உலக புரத தேவையை நீர் வேளாண்மை ஊடாகவே நிறைவு செய்ய முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

மக்களினதும் அரசாங்கத்தினதும் நலன்சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்பதுவே தனது எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் நலனை முன்னிறுத்தியே தனது தீர்மானங்கள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சு சார் திணைக்களங்களின் யாழ். பிராந்திய அதிகாரிகளுக்கும் அரச நிர்வாக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இதில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை அபிருத்தி நடவடிக்கைகளில் காணப்படக்கூடிய நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே மேற்படி கருத்து அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த, தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிருபராஜ், அண்மைய சர்வதேச ஆய்வுகளின் அடிப்படையில், உலகளவில் தேவைப்படுகின்ற மொத்த உணவுத் தேவையில் 70 வீதத்தினை நீர் வேளாண்மை ஊடாகவே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனம் ஒன்றினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எமது பிரதேசங்களிலும் நீர் வேளாண்மையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எனினும், மக்கள் மத்தியில் நீர்வேளாண்மை பற்றிய பூரணமான புரிதல் இன்மை காரணமாக, தங்களுடைய பாரம்பரிய தொழில்முறைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும், சூழல் பாதிப்பு ஏற்படும் போன்ற அடிப்படையற்ற சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர், மக்கள் நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் அமைய வேண்டுமெனவும், நீர் வேளாண்மை செயற்பாடுகளின் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து நியமங்களும் பின்பற்றப்பட வேண்டும் என்பதுடன் கடலட்டை மற்றும் இறால் உற்பத்தி தொடர்பாக மக்களுக்கு பூரண விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|