இலங்கையின் கடல் வளத்தினை முழுமையாகப் பயன்படுத்த எதிர்பார்ப்பு – இலங்கை, மாலைதீவு கடற்றொழில் அமைச்சர்கள் விரிவாக ஆராய்வு!

Monday, June 5th, 2023

இலங்கையை சூழவுள்ள கடல் பரப்பில் இலங்கை கடற்றொழிலாளர்கள் முழுமையான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாலைதீவில் பயன்பாட்டில் உள்ள தொழில் முறைகளை கையாள்வது  தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் மாலைதீவு கடற்றொழில் மற்றும் விவசாயத் துறை அமைச்சர் ஹீசைன் ரஸீட் ஹசன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள மாலைதீவு கடற்றொழில் மற்றும் விவசாயத் துறை அமைச்சர், இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று(05.06.2023) கடற்றொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையிலான நீண்ட நட்புறவுகளை நினைவுபடுத்திய இரண்டு நாடுகளின் அமைச்சர்களும், எதிர்காலத்திலும் ஆழமான நட்புறவு தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலை பிரதானமான பொருளாதார மார்க்கமாக கொண்டுள்ள மாலைதீவின் அனுபங்களை தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கான திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது ஆரோக்கியமானதாக இருக்கும் எனவும்  தெரிவித்தார்.

குறிப்பாக, அரபிக் கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கான பயணப் பாதையாக மாலைதீவு கடல் பரப்பினை இலங்கை கடற்றொழிலாளர்கள் பயன்படுத்த அனுமதிப்பது  தொடர்பாகவும்,  ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்றொழிலாளர்கள் அசாதாரண சூழலை எதிர்கொள்ளுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களை பாதுகாப்பதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றின் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

அதேபோன்று சீநோர் நிறுவனத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்ற மீன்பிடிப் படகுகளுக்கு மாலைதீவில் சந்தை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்வது தொடர்பாகவும்,  நீர்வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற  மீன்களுக்கான உணவுகளை பெற்றுக்கொள்வது மற்றும் தரமான உணவுகளை இலங்கையில் உற்பத்தி செய்தல் தொடர்பாக தனது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த மாலைதீவு கடற்றொழில் அமைச்சர், இலங்கையின் நட்பு நாடு என்றவகையில் சாத்தியமான அனைத்து வகையான ஒத்துழைப்புக்களும் உதவிகளும் தொடரும் எனவும், மாலைதீவு கடற் பரப்பினை பயணப் பாதையாக பயன்படுத்த விரும்பினால் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மாலைதீவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய பின்னர் பயணிக்க முடியும் எனவும், இலங்கை கடற்றொழில் அமைச்சரின் ஏனைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்கள் தொர்பாக ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக, மாலைதீவின் பிரதான  மீன்பிடி முறையான தூண்டில் முறையினை இலங்கையில்  விருத்தி செய்வதன் மூலம் கரையோர மீன்பிடியை விருத்தி செய்வதுடன் இலங்கையை சூழவுள்ள கடல் வளத்தினை முழுமையாக பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்பதுடன், ஆழ்கடல் தொழிலில் ஏற்படுகின்ற கால விரயம் மற்றும் உற்பத்தி செலவு போன்றவற்றையும் மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை கடற்றொழிலாளர்கள் ஐஸ் கட்டிகளுக்காக கணிசமானளவு செலவு செய்வதை சுட்டிக்காட்டிய மாலைதீவு கடற்றொழில் அமைச்சர், தங்களது நாட்டில் கடற்றொழிலாளர்கள்கள் பயன்படுத்தும் குளிர் நீர் பொறிமுறையை பயன்படுத்துவதன் மூலம் செலவை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அதுதொடர்பான தொழில்நுட்பங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், மாலைதீவின் கடற்றொழில்  அமைச்சருடன் அவ்வமைச்சின் உதவி அமைச்சரும், அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதேபோன்று, இலங்கை  கடற்றொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் கடற்றொழில்  அமைச்சின் கீழ் இருக்கும் நிறுவனங்களி தலைவர்களும் கலந்து கொண்டனர். – 05.06.2023

000

Related posts: