தேயிலையின் தரத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Tuesday, June 4th, 2019

எமது நாட்டின் அந்நியச் செலாவணியில் இன்னனமும் ஒரு நிரந்தரமான ஈட்டல் துறையாக விளங்குகின்ற தேயிலை உற்பத்தித் துறை தொடர்பில்கூட தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற உழைப்பாள மக்களின் வாழ்க்கை நிலையினைப் போன்று, தொடர்ந்தும் துயரமான விடயங்களையே அவதானிக்கக் கூடியதாக இருப்பது வேதனை தருகின்ற வகையிலேயே அமைந்திருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை தேயிலை ஆராய்ச்சி சபை தொடர்பிலான திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதத்;தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அண்மையில்கூட ‘சிலோன் ரீ’ என்கின்ற இந்த நாட்டின் அபிமானத்திற்குரிய தேயிலை ஏற்றுமதியின் போது, ஜப்பான் நாட்டின் சிகப்பு அறிவிப்பிற்கு அது உட்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

1980 – 90 களில் இந்த நாட்டின் ஏற்றுமதித்துறையில் மிக முக்கிய பங்கினை தேயிலை ஏற்றுமதியானது வகித்திருந்தது. குறிப்பாக, 1990ஆம் வருடத்தில் 215.6 மெற்றிக் தொன் கிலோ தேயிலையினை ஏற்றுமதி செய்த நாடாக உலகின் முதலாவது இடத்தை இலங்கை பெற்றிருந்தது.

ஆனால், அதன் பின்னரான காலகட்டங்களில் தொடர்ந்து வரும் தேயிலை செய்கை தொடர்பிலான புறக்கணிப்புகள், அத் துறையில் ஈடுபடுகின்ற மக்கள் தொடர்பிலான புறக்கணிப்புகள், கலப்படம்; போன்ற பல்வேறு காரணிகள் இன்று அத்துறையினை மிகவும் அழிவு நிறைந்த பாதைக்கே இட்டுச் சென்றுள்ளது என்றே கூற வேண்டும்.

இந்த நாட்டு தேயிலை உற்பத்தியில் சீனி, வர்ணங்கள் என்பவை கலப்படம் செய்கின்ற தொழிற்சாலைகள் பல இருப்பதாகவும், அத்தகைய 53 தொழிற்சாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மேற்படி கலப்படத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கூறியிருந்ததாகவும் கடந்த வருடம், பெப்ரவரி மாதம் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அதற்கு முந்தைய வருடம் இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யாவினால் இடைக்காலத் தடையொன்று விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது, இந்த வருடத்தில் இலங்கை தேயிலை தொடர்பில் ஜப்பானின் புறக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அழிவுதரக்கூடிய இரசாயனக் கலப்பு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த இலங்கைத் தேயிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனம்  கொண்ட களைநாசினி பயன்படுத்தப்பட்டு, தேயிலை செய்கைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்கக் காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த வகையில், தேயிலையின் தரத்தினை பழுதடையச் செய்கின்ற செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? என்ற கேள்வி எழுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியது யார்? என்ற கேள்விக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்காதிருப்பதைப் போன்று, இல்லாமல், தேயிலை உற்பத்தி தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய சட்டரீதியிலான நிறுவனம் இலங்கை தேயிலைச் சபையே எனக் கூறப்படுகின்றது.

இருந்தும், இலங்கை தேயிலையின் தரம் தொடர்பில் தொடர்ந்தும் ஏதாவதொரு பிரச்சினை எழுந்து கொண்டேதான் இருக்கின்றது.

தரமற்ற தேயிலைச் செடிகள் விநியோகங்கள் மற்றும் வளர்ப்பு தொடர்பில் கடந்த ஆண்டு பிரஸ்தாபிக்கப்பட்டது. இவ்வறு எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பில், அவ்வப்போது உரிய தீர்வுகள் எட்டப்படாமல், அவை பாரிய பிரச்சினைகளாக உருவாகின்ற வரையில் பார்த்துக் கொண்டிருக்கின்ற வழக்கம் காரணமாகவே இந்த நாட்டில் தேயிலைத் துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளும் இந்த நிலைக்கு வந்துள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts:

நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்  ...
நாட்டில் தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள் தள்ளப்பட்டுள்ளன – நாடாளுமன்றில் டக்ளஸ...
அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்துவதே எமது நோக்கம் - வவுனியாவில் அ...

மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் வி...
இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் - நாடாளுமன்றில்...
வழமைக்கு திரும்பியது பாதை போக்குவரத்து ஊர்காவற்துறை – காரை மக்கள் அமைச்சர் தேவானந்தாவிற்கு நன்றி தெ...