பணிப்பாளர்களின் தெரிவு காலம் தாழ்த்தியே நடைபெறுகிறது – கல்வியியலாளர்கள் விசனம்!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, தீவகம் ஆகிய வலயங்களில் கல்விப் பணிப்பாளர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் காலம் தெரிந்தும் குறித்த காலத்துக்குள் உரிய நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையின் ஏனைய மாகாணத்தில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஓய்வு பெறும் காலத்திற்கு 3 மாதங்களிற்கு முன்பே விளம்பரப்படுத்தி அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சைகளும் இடம்பெற்று ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரியிடம் இருந்து புதிய அதிகாரி பொறுப்பெடுப்பதாகவே பணிகள் இடம்பெறுகின்றன.
இருப்பினும் இந்த நடைமுறையானது வடக்கு மாகாணத்தில் மட்டும் இன்றுவரை காலம் கடந்த பணியாகவே காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபை உரிய கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே கல்வியில் ஏற்படும் தொய்வு நிலமையை சீர் செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேநேரம் இனிவரும் காலங்களில் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள அதிகாரிகள் தொடர்பிலாவது கல்வி அமைச்சு கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய நிலமையை சீர் செய்ய முடியும். நடப்பாண்டின் யூன் மாதத்துடன் மடுக் கல்வி வலயப் பணிப்பாளரும், நவம்பர் மாதத்தில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரும் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளதோடு டிசம்பர் மாதம் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரும் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளனர்.
இதேநேரம் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரின் வெற்றிடத்திற்கான நேர்முகப் பரீட்சை இன்றைய தினமே இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|