அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் யுத்த வடுக்களை சுமந்த மக்களுக்கான எமது பணிகள் தொடர்ந்திருக்காது!

அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் யுத்த வடுக்களை சுமந்த மக்களுக்கான எமது பணிகளை முன்னெடுத்திருக்கமுடியாது போயிருக்கும். ஆனால் நாம் எடுத்திருந்த அரசியல் நிலைப்பாடே எமது மக்களுக்கான தேவைப்பாடுகளை நிறைவுசெய்து கொடுத்திருந்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
நாம் அன்று முன்னெடுத்திருந்த அரசியல் வியூகங்களே இன்று வரை நாம் மக்கள் பணிகளை மேற்கொள்வதற்கு அத்திவாரமாக இருந்தது. இத்தகைய எமது அரசியல் நிலைப்பாட்டை எள்ளி நகையாடியவர்கள் அதன் மூலம் எமக்கு எதிராக அழுத்தங்களை கொடுத்தார்கள்.
ஆனாலும் இவர்களது அழுத்தங்களுக்கும் கருத்துகளுக்கும் சேறடிப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில்தான் இத்தனை பெரும் பணிகளை நான் மக்களுக்கு ஆற்றியிருக்கிறேன்.
கடந்த கால அனுபவங்களிலிருந்துதான் எதிர்கால வாழ்வு நிச்சயம் செய்யப்படுகின்றது. அந்தவகையில் கடந்தகாலங்களில் யுத்தத்தை நடத்திய யுத்தத்தை வென்ற அரசுகளுடன் நான் இணக்க அரசியலை மேற்கொண்டு மக்களுக்கு பலவிதமான அபிவிருத்தி சார்ந்த பணிகளை முன்னெடுத்திருக்கின்றேன்.
ஆனால் தற்போது இணக்க அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எதுவிதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
தென்னிலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் பலத்துடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகளைக்காணலாம் என்பது தொடர்பில் நாம் எப்போதும் தெளிவாகவே இருக்கின்றோம்.
கடந்தகாலங்களில் முன்னெடுத்த இணக்க அரசியலினூடாகக் கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கென பொறியியல் பீடத்தை நிறுவி சாதித்துக்காட்டியுள்ளோம். இது மட்டுமல்லாது பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எனது தற்துணிவுடன் செயற்படுத்திக்காட்டியுள்ளேன்.
எனவே கடந்தகால அரசியல் தலைமைகளின் முன்னெடுப்புகள் யாவும் தோல்வி கண்டமைக்கு அவர்களது தவறான வழிநடத்தலே காரணமாக இருந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து எமது கட்சியின் வெற்றியை வலுப்படுத்திக் கொள்வீர்களாயின் நிச்சயமாக நாம் உங்களது பகுதியின் பிரச்சினை மட்டுமல்லாது தமிழ்பிரதேசங்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்துவோம் என மேலும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|