அழியும் மரபுரிமைச் சொத்தான நெடுந்தீவுக் குதிரைகளைக் காப்பாற்றுங்கள் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017

நெடுந்தீவில் காணப்படும் குதிரைகளை மரபுரிமைச் சொத்தாக அரசாங்கம் அறிவித்துள்ளபோதும், மேற்படி குதிரைகளைப் பராமரித்துப் பாதுகாப்போம், என அரச தரப்பிலிருந்து குரல்கள் வெளியிடப்படுகின்றபோதும், அவை உரிய பராமரிப்புகளின்றி, தற்போதைய வரட்சி நிலையில் நாளுக்கு நாள் இறக்கின்ற அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவை இப்படியே கேட்பாரற்ற நிலையில் கைவிடப்படுமானால், வெகுவிரைவில் இக் குதிரை இனம் அழிந்து, பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தொன்றையே அழித்துவிட்ட நிலைக்கு நாங்கள் ஆளாகிவிடுவோம் என்பது உறுதியாகவே தெரிகின்றது என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வியை முன்வைத்தார்.

நேற்றைய தினம் (09.08.2017) நாடாளுமன்றத்தில் வலுவாதார மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவிடம் கேள்விகளை மன்வைத்து உரையாற்றும்போது,யாழ் குடாநாட்டில் உல்லாசப் பிரயாணத்துறை சார்ந்த மிக முக்கிய இடங்களில் ஒன்றாகத் திகழும் நெடுந்தீவில், உல்லாசப் பிரயாணிகளின் ஈர்ப்புக்கு பிரதான காரணியாக விளங்கி வருகின்ற குதிரைகள், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின்போது ஆளுநராக செயற்பட்ட ரிஜிர் லொஸ்வேன் காலத்தில் அதாவது 1660 – 1675 காலகட்டங்களில் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகின்றது. நெடுந்தீவின் கடந்த கால வரலாற்றைப் பறைசாற்றுகின்ற ஓர் அடையாளமாகத் திகழ்கின்ற இக் குதிரைகள், பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவை மேற்படித் தீவிற்கே உரிய தனித்துவமாக விளங்குகின்றன.

அந்த வகையில், நெடுந்தீவில் சுமார் 7000க்கும் அதிகமான எண்ணிக்கையில் காணப்பட்ட இக்குதிரைகளின் தற்போதைய எண்ணிக்கை 500விடக் குறைந்தே காணப்படுகின்றன. ஒல்லாந்தர் காலத்திலும், அதற்குப் பிந்தைய காலகட்டங்களிலும் மேற்படிக் குதிரைகளைப் பராமரிப்பதற்கு நீர்த் தொட்டிகள் மற்றும் லயம்கள் என்பவை அமைக்கப்பட்டிருந்தன. இன்றும் கூட பராமரிப்புகள் அற்ற நிலையில் அவற்றைக் காணக்கூடியதாக இருக்கின்றன.

எனவே, வரட்சி காரணமாகவே இவை இறக்கின்றன எனக் கூறி, ஒரு வரலாற்று அடையாளத்தை அழித்துவிடுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத காரணியாகும் என்பதை இங்கு அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன். இந்நிலையில்,

நெடுந்தீவில் காணப்படும் பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தான குதிரைகளைப் பராமரித்து, பாதூகப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும்,குதிரைகளைப் பராமரித்துப் பாதுகாப்பதற்கும், அவற்றுக்கான உணவு, குடி நீர் வசதிகளை வழங்குவதற்கும் பிரத்தியேகமாக வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகஸ்தர்களை நியமிக்க முடியுமா? என்றும்,மேற்படி குதிரைகளை பேணி வளர்ப்பதற்கும், அவற்றின் தரத்தினை உயர்த்துவதற்கும் நெடுந்தீவில் பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து, அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா? என்றும்,நெடுந்தீவிலிருந்து மேற்படிக் குதிரைகளைக் கடத்தும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு வலுவுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? என்றும் கேள்விகளை முன்வைத்தார்.

Related posts:

மயிலிட்டி துறைமுக பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்க...
நாடு இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்த...

மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ள...
வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
தமிழ் மக்களின் பொருளாதார சிக்கல்களையும் கருத்தில் எடுத்த - சுயபொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வரவு செ...