‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, April 5th, 2019

நுண்கடன் தொல்லை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், வடக்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழுகின்ற சுமார் 45 ஆயிரம் பெண்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள சுமார் 140 கோடி ரூபா பெறுமதியான நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இது தற்போதைக்கு எந்த நிலையினை எட்டியிருக்கின்றது எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற பிரமிட் முறையிலான நிதி நிறுவனங்கள் மீளவும் வடக்கிலே தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றன. இது தொடர்பிலும் அவதானங்கள் செலுத்துப்பட்டு, இத்தைகய நிதி நிறுவனங்கள் எமது மக்களை இலக்கு வைத்து, பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்ற நிலைமைகள் தடை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் எமது மக்களின் பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளை எமது மக்கள் எட்டிக் கொள்வதற்கென எமது பகுதிகளில் இருக்கின்ற வளங்களைக் கொண்டதான உற்பத்திக் கிராமங்களை அமைக்க வேண்டியதன் அவசியம் நிலவுகின்றது. இத்தகைய உற்பத்திக் கிராமங்கள் சிறு தொழில் முயற்சிகளாக கூட்டுறவுத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படத்தக்க ஏற்பாடுகளாக வலுப்பெறுமாயின் அது எமது மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

கடன் தொகைகளைப் பெற்று தொழில் முயற்சிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் என்பது எமது பகுதிகளில் பெரும்பாலான மக்களால் முன்னெடுக்க முடியாத நிலையே தோன்றுகின்றது.

குறிப்பாக, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், திடீரென வடக்கு நோக்கிப் பாய்ந்திருந்த அதீத பொருட் சந்தை வாய்ப்பானது, எமது மக்களின் தேவைகளினதும், பின்தள்ளப்பட்டிருந்த முப்பது வருட காலத்து விடுவிப்பினது மேலதிக தேவைகளினதும் காரணமாக அந்தப் பொருட் சந்தையின் போட்டியிடத்தக்க கொள்வனவாளர்களாக மாற வேண்டியிருந்தது.

இதன் காரணமாக குடும்பம், குடும்பம் சார்ந்த படுகடன்கள் அதிகரிக்கின்ற நிலைமைகளுக்கு ஆளாக்கப்பட்ட நிலைமைகளும் இருக்கின்றன.

மேலும், மேற்குறிப்பிட்ட நுண் நிதி மற்றும் நிதி நிறுவனங்களின் ஊடான படுகடன்கள் காரணமாகவும் இன்னமும் எமது மக்கள் பெரும் பாதிப்புகளுக்குள் தள்ளப்பட்டனர்.

எனவே, இந்த இக்கட்டான பொருளாதார கட்டமைப்பிற்குள் அதிலிருந்து மீளமுடியாத நிலைமைகள் எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.

இன்னமும் விடுவிக்கப்படாத எமது மக்களுக்கான வாழ்வாதார இடங்கள், விடுவிக்கப்பட்டும் பல்வேறு தடைகளுக்கு உள்ளாகிவருகின்ற வாழ்வாதார வளங்கள் என கண்ணுக்கு எட்டியும், கைக்கு எட்டாத நிலையில் எமது மக்களுக்கான பொருளாதாரங்கள் பயன்பாடின்றி, விரிந்து கிடக்கின்றன.

இவை அனைத்துக்குமான முதன்மை தேவையானது, எமது மக்களும் இந்த நாட்டு மக்களே என நடைமுறை ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையாகும்.

இந்த வரவு – செலவுத் திட்டத்திலே கூறியுள்ள சில முன்மொழிவுகளை யதார்த்தமாக்கியவாறு விளம்பரப் படங்களை எடுத்து ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றீர்கள்.

அதிலே ஒரு விளம்பரம், முதியோர்களுக்கான விடுதி தொடர்பானது. அந்த விளம்பரத்தை பார்க்கின்ற பிள்ளைகள் தங்களது பெற்றோரை முதியோர் விடுதியிலேயே கொண்டு போய் சேர்ப்பதற்கு முன்வரக்கூடிய வகையில் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

மேலும்,  பிரபல நடிகர்கள் நடிக்கின்ற திரைப்படங்கள் ‘வெகுவிரைவில் வெளிவரும்’ என  விளம்பரங்கள் காட்டப்பட்டு, இரசிகர்களின் ஆவலைத் தூண்டுவதுண்டு. அதுபோல், ‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது.

இந்த விளம்பரங்களுக்கு செலவிடப்படுகின்ற நிதித் தொகையில் ஒரு தொகையாவது இழப்பீட்டுத் தொகையாக எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts: