இலட்சியத் தேரின் வடம்பிடிக்க மக்கள் எழுந்துவர வேண்டும் – புத்தாண்டுச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, December 31st, 2016
இலட்சிய தேரிழுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம். எம்முடன் இணைந்து எமது மக்களும் அதன் வடம் பிடிக்க எழுந்து வரவேண்டும். இதன் மூலமே பிறந்திருக்கும் இந்த புத்தாண்டை கடந்த காலங்களை போலன்றி மாற்றங்களை தரவல்ல மகத்தான ஒரு புத்தாண்டாக நாம் மாற்றிவிட முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –
பிறந்து வரும் புத்தாண்டில் நாம் நேசிக்கும் எமது மக்களின் வாழ்விலும் எமது வரலாற்று வாழ்விடங்களிலும் புது நிமிர்வும் புது மாற்றமும் நிகழவேண்டும்.
அந்த மற்றங்களுக்காக நாம் மக்களாகிய உங்களுடன் இணைந்து உறுதி கொண்டு எழுவோம்.
பிறந்து வரும் ஒவ்வொரு புத்தாண்டிலும் புது மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கைகளே எமது மக்களின் ஆழ்மனங்கள் தோறும் குடி கொண்டிருக்கின்றன.
ஆனாலும் அரசியல் அதிகாரங்களை தம் வசப்படுத்தியோர்கள் உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவைகளையும் நிறைவேற்றி தந்திருக்கவில்லை.
இதனால் எமது மக்களின் இலட்சிய கனவுகள் யாவும் நிறைவேறாத கனவுகளாகவே முடங்கிப்போயிருக்கின்றன. அனுபவங்களின் கருப்பையில் இருந்துதான் புதிய அத்தியாயங்கள் பிறப்பெடுத்து வருகின்றன.
கடந்து போன ஆண்டுகள் யாவும் எமது மக்களுக்கு கற்றுத்தந்த படிப்பினைகள் ஏராளம். அனுபவங்கள் ஏராளம். அந்த அனுபவங்களின் படிப்பினைகளில் இருந்து எமது மக்கள் நிமிர்ந்தெழும் காலத்தை தாமே உருவாக்க உறுதியுடன் எழுந்து வர வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் எமது சொந்த நிலங்களில் அரசியலுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும். எமது நிலம் எமது மக்களுக்கே சொந்தம் என்ற எமது கொள்கைக்கும் மக்களின் நீதியான குரல்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.
இன்னமும் மீட்கப்படாத எமது மக்களின் குடியிருப்பு நிலங்கள் விவசாய நிலங்கள் மற்றும் எமது கடல் எல்லை வளங்கள் யாவும் துரிதமாக தொடர்ந்தும் மீட்கப்பட வேண்டும்.இன்னமும் சிறைகளில் எஞ்சியிருக்கும் அரசியல் கைதிகள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும்.
இல்லாமை என்பது இல்லாதொழிந்து இங்கு எல்லோரும் எல்லாமும் பெற்றோம் என்று எமது மக்கள் நிமிர்ந்தெழ வேண்டும். உழைக்கும் மக்களுக்கு உழைப்பதற்கான உரிமை வேண்டும். எம் தேசத்து கண்மணிகளான எமது இளைஞர் யுவதிகள் சகலருக்கும் வேலை வாய்ப்பு வேண்டும். வலிகளும் வதைகளும் சுமந்த எமது மக்களின் மனக்காயங்கள் தீர்க்கப்பட வேண்டும். எமது மதிநுட்ப அரசியல் வழியில் தமிழ் தேசிய இனத்தின் வரலாற்று பாரம்பரிய அடையாளங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
இவைகளே பிறந்திருக்கும் புத்தாண்டில் எமது மக்கள் அனுபவிக்க வேண்டிய வாழ்வியல் மகிழ்ச்சியாகும்.மாற்றம் ஒன்றை தவிர இங்கு மாறாதிருப்பது ஒன்றுமில்லை. வரலாறு என்றுமே மாறிக்கொண்டே இருக்கும். வரலாற்று மாற்றத்தை தடுத்து நிறுத்த நினைப்பவர்கள் தோற்றுப்போனவர்களே.
மக்களின் மகிழ்ச்சியும் மாற்றங்களும் ஒரு போதும் தாமாக நிகழ்வதில்லை. எமது மக்கள் சரியான திசைவழி நோக்கி விழித்தெழுந்து வந்தால் மட்டுமே அந்த மாற்றங்களும் மகிழ்ச்சியும் நிகழும்.
மனித வாழ்வின் மகத்துவங்களை எமது மக்களும் கொண்டாடி மகிழ எமது மக்களின் உரிமை வாழ்வின் இலட்சியங்களை நாம் எட்டி விட…. தொடர்ந்தும் நாம் உழைப்போம் என உறுதி கொள்வோம்.
எமது இடையறாத முயற்சிகளினால் எமது மக்களின் கனவுகளை சுமந்த இலட்சியத்தேர் அதன் இலக்கை நோக்கி செல்ல வீதிக்கு வந்திருக்கிறது.
ஆனாலும் மதிநுட்ப சிந்தனைகள் இன்றி நினைத்த இலக்கை எட்டியே தீரவேண்டும் என்ற மன உறுதி இன்றி எமது மக்களின் இலட்சியத்தேர் அங்குலம் கூட நகர முடியாமல் சுயலாப அரசியல் சேற்றுக்குள் முடங்கி நிற்கிறது.
இலட்சிய தேரிழுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம். எம்முடன் இணைந்து எமது மக்களும் அதன் வடம் பிடிக்க எழுந்து வரவேண்டும்.
இதன் மூலமே பிறந்திருக்கும் இந்த புத்தாண்டை கடந்த காலங்களை போலன்றி மாற்றங்களை தரவல்ல மகத்தான ஒரு புத்தாண்டாக நாம் மாற்றிவிட முடியும்.
ஆகவே… எம் மக்களே விழித்தெழுங்கள்!…. உங்கள் உரிமை வாழ்வே புலர்ந்து வரும் புத்தாண்டின் புது மகிழ்ச்சி!…. அதுவே உங்கள் புது நிமிர்வு!!…
நீங்கள் விழித்தெழுந்தால் காலம் ஒரு செங்கோலை எம் கையில் தரும். அதில் எமது இலட்சிய கனவுகள் யாவும் நிச்சயம் நிறைவேறும். புத்தாண்டின் புது மகிழ்வும். புது நிமிர்வும் உங்கள் வீடுகளின் வாசல் தேடிவர நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.

Related posts:
|
|
|


