இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரைஜைகள் அல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.வலியுறுத்து!

Thursday, September 20th, 2018

அரசியல் என்பது பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குவதும்,  மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, தாங்கள் மட்டும் அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்பதும் மட்டும்தான் என்றே இந்த சுயலாப தமிழ் அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரந் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

நாடாளுமன்றில் நடைபெற்ற துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள், பொருளாதார சேவை விதிப்பனவு மற்றும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான சட்டமூலங்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

அரசியல் என்பது இந்த அரசியல்வாதிகள் கூறுவதுதான் என்றே எமது மக்களும் கடந்த காலங்களில் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. இந்த அரசியல்வாதிகள் கூறுவது அவர்களது சுயலாபங்களுக்கு மட்டுமே உரித்தானவை, அதனால் தங்களுக்கு எவ்விதமான பயன்களும் ஏற்படப் போவதில்லை என எமது மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக .தற்போதைய வடக்கு மாகாண சபையின் உத்தியோகப்பூர்வ காலம் முடிவடைகின்ற தினத்தை, துன்ப, துயரங்களிலிருந்து விடுபட்ட தங்களது பொன்;னான நாளாகக் கருதி, பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதற்கு எமது மக்கள் தயாராகி வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

நான்கு வருடங்களாக வடக்கு மாகாண சபையின் மூலமாக எமது மக்களுக்கு எதையுமே செய்யாத ஒருவர், மீண்டும் அதே பதவிக்கு வரத் துடித்துக் கொண்டிருப்போரும், அந்தப் பதவியில் அவர் ஒன்றுமே செய்யவில்லை, நானும் அதே பதவிக்கு வந்து ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என எமது மக்களிடம் கேட்கின்றவர்களும் வடக்கின் அரசியலில் குளிர்காய நினைக்கின்றபோது, வடக்கு மாகாணமானது வறுமை மாகாணமாக மாறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என்றே கூறிவைக்க விரும்புகின்றேன்.

எமது மக்கள் இந்த நிலையில் இருந்தால் எதிர்வரும் காலங்கள் மிகவும் அபாயகரமானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யுத்தம் இடம்பெற்றிருந்த காலகட்டங்களில்கூட தென் பகுதியிலிருந்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு போதியளவில் எங்களால் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகள் அடங்களாக சுகாதாரம், கல்வி போன்ற நடவடிக்கைகளுக்காகவும் பொருட்கள் அனுப்பக்கூடியதாகவும், ஏற்பாடுகள் செய்யக்கூடியதாகவும் இருந்தது.

யுத்தம் நடந்த அக்காலகட்டத்தில் நாங்கள் எங்களால் இயன்றளவில் காப்பாற்றியுள்ள எமது மக்கள், இன்று யுத்தம் இல்லாத காலப்பகுதியில் பட்டினிச் சாவினை எதிர்நோக்கி வருவதே வேதனையாக இருக்கின்றது. இதே நிலை வடக்கில் தொடர்ந்தால், இம் மக்கள் அழிந்து விடுவார்களோ? என்ற அச்சமே இப்போது எங்களுக்குள் தோன்றியிருக்கின்றது.

எமது மக்களுடன் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றவர்கள் என்ற அடிப்படையிலேயே எமது மக்களின் நிலைமைகளை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. குறிப்பிட்ட ஒரு தொகை பணம் வடக்கு மாகாண வங்கிகளில் வைப்பில் இடப்பட்டிருப்பதால், வடக்கிலுள்ள அனைத்து மக்களும் பணக்காரர்கள் என்பது அர்த்தம் அல்ல.

எமது மக்களுக்கு உரிய வளங்களை விடுவித்தால், எமது மக்களுக்கு இடையூறுகளையும், தடைகளையும் விதிக்காவிட்டால், எமது மக்களின் தொழில் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காவிட்டால், எமது மக்களை ஏமாற்றி, வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்ற நயவஞ்சகத் தன்மைகள் நிறுத்தப்பட்டால், எமது மக்கள் தங்களது சொந்த முயற்சிகளால் தங்களுக்கான பொருளாதார வளங்களை ஈட்டிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. எமது மக்கள் உழைப்பதற்கு சளைத்தவர்கள் அல்லர்.

எமது மக்களின் நலன்களில் அக்கறையும், ஆளுமையும், ஆற்றலும் உள்ளவர்களாக நாங்கள்; இருக்கின்ற நிலையில், எமது மக்கள் அனுபவித்து வருகின்ற துன்ப, துயரங்களை சகித்துக் கொள்ள முடியாதுள்ளது.

எனவே, எமது மக்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். அந்த மறுமலர்ச்சியானது, வறுமை நிலையிலிருந்து எமது மக்களை முழுமையாக மீட்டெடுக்கின்ற, பொருளாதார ரீதியில் அவர்களை வலுப்படுத்துகின்ற, உரிமை ரீதியில் இந்த நாட்டில் அனைத்து மக்களும் அனுபவித்து வருகின்ற உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கின்ற, அரசியல் ரீதியில் தாங்கள் எவருக்கும் இரண்டாந்தர பிரஜைகள் அல்லர் என்ற நிலைமையினை நடைமுறை ரீதியில் ஏற்படுத்துகின்ற மறுமலர்ச்சியாக இருக்க வேண்டும். அந்த மறுமலர்ச்சிக்காக ஒன்றிணைந்து உழைக்க முன்வருமாறு அனைவருக்கும் பகிரங்கமான அழைப்பினை விடுக்கின்றேன்.

Related posts: