நேசமிகு தமிழ் பேசும் எமது மக்களுக்கு!..

Saturday, January 27th, 2018

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்த எனது திடமான கருத்துக்களையும,; திட்டங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
நான் பதினைந்து வருடங்களுக்கு மேலான ஆயுத வழிமுறைப் போராட்டத்திலும், முப்பது வருடங்களுக்கு மேலான தேசிய அரசியல் வழிமுறைப் போராட்டத்திலும் முழுமையான அர்ப்பணிப்போடும,உண்மையான உழைப்போடும் இடையறாது ஈடுபட்டு வந்திருக்கின்றேன்.
எனது ஆயுத வழிமுறைப் போராட்ட காலத்தில் புலிகள் உட்பட அனைத்துப் போராட்ட இயக்கங்களுடனும் பொது இணக்கப்பாடு காணப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாக இருந்தது.
ஆனாலும,; அக்காலத்தில் எனது இயக்கத்திற்கு உள்ளிருந்தும்(ஈ.பி.ஆர்.எல்.எவ்), சக இயக்க தலைமைகளிடம் இருந்தும் உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் திசைக்கொன்றாக சிதறி நின்றன.
இலக்கு ஒன்றாக இருப்பினும், போராட்ட வடிவமும், போராட்ட வழிமுறைகளும் வேறுபட்டன. அது துரதிர்ஸ்டமே.
நான் அடைய முடியாத இலக்கு நோக்கி எமது மக்களை ஒருபோதும் வழிநடத்தியதில்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எமது மக்களுக்கு ஒருபோதும் வழங்கியதும் இல்லை.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவும், அதற்கு பின்னரான சூழலில் நாடாளுமன்றத்தில் எமது அரசியல் பலத்தின் ஊடாகவும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும,; வாழ்வியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் உண்மையாகவே உழைத்து வருகின்றேன்.
எல்லாக் காலத்திலும் நான் மக்களோடு வாழ்ந்து வருகின்றேன். அதனால், எமது மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கின்றேன்.
எனது ஆயுத வழிப்போராட்டத்தின் ஊடாகவும், தேசிய அரசியல் நீரோட்ட வழிமுறை ஊடாகவும் கிடைத்த அனுபவங்களில் இருந்தே, எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக நம்பிக்கையோடு தீர்வு காண முயற்சித்து வருகின்றேன். எனது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு தீர்வுகளை கண்டும் இருக்கின்றேன்.
இருந்தும், போதிய அரசியல் பலம் எம்மிடம் இல்லாததால் இன்னும் தீர்க்கவேண்டிய எமது மக்களின் பிரச்சினைகள் ஏராளம் எஞ்சியிருக்கின்றன. அதேவேளை, நிலையான அரசியல் தீர்வும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை.
மக்கள் எந்தளவிற்கு என்னைப் பலப்படுத்தி, நான் முன்னெடுக்கும் வழிமுறையை பின்பற்றுகின்றார்களோ அந்தளவிற்கு பிரச்சினைகளை தீர்த்து, உரிமைகளைப் பெற்று, கௌரவமான, சமத்துவமான வாழ்வை நோக்கி நாம் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
காலத்திற்குக் காலம் வாக்குகளை அபகரிப்பதற்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறியும், தமது இயலாமையினாலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விருப்பம் இன்றியும், அரசுகள் மீது மட்டுமே குறைகளை சுமத்தி, சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது.
மக்கள் மத்தியில் வாழாதவர்களாகவும், கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தாதவர்களாகவும், சந்தர்ப்பங்களை உருவாக்க விரும்பாதவர்களாகவும், அரசியல் அதிகாரங்களை மக்களின் நலனுக்காக வினைத்திறனோடு செயற்படுத்த இயலாதவர்களாகவும், தமிழர்கள் இரத்தமும், தசையுமாய் நடாத்திய உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்களாகவும், இன்று இணக்க அரசியலின் பெயரால் ஏமாற்று அரசியல் நடாத்தி கொண்டிருப்போருக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.
இந்த மாற்றத்திற்கு தலைமை ஏற்கும் தார்மீக பொறுப்பானது, இன்று என் மீதே சுமத்தப்பட்டுள்ளது. அதை நான் ஏற்கின்றேன்.
மாற்றுத் தலைமை என்பது இந்த மக்களோடு மக்களாக வாழாமல், மக்களுக்கு வெளியே இருந்து வருபவராகவோ, கடந்த காலத்தில் நாம் முன்னெடுத்த உரிமைக்கான போராட்டத்தை நேற்று வரை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்து, அதை தமது பிழைப்பிற்காக மாத்திரம் பயன்படுத்தி கொண்டவர்களாகவோ இருக்கமுடியாது.
மக்களோடு வாழ்ந்து, மக்கள் அனுபவித்த வலிகளிலும், துயரங்களிலும் பங்கெடுத்து, தாயக மண்ணின் தன்மையறிந்து, தேவையறிந்து செயற்படும் செயல் வீரரே மக்கள் தலைவராக திகழமுடியும்.
அன்புக்குரிய மக்களே!… கடந்த காலத்திலும் இது போன்று நிதர்சனமாக நான் முன்வைத்த கருத்துக்கள் உங்களை முழுமையாக வந்து அடையவில்லை. அதற்கு சில தடைகள் இருந்ததையும் நான் மறுக்கவில்லை.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும். இனி சரியான பாதையில் பயணிக்க அணிதிரண்டு வருவீர்கள் என்றும், வீணைக்கு வாக்களித்து உங்களை நீங்களே பலப்படுத்துவீர்கள் என்றும் நம்புகின்றேன்.
ஆற்றல் மிகு எங்கள் வழியில் உங்கள் வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்திட…
மாற்றத்தை நோக்கி செல்லும் ஏற்றதொரு வாய்ப்பாக இத்தேர்தலை பயன்படுத்திட…
இன்றே நிமிர்ந்தெழுங்கள்!
சாதித்த நம் கரங்கள் சரித்திரம் படைக்கும் நாளை!

வீணைக்கு வாக்களித்து விடியலைக் காணுங்கள்!

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!
எக்காலத்திலும் பிரிக்கப்பட முடியாத
வடக்கு கிழக்கு எங்கள் தாயக பூமி!….
ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வு!

என்றும் மக்கள் சேவையில்
டக்ளஸ் தேவானந்தா பா.உ
செயலாளர் நாயகம்,
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)

Related posts: