இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – கடற்றொழில் செயற்பாடுகளை நவீனமயப்படுத்து தொடர்பில் ஆராய்வு!

Thursday, January 26th, 2023


கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தென்கொரியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் தென்கொரியாவின் துறைசார் தொழில்நுட்ப அனுபங்களை உள்வாங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இலங்கையின் கடலுணவுகளை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.

இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் சன்தூஸ் வூன்ஜின் ஜிஒன்ங், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று(26.01.2023) சந்தித்து கலந்துரையாடிய போதே குறித்த விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில்,

நீர்வேளாண்மை சார் உற்பத்தியில் தென்கொரியாவின் அடைவுகளை பாராட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயிரியல்சார் தொழில்நுட்பம் மற்றும் கடலுணவுகளை பண்ணை முறையில் இனப் பெருக்கம் செய்வதற்கான தொழில்நுட்பம், போன்றவற்றில் தென்கொரியாவிற்கு இருக்கின்ற அனுபவங்களை உள்வாங்குவதற்கும் பயிற்சி நிலையங்களை இலங்கையில் அமைப்பதற்குமான ஆர்வத்தினை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று, மீன் உணவுகளை உற்பத்தி செய்தல், கருவாடுகளை உற்பத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப முறைமைகள், மீன்கள் செறிந்து காணப்படும் பிரதேசங்களை கடற்றொழிலாளர்கள் இலகுவாக அறிந்து கொள்வதற்கான கருவிகளை கடற்றொழிலளார்களுக்கு வழங்குதவறகான ஒத்துழைப்புகள் போன்ற கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை விருத்திக்கு சாத்தியமான பல்வேறு விடயங்களை தென்கொரியாவிடம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான தென் கொரிய தூதுவர், கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து முடிந்தளவு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்ததுடன் தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு கடற்றொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்பாக தெரிவித்தார்.

இதனை வரவேற்ற கடற்றொழில் அமைச்சர், கொரிய மொழிப் பயிற்சி நிலையங்களை வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் விஸ்தரப்பதற்கும், பல்கலைக் கழகங்கள் ஊடாக கடற்றொழில்சார் கற்கை நெறிகளையும் கொரிய மொழியுடன் இணைத்து முன்னெடுப்பதும் ஆரோக்கியமாக இருக்கும் என்ற கருத்தினையும் முன்வைத்தார்.

அத்துடன், இலங்கை கடலுணவுகளுக்கான சிறந்த ஏற்றுமதிச் சந்தையாக தென்கொரியா விளங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேரடியாக தென்கொரியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்(தொழில்நுட்பம்) தம்மிக்க ரணதுங்க, கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர்களான எஸ். தவராசார மற்றும் பேராசிரியர் நவரட்ணராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 26.01.2023

Related posts:

கல்விக் கொள்கையில் மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கின்ற போது சமச்சீரான சமூகத்தை எவ்வாறு உருவாக்கப் முட...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...
வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கு ...

வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்; 6 ஆயிரம் ரூபாவினைப் பெறுவதற்கானது அல்...
கிடைத்த அதிகாரத்தின் மூலம் அழிந்த கிளிநொச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் நாமே கிளி.மக்கள் மத்தியில்...
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...