பொது வேலைத்திட்டத்திற்கு தயார் – டக்ளஸ் தேவானந்தா

விடுதலைப்போராட்டத்தில் பொதுவேலைத்திட்டத்திற்கு விடுத்த அழைப்பு நிராகரிக்கப்பட்டபோதும் அரசியலமைப்புக்கான செயற்பாட்டில் தமிழ் பேசும் பிரதிநிதிகளுடன் பொதுவேலைத்திட்டத்தில் செயற்பட தயாராகவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவரது நேர்காணல் தொடர்பான முழுமையான விபரத்தை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.
விடுதலைப்போராட்டத்தில் பொதுவேலைத்திட்டத்திற்கு விடுத்த அழைப்பு நிராகரிக்கப்பட்டபோதும் அரசியலமைப்புக்கான செயற்பாட்டில் தமிழ் பேசும் பிரதிநிதிகளுடன் பொதுவேலைத்திட்டத்தில் செயற்பட தயாராகவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு விடயம், ஈ.பி.டி.பி மீதான குற்றச்சாட்டுக்கள், எதிர்கால செயற்பாடுகள், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக கேசரிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- பாராளுமன்றம் அரசியல மைப்பு சபையாக மாற்றப்பட்டு வழிந டத்தும் குழுவில் நீங்கள் அங்கத்தவ ராக இருக்கின்றீர்கள். உங்களுடைய வகிபாகம் எவ்வாறு அமையவுள்ளது?
பதில்:- பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு முதலாவது அமர்வு இடம்பெற்றதென்பது வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியதொரு விடயமாகும். இலங்கை–இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னதாக மாறிமாறி ஆட்சியில்அமர்ந்த அரசாங்கங்கள் பேரினவாதத்தன்மையுடனேயே செயற்பட்டன.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் தென்னிலங்கைத்தலைமைகள் குணாம்ச ரீதியான மாற்றத்துடன் செயற்பட ஆரம்பித்தன. துரதிர்ஷ்ட வசமாக அவ்வப்போது தமிழ் மக்களின் தலைவர்கள் எனக்கூறிக்கொண்டவர்களின் தவறான வழிநடத்தல் காரணமாக எமது மக்கள் முள்ளிவாய்க்கால் வரையில் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. எண்ணிலடங்கா அழிவுகள், சொல்லிலடங்கா துன்பங்கள் துயரங்களை சுமக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். அத்தகைய தருணங்களில் பிரதான எதிர்க்கட்சி எதிர்ப்பது என்பதற்கு அப்பால் தமிழ்த் தலைமைகள் அதனை எதிர்த்தும், எரித்தும் தட்டிக்கழித்தன.
தற்போதைய தேசிய அரசாங்கம் அவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது. ஆகவே கடந்த காலத்தில் நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் இவ்வாறானதொரு விடயத்தில் பங்களிக்கக்கூடிய வகையிலான பொறுப்பு எனக்கு காணப்படவில்லை. தற்போது வழிநடத்தல் குழுவில் நான் அங்கத்துவ உறுப்பினராகியுள்ள நிலையில் மக்கள் சார்ந்த பாரிய பொறுப்பு என்னிடத்தில் உள்ளதென்பதை நான் நன்கு உணர்கின்றேன்.
இந்நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து தமிழ்த் தலைமைகள் தொடர்ச்சியாக இழைத்து வந்த தவறுகளுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை வழங்கி இடமளிக்காத வகையில் தற்போது வழிநடத்திச் செல்வேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
கேள்வி:- தமிழ் மக்களின் அபி லாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய முக்கிய விடயங்கள் எவையெனக் கருதுகின்றீர்கள்?
பதில்:- தற்போது அரியசந்தர்ப்பம் எமக்கு கிட்டியுள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பங்களிப்பின்றியே அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறான நிலையில் இம்முறை தமிழ் மக்களின் பங்களிப்பும் உள்வாங்கப்படவுள்ளது.
எமது மக்களுக்கான அபிலாஷைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒளிமயமான பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பதே விடுதலைப்புலிகளுக்கும் எமக்கும் இலக்காக இருந்தன. அந்த இலக்கில் பாரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால் அதனை அடைந்துகொள்வதற்கான பாதையில் வேறுபாடுகள் காணப்பட்டன. ஆயுதப்போராட்டம், வன்முறை எனச் சென்று முள்ளிவாய்க்காலில் முடிந்துள்ளது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் பாராளுமன்ற ஜனநாயக வழிமுறையூடாகவே தீர்க்கலாம் என்ற நம்பிக்கையிலேயே நாம் ஆயுதப்போராட்டத்திலிருந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருந்தோம்.
அன்றைய காலத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகளாகவிருந்த கிட்டு, திலீபன் போன்றவர்களுடன் கலந்துரையாடும்போது நாம் பொது வேலைத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயற்பட்டு நாட்டையும் மக்களையும் விடுவிப்போம். இந்திய அமைதிகாக்கும் படையுடன் யுத்தம் புரிவதை விடுத்து அவர்களுடன் அரசியல் ரீதியாக பேச்சுக்களை நடத்தி எல்லையோரங்களுக்கு அனுப்பிவைப்போம்.
அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய கொள்கைகளையும் நாங்கள் எங்களுடைய கொள்கைகளையும் மக்களிடத்தில் முன்வைப்போம். மக்கள் யாரைத் தெரிவு செய்கின்றார்களோ அவர்கள் ஆளும் அதிகாரத்தை பெறுவார்கள் எனக்கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களை நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றார்கள் என்பதை கூறி வழிமுறையை மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்திய போது எமக்கு துரோகிப்பட்டம் சூட்டினார்கள். ஈற்றில் நாம் எச்சரித்தது போன்றே இடம்பெற்றிருந்தது.
தமிழ் தலைமைகளாக தங்களை அடையாளம் காட்டுபவர்களும் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண் டும். அவர்களும் பிழையான வழிநடத்தலையே கொண்டிருந்தார்கள். இணக்க அரசியல் ஊடாகவே தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியுமென நாம் தெளிவாக குறிப்பிட்டபோது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
தற்போதைய ஆட்சியாளர்களுடன் இணக்க அரசியலிலேயே உறவுகளை வைத்திருக்கின்றார்கள். எதிர்க்கட்சி பதவியாகவிருக்கலாம், குழுக்களின் பிரதித்தலைவர் பதவியாக இருக்கலாம், இணக்க அரசியலின் ஊடாகவே பெறப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக தற்போது கூட மக்களின் விடயங்களில் அவர்கள் அதீத அக்கறை கொண்டிருப்பதாக தெரியவில்லை. பதவிகள் மூலம் தமது தனிப்பட்ட விடயங்கள், நலன்களிலேயே அக்கறை கொண்டவர்களாக இருக்கின்ற நிலைமையே காணப்படுகின்றமை கவலைக்குரியதாகும்.
கேள்வி:- அரசியல் தீர்வுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இரு வேறுபட்ட நிலைமைகள் காணப்படு கின்றதே?
பதில்:- அரசியல் தீர்வு என்ற விடயத்தினை கருத்திற்கொள்ளும்போது தென்னிலங்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அதிகாரப்பகிர்வு அமையவேண்டும். அதற்காக விட்டுக்கொடுத்துச் செல்வதோ அல்லது சரணாகதியடைவதோ என்று அர்த்தமாகிவிடாது.
தற்போதைய தமிழ் தலைமைகளின் கடந்த காலச் செயற்பாடுகளால் தென்னிலங்கையின் நம்பிக்கையை முற்றாக இழந்துள்ள நிலைமையே உள்ளது. தற்போதைய நிலையில் ஒற்றையாட்சி என்றால் தமிழ் மக்களுக்கு பேயைப் பார்ப்பது போன்றுள்ளது. சமஷ்டியென்றால் சிங்கள மக்களுக்கு பேயைப் பார்ப்பது போன்றுள்ளது.
ஆகவே எம்மைப்பொறுத்தவரையில் ஒற்றையாட்சி, சமஷ்டி போன்ற அதிகாரப்பகிர்வு தொடர்பான சொற்பதங்களை பயன்படுத்துவதாலோ பயன்படுத்தாது விடுவதாலோ பாரிய பிரச்சினை காணப்படுமென கருதவில்லை. ஆனால் அதிகாரங்களால் மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படாதவகையிலும், ஐயப்பாடுகள் உருவாகாத வகையிலும் மீளப்பெறப்படாத வகையிலும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவை உறுதியானதாக அமையவேண்டுமென்பதே முக்கியமானதாகின்றது.
கேள்வி:- விடுதலைப் போராட்ட காலங்களில் பொது வேலைத்திட் டத்தில் செயற்பட விழைந்த தாங்கள் தற்போது புதிய அரசியலமைப்பு உரு வாக்கத்தில் தமிழ் பேசும் சமூகத்தின் சார்பில் பொதுவான கட்டமைப்பில் செயற்படுவதற்கு முன்வருவீர்களா?
பதில்:- தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சியானது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமெனக் கூறுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென்றே கூறுகின்றது. இதில் குழப்பமான நிலையொன்று காணப்படுகின்றது.
எமக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பிரதானமாக அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை ஆகிய 2 விடயங்களிலேயே பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. எதுஎவ்வாறிருப்பினும் நான் பொதுவேலைத்திட்டம் குறித்து நிச்சயமாக அனைத்து தமிழ்பேசும் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
முன்னதாக தேர்தல் முறைமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அவ்வாறான நிலையில் நான் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக எதிர்காலத்தில் பொதுவேலைத்திட்டத்தில் செயற்படுவது குறித்து ஏனைய தமிழ் பேசும் தரப்புக்களுடனும் பேசுவேன்.
நான் கடந்த அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்திருந்தாலும் கூட எனக்கு அரசியல் ரீதியான அதிகாரம் அதிகளவில் காணப்பட்டிருக்கவில்லை. கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்தி எமது மக்களுக்கு தேவையானவற்றை முறையாக வழங்கியிருந்தோம். தற்போது நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. சிறந்த களம் காணப்படுகின்றது. யுத்தம் செய்த அரசாங்கத்திடம் பெரிதாக எதனையும் எதிர்பார்க்க முடியாது.
அவ்வாறான நிலையில் கடந்த காலங்களைப்போன்று சந்தர்ப்பங்களை தொடர்ந்தும் தட்டிக்கழிப்பதற்கு இடமளிக்காது வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக உரிய பொறிமுறைகள் ஊடாக முறையான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டிய தார்மீக பொறுப்பு எனக்குள்ளது. அதன்பால் அரசியலமைப்பு விடயத்தில் எனது செயற்பாடுகள் அமைந்திருக்கும்.
அரசியலமைப்புக்கான வழிநடத்தும் குழுவிலுள்ள 21 பேரில் அரசாங்கத்தரப்பு தவிர்ந்து 7 தமிழ் பேசும் பிரதிநிதிகள் காணப்படுகின்றார்கள். அவர்கள் அனைவருடனும் கலந்துரையாடலை நடத்தி இணைந்து செயற்படுதற்கு தயாராகவுள்ளேன்.
கேள்வி:- பரணகம ஆணைக்கு ழுவின் வடக்கு அமர்வுகளின் போதும் உங்கள் அமைப்பின் மீது குற்றச்சாட் டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள அதே நேரம் ஆணைக்குழுவின் தலைவரும் விசாரணைகள் மேற்கொள்ளப்படு மெனவும் பகிரங்கமாகவே கூறியுள் ளாரே?
பதில்:- நடராஜா ரவிராஜ், தியாகராஜா மகேஸ்வரன், லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்ற அனைவரினதும் சம்பவங்கள் தொடர்பாக எம்மையே குற்றவாளிகளாக கூறினார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் படுகொலையைத் தவிர அனைத்து அரசியல் கொலைகளையும் எமது தலைகளிலேயே சுமத்தினார்கள். ஆனால் தற்போது அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் படிப்படியாக இனங்காணப்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று தான் காணாமல்போனோர் விடயத்திலும் எம்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள். உண்மையிலேயே சாட்சியங்கள் வழங்கப்படுகின்றபோது எம்மீது குற்றச்சாட்டுக்களை வழங்குபவர்களிடத்தில் விரிவாக விசாரணைகளை செய்வதில்லை. பொலிஸாரிடம் ஏன் முறைப்பாடுகளை செய்யவில்லை எனக்கோருவதில்லை. கடந்த காலத்தில் நான் அமைச்சராக இருந்ததன் காரணத்தால் பொலிஸாரிடத்தில் முறையிடுவதற்கு அச்சமடைந்தோமெனக் காரணம் கற்பித்தாலும் தற்போது ஆணைக்குழுவின் முன்னிலையில் பகிரங்கமாக கூறிய பின்னராவது பொலிஸாரிடத்தில் முறையிடலாம் அல்லவா?
அதேநேரம் எமது அமைப்பு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்ததன் பின்னர் நான் சில விடயங்களை அங்கத்தவர்களிடத்தில் கூறியிருக்கின்றேன். குறிப்பாக விடுதலைப்புலிகளுடன் எவ்விதமான உறவுகளையும் வைக்காதீர்கள் என்று கூறியுள்ளேன். உங்களுடைய சகோதரன் அவ்வமைப்பில் இருந்தாலும் கூட அவர்களுடனான பழக்கத்தை கைவிடுங்கள் என்றே கூறினேன். காரணம் விடுதலைப்புலிகளுடன் உறவுகளை பேணினால் அவர்களின் காலைச்சுற்றிய பாம்பாக மாறி ஈற்றில் அவர்களின் இலக்காகவிருக்கும் என்னிடத்தில் வருவார்கள். ஆகவே அவ்வாறான விஷப்பரீட்சைக்கு செல்லவேண்டாமென்று கூறினேன். அதேபோன்று இராணுவத்துடன் தோளில் கைபோடுமளவிற்கு செல்லவேண்டாமென்றும் அறிவுறுத்தியிருந்தேன். அதனைத்தவிர ஏனைய அனைத்து அமைப்புக்களுடனும் உறவுகளை வைத்திருப்பதற்கோ, பேசிப்பழகுவதற்கோ நான் தடைவிதித்தது கிடையாது.
எனக்கு தெரிந்தவகையில் எமது அமைப்பின் உறுப்பினர்கள் எவ்விதமான தவறுகளைச்செய்வதற்கும் இடமளித்தது கிடையாது. அவ்வாறு செய்திருக்கின்றமை கண்டறியப்படுமிடத்து உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டம் ஒழுங்கு, நீதித்துறை சுயாதீனமாக தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இடமளித்துள்ளேன். அதற்கு பல உதராணங்கள் உள்ளன.
ஆகவே குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் அது தொடர்பில் பொலிஸாரிடத்தில் முறையிடாதிருப்பது ஏன்? அவர்கள் முறையிட்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கு நான் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால் அவ்விசாரணைகள் அரசியல் ரீதியிலான பழிவாங்கலாக அமையாது சுயாதீனத்தன்மையுடன் பக்கச்சார்பற்றதாக இருக்கவேண்டும்.
அதேபோன்று ஆணையாளர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.மீது விசாரணை நடைபெறுமென கூறியிருக்கின்றார். ஆனால் ஏனைய அமைப்புக்கள் தொடர்பாக எதனையும் கூறவில்லை. நான் பல தடவைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி எம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு நேரத்தை கோரியபோதும் அதனை வழங்கவில்லை.
மேலும் எமது அமைப்பு மட்டும் விசாரணை செய்யப்படுமென கூறுகின்றார். அவர் சாட்சியங்களிடத்தில் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அறிக்கையொன்றையே சமர்ப்பிக்கவேண்டியுள்ளது. அவ்வாறான நிலையில் விசாரணை செய்யப்படுமென்ற கூற்றை எவ்வாறு கூறமுடியும்? அதேநேரம் எமது அமைப்பின் மீது மட்டும் விசாரணை செய்யப்படுமெனக் கூறுவதால் ஆணையாளரும் அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றாரா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகின்றது.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியுடனான பேச்சுவார்த்தை எவ்வாறமைந்தது?
பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை எமது கட்சியுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை, அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக எங்களால் வென்றெடுக்க முடியாத விடயங்களை நாம் தெளிவுபடுத்தினோம். முன்னர் எமது கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருந்த அடிப்படைவாத சக்திகள் தற்போது இல்லாத நிலையில் அவற்றை பரிசீலித்து எதிர்கால நல்லிணக்கப்பயணத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராய்ந்திருந்தோம். இந்நிலையில் தொடர்ந்தும் அது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- வடக்கு, கிழக்கில் முன் னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டம், சம்பூர் அனல் மின் நிலையம் போன்றவற்றில் காணப்படும் சர்ச் சைகள் குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- எமது மக்கள் நீண்டகாலமாக நலன்புரி முகாம்களில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் இருக்கின்றார்கள். தற்போது அவர்கள் தங்கியிருக்கும் நலன்புரி முகாம்களின் நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் அதனை மீளப்பெற்றுக்கொள்வதற்கும் முயற்சிக்கின்றார்கள். ஆகவே அவர்களை மீண்டும் தமது சொந்த நிலத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அவ்வாறானவர்களுக்கு தற்காலிகத்தீர்வாக 65ஆயிரம் வீட்டுத்திட்டம் இருக்கின்றது. கொட்டில்களிலும், குடிசைகளிலும் வாழ்ந்தவர்களுக்கு இவ்வாறான வீடுகள் சொர்க்கலோகத்திற்குச் சமமானவை. தற்போது 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் 65ஆயிரம் வீடுகள் மக்களுக்கு கிடைக்காது போனால் மத்தியில் இணக்க அரசியலிலும் வடமாகாண ஆட்சி அதிகாரத்திலுமுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதற்கான பொறுப்பேற்க வேண்டியவர்களாக உள்ளனர்.
அதேநேரம் குறித்த வீட்டுத்திட்டத்தின் பிரகாரம் வீடொன்றுக்கு 21இலட்சம் செலவிடுவதற்கு பதிலாக எமது கலாசாரத்திற்கும் சூழலுக்கும் அமைவான நிரந்தர வீடுகளை அம்மக்களுக்கு அவர்களுடைய பூர்வீக நிலங்களில் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும். இந்திய வீட்டுத்திட்டத்தை எமது மக்களுக்காக பெற்றுக்கொடுத்ததில் எனது பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்போது வரையில் ஆக்கபூர்வமான அபிவிருத்தி திட்டங்களை கூட தமிழ்த் தலைமைகளால் பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளது.
அதேபோன்று தான் சம்பூர் அனல் மின்நிலைய விடயமும். மக்கள் பல கருத்துகளை தெரிவிக்கின்றார்கள். அது தொடர்பில் தமிழ்த்தலைமைகள் ஆராய்ந்து பதிலளித்திருக்கவேண்டும். இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்தியிருக்கவேண்டும். ஆனால் அதனைச் செய்வதற்கு தமிழ் தலைமைகள் தவறிவிட்டன என்பதற்கு அப்பால் இந்தியாவுடன் பேசுவதற்கு இவர்களுக்கு உள்ள அச்சமே காரணமாகவுள்ளது.
இந்தியா சம்பூர் அனல்மின்நிலைய திட்டத்தை ஒருபோதும் மாற்றாது. மாற்றுமாறு கோருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு கூட துணிவில்லை. அவ்வாறிருக்கையில் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைப்பதன் மூலம் அப்பிரச்சினைக ளுக்கான மாற்றீடுகளையாவது பெற்றுக்கொடுக்க முடியுமல்லவா?
(நன்றி வீரகேசரி)
Related posts:
|
|