இந்திய அரசுடன் நல்லுறவு வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  வலியுறுத்து!

Monday, August 27th, 2018

நாம் போராடிப் பெற்றெடுத்த – பொன்னான வாய்ப்பு எனக் கனவு கண்டிருந்த மாகாண சபையினை வடக்கிலே செயற்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு நிலையில் நாங்கள் இருக்கின்றோம். எமது மக்களின் அன்னறாடப் பிரச்சினைகளைத் தீர்த்து, அபிவிருத்தியினை துரித கதியில் முன்னெடுத்து, அரசியல் தீர்வினை நோக்கியதான வழிமுறையில் பயணிப்பதற்கு எம்மால் இந்த மாகாண சபையினை செயற்படுத்திக் காட்ட முடியும். எமது மக்களின் தொழிலின்மை பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளைக் காண இந்த மாகாண சபையால் முடியும். ஆக்கிரமிப்புகளை – அபகரிப்புகளை – அக்கிரமங்களை தடுத்து நிறுத்திட முடியும்.

மக்களின் பணத்தை செலவு செய்து, வெறும் தீர்மானங்களை எடுத்து, எடுத்த தீர்மானங்களை அடுக்களையில் அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதால் இவற்றை செய்ய முடியாது. இவற்றை செய்வதற்கு செயற்திறன் – தற்துணிவு வேண்டும். அக்கறை – ஆளுமை -விருப்பங்கள் வேண்டும். மத்திய அரசுடன் நல்லுறவு வேண்டும். இதைத்தான் நாங்கள் ‘மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!’ எனக் கொள்கை கொண்டுள்ளோம்.
அத்துடன், இந்திய அரசுடன் நல்லுறவு வேண்டும். எமது மக்களுக்கான உதவிகள் – ஒத்துழைப்புகள் எங்கிருந்து கிடைத்தாலும், அகந்தையுடனும், இறுமாப்புடனும் வீம்பு பேசிக் கொண்டு அவற்றைத் தட்டிக்கழிக்காமல், அவற்றைப் பெற்று எமது மக்களிடம் சேர்ப்பிப்பதற்கான உணர்வுகள் வேண்டும்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகள் நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: