இளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும்!

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகளில் மத்திய அரசைப் போன்றே, மாகாண அரசினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கெதிராக எமது இளைஞர்கள் – யுவதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த முயற்சிகள் மற்றும் போராட்டங்கள் மத்திய அரசைப் போன்றே மாகாண அரசினாலும் புறந்தள்ளப்பட்டிருந்த நிலையையே காணக்கூடியதாக இருந்தது. இந்த நிலையில், சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக மீண்டும் எமது இளைஞர், யுவதிகளை தூண்டிவிட்டு, அதன் மூலமாக குளிர்காய முயலாமல், இன்றைய மத்திய மற்றும் மாகாண ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளது முக்கியப் பிரச்சினையாகவுள்ள வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வடக்கு மாகாண இளைஞர், யுவதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் நாம் இயன்றளவு நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். தொடர்ந்து நாம் அரசியல் அதிகாரத்தில் பலம் பெற்றிருந்தால் மேற்படி பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலான எமது நடவடிக்கைகள் படிப்படியாகத் தொடர்ந்திருக்கும்.
தற்போதைய நிலையில், எமது இளைஞர், யுவதிகளுக்கான அரச வேலைவாய்ப்புகள் மத்திய அரசில் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில்தான், நாம் மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்களால் கொண்டு வரப்பட்டு. சில காலம் செயற்படுத்தப்பட்டிருந்த 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் அரச தொழில்வாய்ப்புகளில் இனவிகிதாசம் பேணப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
அதே நேரம், வடக்கு மாகாண சபையினாலும் எமது இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினையை போதியளவு தீர்க்க முடியும். பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இருந்தும் அத்தகைய முயற்சிகள் ஏதும் இதுவரையில் நடைபெற்றிராததும் எமது இளைஞர்களது பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகவுள்ளன.
எமது மக்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதானது, எமது இன உரிமையை அடகு வைப்பதாகாது. வேலைவாய்ப்பு என்பது எமது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எனவே, எமது இளைஞர்களது எழுச்சியானது தங்களது அடிப்படை மற்றும் ஏனைய உரிமைகளை மறுக்கின்ற – உதாசீணம் செய்கின்ற அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானதாகவே இருக்க வேண்டும். அது மத்தியானலும் சரி, மாகாணமானாலும் சரி. எங்கெங்கு எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உரிமைப் போராட்டங்கள் எழ வேண்டிய நிலையினையே ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றவர்கள் உருவாக்கி வருகின்றனர் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் அபிவிருத்தி குறித்து காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயற்பட முன்வர வேண்டும்! நாடாளு...
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களுக்கான தீர்வு என்ன? : டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு அமைச...
தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி ...
|
|
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது! செயலாளர் நாய...
பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் ஆசி வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!
மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க...