‘சேனா’ புழுவிற்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019

வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டம் தவிர்ந்து என்று நினைக்கின்றேன். ஏனைய அனைத்து மாவட்டங்களிலுமாக ‘சேனா’ என்கின்ற படைப் புழுவினால் இந்த நாட்டின் விவசாயத்துறை அடியோடு அழிக்கப்பட்டு வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கடன் இணக்க சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பாக அம்பாறை, மொணராகலை போன்ற மாவட்டங்களில் இந்த புழுவின் தாக்கம் காணப்பட்டபோதே, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று ஏனைய அனைத்து மாவட்டங்களக்கும் இந்தப் புழுவின் தாக்கம் பரவியிருக்காது

ஆரம்பத்தில் சோளப் பயிர்ச் செய்கையைப் பாதித்த இந்தப் படைப் புழுவானது பின்னர் குரக்கன், நெல், கரும்பு, கோவா, பயற்றங்காய், வெண்டிக்காய் எனப் பரவி அனைத்தையும் அழிக்கின்ற நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

தற்போது இந்த புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு அரச தரப்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும், தனியார் சிலர் தங்களது கண்டுபிடிப்புகளாக பல்வேறு இயற்கை கிருமிநாசினிகளை தயாரித்தும், பயன்படுத்தியும் வருவதாகவம் தெரிய வருகின்றது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் முதற் கோலாசானாக இருக்கின்ற கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் விவசாய அமைசசராக செயற்பட்டிருந்த காலகட்டத்தில் சோளம் உள்ளடங்கலான சில தானிய வகைகளின் இறக்குமதியினை இந்த வருடத்திலிருந்து நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினால் ஈர்க்கப்பட்ட எமது விவசாய மக்கள் அதிகளவில் தானியச் செய்கையின்பால் ஈடுபாடுகளைக் காட்டத் தொடங்கினர். ,தன்காரணமாக வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்று, தானியப் பயிர்ச் செய்கையினை பரவலாக மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த அழிவு இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் இந்த படைப் புழுவின் வருகை தொடர்பிலான சந்தேகம் எமது மக்களிடையே எற்படுவது இயல்பாகும்.

அந்தவகையில் இன்றளவிற்கு சுமார் 45 ஆயிரம் ஹெக்கடயர் சோளப் பயிரச் செய்கை அழிவடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. எனவே, மேற்படி படைப் புழு காரணமாக அழிவுற்ற பயிர்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதற்கு இந்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுடன், இந்த விவசாய மக்கள் பெற்றுள்ள வங்கிக் கடன்களையும் இரத்துச் செய்வதற்கு இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் படைப் புழுத் தாக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தலா 45 ஆயிரம் ரூபாவினை அரசு  வழங்கவுள்ளதாக ஓர் அமைச்சர் கூறியதாகவும், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் கூறியதாகவும் இருவேறு செய்திகள் இன்றைய ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. ஒரு ஏக்கருக்குகுறைந்தபட்சம் 45 ஆயிரம் ரூபா என வழங்கப்பட வேண்டும் என்பதையும், அதேநேரம் மேற்படி விவசாயிகளின் அடுத்தகட்ட பயிர்ச்செய்கைக்கான மானியங்களையும் வழங்க அரசு முன்வர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:

ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப விளையாட்டு த்துறையின் மேம்பாடு அவசியம் - டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிளிநொச்சி நகரில் மகத்தான வரவேற்பு : ஆசிவேண்டி பிள்ளையார் கோவி...
கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வியலும் கட்டியெழுப்பப்படும் - மானிப்பாயில் அமைச்சர் டக்ளஸ் த...