இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதேச சபைகளுக்கே வழங்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
                
                 Thursday, March 28th, 2019
        
                    Thursday, March 28th, 2019
            
அண்மையில் இடர் முகாமைத்துவ அமைச்சால் வறட்சியான காலத்தில் குடிதண்ணீர் சேவையை சிறப்பாக மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றுக்கு 15 ஆயிரம் லீட்டர் கொள்ளக்கூடிய தண்ணீர் பவுசர்கள் வழங்கப்பட்டன என்றும், 
 அவை குறித்த உள்ளுராட்சி சபைகளின் சாரதிகள் ஊடாக கொழும்பில் இருந்தும் எடுத்து வரப்பட்டு மாவட்டச் செயலகம் ஊடாக பின்னர் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றில் நடைபெற்ற உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மகாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 மேலும் அவர் தெரிவிக்கையில் –
 இந்த பவுசர்களின் பராமரிப்பு, பழுது பார்க்கும் செலவுகள் அனைத்தும் அந்தந்த உள்ளுராட்சி சபைகளையே சாருகின்ற நிலையில்,  இவ்வாறு வழங்கப்பட்ட தண்ணீர்ப்பவுசர்கள் எந்த நேரத்திலும் மீளவும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தால் கேட்கப்பட்டால் சபைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கீழ் பிரதேச செயலக பதிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த ஏற்பாடு என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கிளடையே தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. 
 மேலும், வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் பல காணப்பட்டு வருவதால் அவற்றை நிரப்ப வேண்டியத் தேவையும் தொடர்கின்றது.
 வடக்கு மாகாண சபையின் ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் இவைகளை கவனிக்க தவறிவிட்டார்கள். மாகாண சபைகளுக்கு இருக்கும் 37 அதிகாரங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து எஞ்சிய 35 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்தை கூட இவர்கள் தமிழ் மக்களுக்காக பயன்படுத்தியிருக்கவில்லை.
 ஒய்யாரக்கொண்டையாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம். பேசுவது போலித்தமிழ் தேசியம்! சாதித்தவை வெறும் பூச்சியம்.
 கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், கையில் கிடைத்த மாகாண சபையில் காரியம் ஆற்ற முடியாதவர்கள். சமஸ்டியை கொடுத்தாலும், நடுக்கடலிலும் நாய்க்கு நக்குத்தண்ணீர் நக்குத்தண்ணீரே!
 காமலீலை குற்றவாளி பிரேமானந்தாவின் சகாக்களை விடுவிக்குமாறு இந்தியப்பிரதமர் மோடியிடம் கேட்டவருக்கு, சிறையிருக்கும் ஒரு தமிழ்த்தாயின் புதல்வனை விடுவிக்கும் சிந்தனை தோன்றவில்லை.
 இது யாரது குற்றம்? தனது ஓய்வு கால பொழுது போக்கிற்காக வடக்கு நோக்கி அரசியல் நடத்த வந்தவர் குற்றமா? அல்லது, தமிழரின் வலிகைளையும் வதைகளையும் அறியாத ஒருவரை வடக்கு மாகாண அதிகாரத்தில் உட்கார வைத்தவர்கள் குற்றமா?
 யுத்த காலத்தில் அரசிடமிருந்து பெற்ற குண்டு துளைக்காத வாகனம் ஏறி பவனி வந்தவர்கள், அதே அரசுக்கு எதிராக கூச்சலிட்டு சூளுரைப்பது போல் சுத்து மாத்து அரசியலில் ஈடுபட்டார்கள்.
 இன்று, அரசிடம் கூனிக்குறுகி இரந்து கேட்டு யாசகம் பெற்ற அரச ஆடம்பர மாளிகையில் வசித்துக்கொண்டு, அதே அரசுக்கு எதிராக பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அறிக்கையிட்டு பம்மாத்து காட்டுகிறார்கள்.
 நான் அடிப்பது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் நடித்துக்கொண்டிரு என்று அரசின் காலில் விழுந்து ஆலோசனை கூறிவிட்டு ஃ அடுத்த தேர்தலுக்கு நீங்கள் ஆயத்தமாகும் உங்கள் புலுடாக்கள் இனியும் வெற்றியளிக்காது.
 தமது ஓய்வு காலத்தை பொழுது போக்கு அரசியலுக்காக செலவழிக்க வந்தவர்களும், வெளியில் வீரப்பேச்சும், அரசின் பின் கதவு தட்டி தத்தமது சொந்த சலுகைகளை மட்டும் பெறும் தரகு தலைமைகளும், தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் பிரதிபலிக்க போவதில்லை.
 நான் இடையாறாது நேசிக்கும் எனது மக்களின் அரசியல் கனவுகளுக்கு மட்டுமின்றி, எமது மக்களின் நடை முறை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரும்பும் எனது கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
 எனவே, மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தில் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
Related posts: