இருண்ட யுகங்கள் ஒருபோதும் நிரந்தரமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 6th, 2018

இருள் அகன்று ஒளிவீசிய தீபத்திருநாள் இன்றைய தீபாவளித்திருநாள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! தர்மம் மறுபடி வெல்லும்!
இந்த நம்பிக்கையினை எமது மக்களின் மனங்களில் விதை விதைத்த திருநாளே தீபாவளித்திருநாள்.

இருண்ட யுகங்கள் ஒருபோதும் நிரந்தரமில்லை. இந்த நம்பிக்கையில் மட்டுந்தான் மனிதகுல வரலாறு நகர்ந்து கொண்டிருக்கிறது.
வாழ்வெங்கும் துயர்களை சுமந்துவரும் தமிழ் பேசும் மக்களின் வரலாறும் இவ்வாறுதான் நகர்ந்து செல்கிறது.

மாய மான்களை பின் தொடர்ந்து ஓடியதால் எமது மக்கள் அம்புகள் தைத்து துடிதுடித்து மாய்ந்தனர்.
நாம் எதற்காக போராடினோமோஅதற்கான தீர்வு கிடைக்கவேண்டும்.

அது போலவே,.. நாம் போராடப்புறப்பட்டதால் உருவான எமது மக்களின் அவலங்களும் தீர்வுகள் கிடைக்க வேண்டும்.
இந்த இரண்டு வகையான கனவுகளையும் எமது நெஞ்சில் சுமந்தபடி எமது இலட்சியபயணத்தை நாம் தடைகளை வென்று தொடர்ந்து வருகின்றோம்.

நாம் தலை நிமிர்ந்து வாழக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு மலர வேண்டும்.இன்னமும் மீண்டு வராத அரசியல் கைதிகள் விரைவாக விடுதலையாகி வர வேண்டும்…
இதுவரை மீட்கப்படாத எமது மக்களின் சொந்த நிலங்கள் மீட்கப்பட வேண்டும். எமது நிலங்கள் எமக்கே சொந்தம் என்ற வகையில் அங்கெல்லாம் எமது மக்கள் மீள்குடியேற வேண்டும்.

சிதைந்து போன எங்கள் அழகிய வாழ்விடங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தப்பட வேண்டும்.
காணாமல் போனோரின் உறவுகள் வடிக்கும் கண்ணீருக்கு உரிய பரிகாரம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இல்லாமையில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுபட்டுஉயரிய வாழ்வின் மகிழ்ச்சியை எல்லா மக்களும் அனுபவிக்க வேண்டும்.
இந்த இலட்சியக்கனவுகள் நிறைவேறும் காலமே எமது மண்ணில் நிரந்த ஒளி வீசும் காலமாகும்.

கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு நாம் மட்டுமே இவைகளை முடிந்தளவு சாதித்து காட்டியிருக்கின்றோம்.
அரசியல் பலத்தையும், அரிய வாய்ப்புகளையும் கைவசம் வைத்துக்கொண்டு,..

அடுத்த தீபாவளிக்கு அரசியல் தீர்வு என்று ஒவ்வொரு ஆண்டுகள் தோறும் உணர்ச்சி பொங்க பேசி மக்களை ஏமாற்றி வரும் கூட்டமல்ல நாங்கள்.
கைவசம் கிடைக்கும் எந்த வாய்ப்பானாலும் அதை ஏற்றுக்கொண்டு எம்மால் முடிந்தளவு பணிகளை நாம் ஆற்றி வருகின்றோம்.

போதிய அரசியல் பலம் இல்லாத போதிலும் எமது நல்லெண்ண சமிஞையினாலும், எமது அரசியல் இராஜதந்திரத்தாலும்,..
இன்று கிடைத்திருக்கும் வாய்ப்பையும் நாம் நேசிக்கும் எமது மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தியே தீருவோம்.

கல்லோடு கட்டி எம்மை எவரும் கடலிலே வீச நினைத்தாலும் எமது மக்களை கரைசேர்க்கும் கப்பலாகவே நாம் மிதந்து வருவோம்.
சுண்ணாம்பு அறையில் எம்மை எவரும் பூட்டி வைக்க எத்தனித்தாலும் எமது மக்கள் விரும்பும் சுதந்திரக்காற்றை எமது வாழ்விடங்களில் நாம் வீச வைப்போம்.
சூழ்ந்து வரும் சூழ்சிகளை வென்று சரிந்து கிடக்கும் எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மேலும் தூக்கி நிறுத்துவோம்.

மாற்றங்கள் நிகழவேண்டிய அரிய இத்தருணங்களில் இன்னமும் மாறாதிருக்கும் அரசியல் மாற்றங்களை உருவாக்க நாம் முடிந்தளவு முயற்சிப்போம்.
மத்தியில் இன்று மலர்ந்திருக்கும் மாற்றம் எமது மக்களுக்கு புத்தொளி வீசும் காலம் என்றே நான் கருதுகின்றேன்.

அது போல் எதிர்வரும் காலங்களில் எமது மக்கள் மத்தியிலும் நிகழும் மாற்றங்களே எமது மக்களுக்கு நிரந்த விடியலை பெற்றுத்தரும்.
இலட்சியத்தேரின் வடம் பிடிக்க இன்று எம்மை நோக்கி எமது மக்கள் அணிதிரண்டு வருவதையிட்டு நான் அகமகிழ்வோடு வரவேற்கிறேன்!

இந்த நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தீபாவைத்திருநாளை கொண்டாடி மகிழும் எமது மக்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
கௌரவ ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அவர்களும்,…கௌரவ முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமாகிய மகிந்த ராஜபக்ச அவர்களும்,,,,
எமக்கும் எமது தமிழ் பேசும் மக்களுக்கும் அழகிய எங்கள் இலங்கைதீவிற்கும் மாற்றத்தை நோக்கி செல்லும் பாதையை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.

அதற்காக,.. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பாகவும், மாற்றத்தை விரும்பு காத்திருந்த தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் எனது ஆழ்மன நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இன நல்லிணக்கத்திற்காகவும்இன சமத்துவத்திற்காகவும்,..எமது இலட்சியக்கனவுகளுக்காகவும்நாம் தொடர்ந்தும் உழைப்போம்.

எமது இலக்கை வெற்றிபெற வைக்கும் வகையில் இன்று மாலை நாடாளுமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இருதலைவர்களும் உறுதிமொழி தந்திருந்தாலும் அதனைச் சாதிப்பது எமது அணுகுமுறைகளிலேயே தங்கியுள்ளது.

முயல்வோம் வெல்லோம் உளம் சோரோம் !!!!

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபத்திருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:


யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுதிசெய்ய ஒன்றுபட்டு உழைப்போம் - வேட்பாளர்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்த...
காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர...