தரப்போவதில்லை.. ‘அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும்’ என்பதுபோல் எமது மக்களின் உரிமைகளை நாமே வெல்ல வேண்டும்.. அதற்கு தேவை பிரச்சினைகளை தீர்க்க வல்ல ஆற்றலும் அக்கறையும் மிக்க அரசியல் தலைமையே அன்றி, ஆற்றலும் அக்கறையும் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகளிடமே  எமது மக்கள் தமது ஆணைகளை இது வரை வழங்கி வந்திருக்கிறார்கள். இனியும் எமது மக்கள் தம்மை ஏமாற்றி வரும் மாய மான்களை பின்தொடர்ந்து ஓடத் தயாரில்லை.
மாகாணசபை செயல் திறனற்று தூங்கி கிடக்கிறது. மத்தியில் இணக்க அரசியல் நடத்துவோர் தமது அரசியல் பலத்தை பயன்படுத்தும் ஆற்றலும் அக்கறையும் இன்றி  சோரம் போய்க்கிடக்கிறார்கள்.
வாக்களித்த மக்கள் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி வீதிக்கு வந்து போராடத்துணிதிருக்கின்றார்கள். மக்களின் போராட்ட உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிப்போம்!.
காணி நிலம் வேண்டும்,. காணாமல் போனவர்களுக்கு பதில் வேண்டும்!.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வேண்டும்!
இளைஞர், யுவதிகள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும்!
எங்கள் கடற்பரப்பில், வயல் வெளியில், தொழில் நிறுவனங்களில் அன்றாடம் உழைக்கும் மக்களுக்கும் வறிய கூலித்தொழிலாளர்களுக்கும் சுதந்திரமாக தொழில் புரியும் உரிமை வேண்டும்..
உழைக்கும் மக்களின் நலன்கள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும்.
எமது மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் வென்றெடுப்போம்!
அபிவிருத்தியால் எம் வரலாற்று வாழ்விடங்களை நிமிர வைப்போம்!!
அரசியலுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக எமது மக்களை வாழ வைப்போம்!!!
இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிமையின் வெற்றிக்கு மாற்றங்களை உருவாக்க வல்ல மாபெரும் சக்தியாக மக்கள் எழுந்து வர வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.

Related posts:

சக அரசியல் கட்சிகளை நான் விமர்சிப்பதென்பது காழ்ப்பு ணர்ச்சி காரணமாக அல்ல: அவர்கள் வரலாற்றில் விட்ட த...
தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும் - ...
பேசாலை ரின்மீ்ன் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் ...

யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதமரின் இந்து மத விவகார இணை...
கற்பிட்டியில் பாரம்பரியமாக இழுவை வலைத் தொழில் முறையைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு...
கிளிநொச்சி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்ச...