அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதால் மக்கள் பணமே விரயமாகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, August 9th, 2018

சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றின் கூற்றுக்களை அவை சார்ந்த நிறுவனங்கள் செவிசாய்க்காத ஒரு நிலை தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படியொரு நிலைமை உண்மையானால், எதற்கு இத்தகைய ஆணைக்குழுக்களை அமைத்து, அதற்கென மக்கள் பணத்தினை ஏன் வீண் விரயம் செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை, பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தம் முடிந்து 9 வருடங்களுக்கு மேலான காலம் கழிந்தும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை சுமந்து நிற்கின்ற எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவென காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் கூட இன்னமும் செயற்படுத்தப்படவில்லை. இந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை ஏன் செயற்படுத்தவில்லை என ஆராய்ந்து பார்ப்பதற்கென இன்னுமொரு ஆணைக்குழு அமைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலையேற்பட்டிருக்கின்றது.

பல்வேறு இடப் பெயர்வுகளுக்கு ஆளாகியமை,  காயங்களுக்கு உட்பட்டுள்ளமை, தடுப்புகளில் இருந்துள்ளமை, சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளமை. குடும்ப உறுப்பினர்களை, நேசித்தவர்களை இழந்துள்ளமை, இருப்பிடங்களை, சொந்த காணி, நிலங்களை, சொத்துக்களை, தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளமை. சொந்தங்கள் காணாமற்  போயுள்ளமை, கல்வி நடவடிக்கைகளை கைவிட்டுள்ளமை, தொடர்பாடல்களை இழந்துள்ளமை, ஆற்றுப்படுத்துவதற்கு ஆதரவின்றி தனித்து விடப்பட்டுள்ளமை போன்ற பல்வேறு பாதிப்புகளை எமது மக்கள் சுமந்து கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தம் முடிவுற்றதன் பின்னர், 2010ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் கற்றுவந்த வன்னிப் பிரதேச மாணவர்களிடையே ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் பிரகாரம், யுத்தத்தின் நேரடி தாக்கத்தினை அனுபவித்தவர்களாக 82 சத வீதத்தினரும், மரணப் பிடியிலிருந்து உயிர்த் தப்பியவர்களாக 67 சத வீதத்தினரும், குடும்ப உறுப்பினர்கள் – நண்பர்களை இழந்தவர்களாக 63 சத வீதத்தினரும், படுகொலைகளை நேரில் கண்டவர்களாக 43 சத வீதத்தினரும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களாக 23 சத வீதத்தினரும், கடத்தப்பட்டவர்களாக 23 சத வீதத்தினரும், சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்தவர்களாக 18 சத வீதத்தினரும், 76 சத வீதத்தினர் மனக் காயங்கள் கொண்டவர்களாகவும் கண்டறியப்பட்டனர்.

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இன்று 09 வருடங்கள் கழிந்தும், எமது மக்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி பாதிப்புகளின் வடுக்களிலிருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், அதற்கான உரிய முறையிலான ஏற்பாடுகள் எதுவுமே எமது மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவில்லை.

Related posts:


நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்க...
கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!