உல்லாசப் பயணிகளை கவர்வதற்கு புதிய யுத்திகள் உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Tuesday, October 9th, 2018
இன்று இந்த நாடு வருமானம் ஈட்டுகின்ற பிரதான துறையாக உல்லாசப் பிரயாணத்துறை காணப்படுகின்றது. அந்தவகையில் இந்த நாடு இந்த வருடத்தில் 2 மில்லியன் உல்லாசப் பிரயாணிகளை எதிர்பார்த்திருந்தாலும் உல்லாசப் பிரயாணிகளை ஈர்ப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இந்த நாட்டில் எந்தளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றன? என்பது தொடர்பில் நிலவுகின்ற கேள்விக் குறி இன்னமும் அகன்றுள்ளதாகத் தெரியவரவில்லை.
அதேநேரம் நாட்டில் அடிக்கடி ஏற்படுகின்ற பணி நிறுத்தப் போராட்டங்களும் இத்துறையினை பாதிப்பதாகவே அமைகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 2018ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை தொடர்பான அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
உல்லாசப் பிரயாணத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துகின்ற நிலையில் இருந்துவரக்கூடிய பொருளாதார வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன – அல்லது அவற்றின் மூலமான பொருளாதார ஈட்டல்களுக்கு தடை ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கடற்றொழிலை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும்.
ஆகவே ஒரு தொழிற்துறை இலாபகரமானதாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனது வள இடத்தில் இன்னொரு இலாபகரமான தொழில் கொண்டு அதனை மூடி விடுவது என்பதும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றது.
அந்த வகையில் இந்நாட்டின் கடற்றொழில்த்துறையானது பாரியளவிலான நவீனத்துவத்தினைக் கோரியும் விரிவாக்கலையும் கோரி நிற்பதுடன் தடைகளைத் தகர்த்தெறியவும் கோருகின்ற நிலையினைக் காண முடிகின்றது. இந்தத் தடைகள் உள்நாட்டுத் தடைகளாகட்டும் வெளிநாட்டுத் தடைகளாகட்டும் அவை கடல் வளப் பாதிப்புகளையும் அந்தந்த மாவட்ட கடற்றொழிலாளர்களது தொழிலுக்கான சுதந்திரமான உறுதிப்பாட்டையும் பாதிப்பதாக – அழிப்பதாகவே அமைந்து வருகின்றன.
Related posts:
|
|
|


