அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வரும்வரை அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

எமது மக்களிடம் ஏற்கனவே இருந்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல இருக்கின்றபோது மேலும், மேலும் பல்வேறு பிரச்சினைகள் சேர்ந்துகொள்வதனால் எமது மக்களின் எதிர்காலம் என்பது வெறுமனே பிரச்சினைகளுடன் மாத்திரம் நிறைந்து விடுமோ? என்ற அச்சமே எமக்குள் எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கடை, அலுவலக ஊழியர்கள் – ஊதியம் மற்றும் ஊழியம் ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டமூலம், மகப்பேற்று நன்மைகள் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த கால யுத்தம் மற்றும் பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சமூகமான எமது மக்களை, இந்த நாட்டின் ஏனைய மாகாண மக்களுக்கு சமாந்திரமான வகையில் அடிப்படை உரிமைகள் முதற்கொண்டு, அரசியல் உரிமைகள் வரையில் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, இந்த நாட்டில் கௌரமிக்க பிரஜைகளாகக் கட்டியெழுப்புகின்ற நோக்கிலேயே நாம் செயற்பட்டிருந்தோம். அந்த வகையில் எமது மக்களை பொருளாதார ரீதியில் வலுவுள்ள நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே நாம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம்.
ஆனால், துரதிஸ்டவசமாக எமது மக்களுக்கு பொய்க்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள், இந்த நாட்டில் இன்றும் பாரிய கேள்விக்குறியாகவே இருக்கின்ற அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில், எமது மக்களின் ஏனைய தேவைகள் எதுவும் தீர்க்கப்பட மாட்டாது எனக் கூறியே காலத்தை நகர்த்தி வருகின்றனர்.
எமது மக்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் தீர்வுக்கு மட்டுமே வாக்களிக்கவில்லை. இந்த அரசியல்வாதிகள் ‘அரசியல் தீர்வுக்கு மாத்திரமே வாக்களியுங்கள்’ என எமது மக்களிடம் கோரியிருக்கவுமில்லை. பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள். அந்தவகையில், சொந்த காணி, நிலங்களை விடுவித்துத் தருமாறு எமது மக்கள் வாக்களித்தனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்துத் தருமாறு கோரி வாக்களித்தனர். காணாமற்போன உறவுகளைக் கண்டறிவதற்கு வழிகோரி வாக்களித்தனர். தங்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி புனர்வாழ்வு பெற்ற முன்னாள் இயக்க உறுப்பினர்கள் வாக்களித்தனர். குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கின்ற பெண்கள் வாக்களித்தனர். வேலைவாய்ப்புகளற்றோர், தங்களுக்கு வேலைவாய்ப்புகள் கோரி வாக்களித்தனர்.
இவ்வாறு வாக்களித்த எமது மக்கள் அனைவரையும் இன்று நடுத் தெருவில் போராட விட்டுவிட்டு, இந்த அரசியல்வாதிகள், எமது மக்களால் வழங்கப்பட்ட அரசியல் பதவிகளில் இருந்து கொண்டு, சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். எமது மக்களின் துன்ப, துயரங்களை புலம்பெயர் உறவுகளுக்கு வெளிப்படுத்தி, புலம்பெயர் உறவுகளிடமிருந்து பாரியளவில் பணம் பெறுகின்ற ஒரு சிலர், அந்தப் பணத்தை எமது மக்களின் நலன்சார்நது பயன்படுத்தாமல், தங்களது சொகுசு வாழ்க்கைக்கு மாத்திரம் பயன்படுத்தி, எமது மக்களின் கஸ்டங்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.
Related posts:
மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது - சக்தி தொலைக்காட்ச...
மயிலிட்டி குளத்தடி தேவியார்கொல்லை கண்ணகை அம்மன் ஆலய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ...
வழங்கப்படும் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு - அம...
|
|
நீடித்த மகிழ்ச்சிக்காக நிரந்தர ஒளியேற்ற புது நிமிர்வுடன் உழைப்போம் : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...
கடற்றொழில் துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோ...
பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணை...