மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்துவது ஜனநாயக மறுப்பாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, January 25th, 2019

ஏற்கனவே மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஏற்பட்டிருந்த தாமதங்களின் பின்னர், இந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சிகளும் விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில் புதிய அரசியல் யாப்பு என்கின்ற ஒரு வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் நாட்டில் பல்வேறு கருத்து மோதல் நிலைகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. பௌத்த தேரர்களின் எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலைமை இன்று நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எமது மக்களின் வாக்குகளை அபகரித்து, நாடாளுமன்ற பதவிகளை எட்டிப் பிடித்துக் கொண்ட தமிழ்த் தரப்பினர், வாக்களித்த எமது மக்களையே பாதுகாக்க திராணியற்ற நிலையில், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போவதாகக் கூறிக் கொண்டு, இந்த ஆட்சியைக் காப்பாற்றி, அதன் மூலமாக தங்களது சுயநலன்களை நிறைவேற்றிக் கொண்டு வருவதோடு, எமது மக்களிடம் போய் ‘எங்களிடம் கேட்டுத்தான் அமைச்சரவை தீரமானங்கள் எடுக்கப்படும், நாங்கள் கூறித்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எல்லாமே நடக்குமென’ வீண் வம்பு பேசிக் கொண்டு, அதே வாயால் ‘இந்த புதிய அரசியல் யாப்பு வரைபில் சமஸ்ரி இருக்கிறது – அது ஒருமித்த நாடு என்ற போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டு இருக்கிறது,’ என்று, எமது மக்களுக்கு வெளிப்படைத்தன்மை அற்ற, ஒளிவு, மறைவு அரசியலை நடத்திக் கொண்டு, கோழி, ஒரேயோரு முட்டையை இட்டுவிட்டு ஊர் முழுதும் கொக்கரித்துக் கொண்டு திரிவதைப்போல், கொக்கரித்துக் கொண்டு திரிவதால்தான் இன்று இத்தகைய எதிர்ப்பு நிலை சகோதர சிங்கள மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, சுகபோகங்களை அனுபவித்து வருகின்ற இந்தத் தமிழ்த் தரப்பு, திட்டமிட்டே இத்தகைய எதிர்ப்புகளை பெரும்பான்மையின மக்களிடையே தூண்டிவிட்டு, இதையே காரணம் காட்டி – அதாவது ‘எமது மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை கொண்டு வருவதில் சிங்களத் தரப்பு எதிர்க்கிறது. எனவே நாங்கள் சர்வதேசத்தை நாட வேண்டும். அதற்கு உங்களது வாக்குகளைத் தாருங்கள்’ என அடுத்து வருகின்ற தேர்தலில் எமது மக்களிடம் வாக்குக் கேட்டுப் போக எண்ணியே செயற்பட்டு வருகின்றது என்றே தெரிய வருகின்றது.

எம்மைப் பொறுத்தவரையில், அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுiமாயக செயற்படுத்துங்கள். இதனை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, படிப்படியாக நிலையான அரசியல் தீர்வு நோக்கி முன்னேறுவோம் என்பதையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

அந்த வகையில்தான், இன்றைய நிலையில் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துங்கள். மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை முழுமையாக வழங்குங்கள். மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளால் செயற்படுத்தப்படட்டும் என வலியுறுத்துகின்றோம்.

உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்தினால் அந்தக் கட்சி வென்றுவிடும். இந்தக் கட்சி வென்றுவிடும். நாங்கள் Nhற்றுவிடுவோம் என்றெல்லாம் எவரும் எண்ணிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் தேர்தல்களே நடைபெறாத ஒரு நிலையும் வந்துவிடலாம்.

எனவே, இந்த நாட்டில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதை வலியுறுத்துகின்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்

Related posts:

மயிலிட்டி துறைமுக பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
சிறப்பாக நடைபெற்றது மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முகவுத்தரத் தேர் பவளக்கால் நாட்டுவிழா - டக்ளஸ் எம்.ப...
பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொ...