அதிகரித்து வரும் வாகன விபத்துக் குறித்து அவதானம் செலுத்தவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, February 21st, 2018

கடந்த வருட புள்ளிவிபரங்களைப் பார்க்கின்றபோது வீதி விபத்துகள் காரணமாக 935 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அந்த வகையில் கடந்த சில வருடங்களைப் பார்க்கின்றபோது வருடமொன்றுக்கு சுமார் 100 பாதசாரிகள் முறையாக வீதி ஒழுங்குகளைப் பின்பற்றி பாதசாரிகளுக்கான கடவைகளின் ஊடாகப் பயணஞ் செய்கையில் முறையற்ற வாகன சாரதிகளால் கொல்லப்படுவதாகவும் சுமார் 1000 பேர் வரையிலான பாதசாரிகள் காயமடைவதாகவும் தெரிய வருகின்றது – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான கட்டளை 203ஆம் அத்தியாயம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

மோட்டார் போக்குவரத்து தொடர்பில் கருத்து கூறுகின்றபோது, எமது நாட்டில் நாளாந்தம் அதிகரித்து வருகின்ற வாகன விபத்துகள் குறித்தே மிக முக்கிய அவதானத்தைச் செலுத்த வேண்டியிருக்கின்றது.

அந்த வகையில் கடந்த வருடத்தில் மாத்திரம் சாரதிகள் மற்றும் பாதசாரிகளினால் வீதி ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்காததன் காரணமாக சுமார் 40 ஆயிரம் வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதற்கு மேலதிகமாக 2922 வீதி வாகன விபத்துகளில் 3100 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் சுமார் 7500 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

பொலிஸ் தலைமையக வாகனப் பிரிவின் மூலமாக வீதிச் சட்டங்களை முறையாக கடைப்பிடிக்காதோர் குறித்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது சுமார் 1 இலட்சம் பேர் அடையாளங்காணப்பட்டதாகவும் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சிக்காதோர் மேலும் பலர் கடந்த வருடத்தில் இருந்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ள மேற்படி அறிக்கையானது கடந்த வருடத்தில் வீதிச் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1 இலட்சத்து 40 ஆயிரம்பேருக்கு தண்டப் பணம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது.

இத்தகைய வீதி விபத்துக்களைப் பார்க்கின்றபோது எமது நாட்டில் நாளாந்தம் சுமார் 10 பேர் வீதமாக வீதி வாகன விபத்துகளால் உயிரிழப்பதுடன் சுமார் 20 பேர் வரையில் அங்கவீனமாக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது மேற்படி விபத்துகள் காரணமாக வருடத்திற்கு சுமார் 20 பில்லியன் ரூபா மருத்துவ செலவாக அரசு செலவிட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: