இந்திய அரசின் உதவிகள் எமது மக்கள் நலன்களை முதன்மைப்படுத்தியவை!

Friday, July 29th, 2016

இந்திய அரசு இலங்கைக்கு இலவச அம்பியுலன்ஸ் சேவையை அறிமுக்கப்படுத்தி, அதற்கிணங்க முதற்கட்டமாக 88 அம்பியுலன்ஸ் வண்டிகளை வழங்கியிருக்கிறது. இது இலங்கை மக்கள்மீது இந்திய அரசு கொண்டுள்ள நல்லெண்ணத்தை மேலும் வெளிப்படுத்துவதாகவும், உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது. இந்த மாபெரும் உதவியை எமக்கு வழங்கியிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இந்திய அரசாங்கமானது இலங்கை மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலையகப் பகுதிகள் போன்றே நாட்டின் ஏனைய பல பகுதிகளும் இந்திய அரசின் உதவிகளால் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளன. அடிப்படை தேவைகள் முதற்கொண்டு கல்வி, தொழில்நுட்ப, தொழில் பயிற்சி ரீதியில் இலங்கைக்கு இந்தியா செய்து வருகின்ற உதவிகள் பாரியன. 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டம், வடக்குக்கான ரயில் பாதை, யாழ். துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு, மீன்பிடிப் படகுகள், சிறு கைத்தொழில் முயற்சிகள் ஊக்குவிப்பு என இந்தியாவின் உதவிகள் தொடர்கின்றன.

அந்த வகையில், தற்போது இந்த இலவச அம்பியுலன்ஸ் வண்டிகளை இந்தியா எமக்கு வழங்கியிருக்கிறது. இந்த சேவையின் முதற்கட்டமானது மேல் மாகாணத்திலும், தென் மாகாணத்திலும் ஆரம்பிக்கப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இந்த சேவையின் அடுத்த கட்டங்களின்போது ஏனைய மாகாணங்களும் பயன்பெறக்கூடிய வாய்ப்புகள் காலப்போக்கில் ஏற்படும் என நம்புகின்றேன்.

எனவே, இந்திய அரசு வழங்கும் இந்த உதவிகளை எமது மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி பலன்களை அடைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன், இந்திய பிரதமருக்கும், இந்திய மக்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக மீண்டும், மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

போதைப்பொருள் கடத்தலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியாதா? - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
வடக்கிற்கு பனங்காய் தெற்கிற்கு தேங்காய் - கூட்டமைப்பு வீழ்த்திய இரண்டு காய்கள் – நாடாளுமன்றில் டக்ள...
நாடு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள சில கவனக்குறைவுகளே காரணம் - கட்டுப்படுத்த அரசாங்கம் தீவ...

மக்கள் நலன்களை முன்னிறுத்தி பொது முடிவுடன் செயற்படுங்கள் – கட்சியின் யாழ் மாவட்ட, பிரதேச நிர்வாக செய...
ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கின்றது சைக்கிள் கட்சி: அமைச்சர் டக்ளஸிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!
பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் ரணில் வெற்றிகொள்வார் - ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் வாழ்த்து!