அனைத்து பிரச்சினைகளையும் பேசும் தளமாக தேசிய சபை அமையும். – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022

பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளோடு இருக்கும் எமது மக்களுக்கு மேலதிக பிரச்சினையாக  பொருளாதார பிரச்சினைகள்  உருவாகியுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் தேசிய சபை எண்ணக்கருவினை வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று(20.09.2022) இடம்பெற்ற தேசிய சபை தொடர்பான  விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது போலன்றி, மரத்திலிருந்து விழுந்தவனுக்குரிய அவசர, அவசியமான சிக்கிச்சைகளை அளிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு, எமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

நாட்டில் நிலவியிருந்த மிக இறுக்கமானதொரு காலகட்டம் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்ற போதிலும், அதன் சுவடுகள் இன்னமும் முழுமையாக விட்டகழாத நிலை தொடர்வதால் ஒரு பக்கத்தில் தலையாய பிரச்சினைகளை குறுகிய கால திட்டங்களைக் கொண்டு தீர்க்கின்ற அதேநேரம், நடுத்தர மற்றும் நீண்டகால நிலைபேறான திட்டங்களையும் வகுக்க வேண்டியிருக்கின்றது.

அந்த வகையில் இந்த ‘தேசிய சபை’ எண்ணக்கரு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இதில் எமக்கு மாறுபட்ட கருத்துக்கள் கிடையாதென்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுத்தல், பொருளாதார நிலைத்தன்மைக்கான வேலைத் திட்டங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகளை எட்டுதல், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், தேசிய சபை, விசேட செயற்குழுக்களின் தலைவர்கள், இளைஞர், யுவதிகள் சார்ந்த அமைப்புகளின் கண்காணிப்பாளர்கள் போன்ற துறையினரை கலந்து கொள்ளச் செய்கின்ற விசேட கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை எவ்வித பக்கசார்பும் அற்ற முறையில் முன்னெடுக்க முடியுமென நான் நம்புகின்றேன்.

இந்த உயரிய நோக்கத்தின்பால் செல்வதற்கு இச் சபையில் அங்கத்துவம் பெறுகின்றவர்கள் சுயலாப அரசியலைவிட்டு, இன்றைய எமது நாட்டு நிலைமையை, மக்களது நிலைமையை முதன்மைப்படுத்தி, அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வருவார்கள் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

எமது மக்கள் ஏராளமான பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். அன்றாடப் பிரச்சினை, அபிவிருத்தி தொடர்பான பிரச்சினை, அரசியல் உரிமை தொடர்பிலான பிரச்சினை. அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினை, காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான பிரச்சினை, சொந்த காணி, நிலங்கள் கைக்கெட்டாமை தொடர்பான பிரச்சினைகள், பல்வேறு அரச திணைக்களங்களால் காணி, நிலங்கள் எல்லையிடப்படுகின்ற பிரச்சினைகள் என பிரச்சினைகளையே வாழ்க்கையாக கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு பத்தோடு பதினொன்றாக பொருளதாரப் பிரச்சினை, அதன் மூலமான அத்தியாவசிய பொருட்கள் உட்பட பொருட்களின் விலையேற்றங்கள், வேலைவாய்ப்புகள் இன்மை, தொழில் வாய்ப்புகள் இன்மை போன்ற பிரச்சினைகளும் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரச்சினைகள் யாவும் முன்னுரிமை வழங்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள். எனினும், இவற்றிலும் முன்னுரிமை வழங்கப்பட்டு, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை முதன்மைப்படுத்த வேண்டியிருக்கிறது.

முதலாம் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடரும் திரைப்படங்கள் போல், மீண்டும் இங்கே ஜெனீவா காட்சிகள் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இங்கே எமது மக்களுக்கு தும்மல் வந்தாலும் சர்வதேசத்திடம் செல்வோம், சர்வதேசம் தலையிட வேண்டும், சர்வதேசத்தை நம்புகின்றோம் என்றெல்லாம் கதைவிடுகின்ற தமிழ் அரசியல் தரப்பினர், சர்வதேசம் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கின்றனர்.

எமது பிரச்சினைகளுக்கு உள்ளகப் பொறிமுறையே சிறந்தது என நாம் நம்புகின்றோம். அதுவே காத்திரமாக இருக்கும். உண்மைத் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

சக தமிழ் இயக்கங்களின் அரசியல் கட்சிகள் அதாவது, புலிகள் இயக்கம் சார்ந்ததாகக் கூறப்படுகின்ற – கூறுகின்ற பல குழுக்கள் இருப்பினும் அவை அரசியல் கட்சிகளாக பதிவில் இல்லாத காரணத்தால், ஏனைய சக இயக்கங்களினது அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள்,  உறுப்பிர்கள் எனப் பலரும் கொல்லப்பட்டமை புலிகள் இயக்கத்த தலைவர் பிரபாகரனால்தான் என்பதை இங்கு சுய புத்தி உள்ள எவரும் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.

அவ்வாறு தமது தலைமைகளையும் சகாக்களையும் கொலை செய்தவர்களின் நினைவு கூறல்களை போட்டி போட்டுக் கொண்டு  கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இவர்கள், எமது மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த வகையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளப் போகின்றார்கள் என்பது சந்தேகத்திடமாகவே இருக்கின்றது.

எனவே, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம் தொடர்ந்து கோட்டை விட்டுக் கொண்டிருக்காமல், எமது மக்களின் இக்கட்டான நிலைமைகளின் முன்பாக, எமது மக்களுக்கு ஏதாவது நல்ல வகையில் உதவ முன்வர வேண்டும்.  அல்லது உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை, எமது மக்களுக்கு மேலும், மேலும் இடர்களை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டுமெனத் தமிழ்த் தரப்பின் அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

000

Related posts:

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அறிக்கை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிக்கப்பட்ட...
மாகாணசபை தேர்தல் மழையில் முளைத்த அரசியல் காளான்கள் - சத்தியலிங்கத்திற்கு ஈ.பி.டி.பி விளக்கம்!
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...