வெளிச்சமான பயணத்தில் மீண்டும் இருளுக்கு வித்திடுவது அவரவர் தத்தமக்கே கரி பூசிக் கொள்வது போன்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, February 9th, 2024

வெளிச்சமான பயணத்தில் கறுப்புக் கொடிகளைக் காட்டி, மீண்டும் இருளுக்கே வித்திடுவது, வரலாற்றில் அவரவர் தத்தமக்கே கரி அள்ளிப் பூசிக் கொள்வது போன்ற செயலாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றையதினம் (09.02.2024) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இச்சாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நாடாளுமன்ற உரை 09.02.2024 கௌரவ சபாநாயகர் அவர்களே

மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் கடந்த 07ஆம் திகதி, 9வது நாடாளுமன்றத்தின் 5வது கூட்டத் தொடரினை ஆரம்பித்து வைத்து, ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

‘பொருளாதார வீழ்ச்சி’ என்பதன் அதி கோரமான வேதனைகளை முழுமையாக அனுபவித்திருந்த எமது மக்களையும், இந்த நாட்டையும் மீட்டு, இன்று முன்னேற்றகரமான நிலையினை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்ற வழிகளை முன்னெடுத்து வருகின்ற இந்த நாட்டின் மீட்பர் என்ற வகையில், மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள், இந்த நாட்டு மக்கள் பட்ட துன்ப துயரங்களையும், இனிமேல் அனுபவிக்கப் போகின்ற நன்மைகளையும் ஒரு வரலாற்று அறிக்கையாக தனது கொள்கைப் பிரகடன உரையில் முன்வைத்திருக்கின்றார்.

‘நமக்கு நாமே விளக்குகளாவோம்’ என்ற புத்த பெருமானின் போதனையில் ஆரம்பித்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதை வரிகளையும் இணைத்து அவர் தனது கொள்கைப் பிரகடன உரையினை ஆற்றியிருந்தார்.

புறனானூற்றிலே கணியன் பூங்குன்றனாரின்  ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்து வருபவன் நான். இங்கு ‘நான்’ என்பதை ‘நாம்’ என மாற்றிட முடியுமானால், இந்த நாட்டில் நிறைய பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வுகளை எட்டிட முடியும் என நம்புகின்றேன்.

‘நான்’ எனக் கூறும்போது உதடுகள் ஒட்டாமல் பிரிந்தே இருக்கும். ‘நாம்’ எனக் கூறும்போதுதான் உதடுகள் ஒட்டியிருக்கும் என கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூறுவார்.

ஓற்றுமை என்பது முக்கியமானது. இதனையே மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

‘ஓன்றுபட்டால் உண்டு வாழ்வே. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே’ என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதை வரிகள். அதே நேரம், ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்றொரு பழமொழியும் தமிழில் உண்டு.

அரசியல் ஆதாயங்களை கருதாமல், இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்வைத்து மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் எடுத்து வருகின்ற அனைத்து முயற்சிகளுக்கும், இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தங்களது ஒத்துழைப்புகளை வழங்கினால், இந்த நாட்டினை வெகு விரைவாக அனைத்து துறை சார்ந்தும் முன்னேற்ற முடியும் என்பதை நாம் இன்று நடைமுறைச் சாத்தியமாக உணர்ந்து வருகிறோம்.

குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களையும், தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளையும் முன்னெடுத்து வருவதால் எவ்விதமான நலன்களும் இந்த நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ கிட்டப் போவதில்லை.

இந்த நாடு பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சிப் பெறவில்லை. முழுமையான மீட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இதன்போது வலிகள் – வேதனைகள் என்பன தவிர்க்க முடியாதவை. கரடு முரடான பாதையைக் கடக்க வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் எதிர்கொண்டாகவேண்டும்.

அந்த வகையில் இன்றும் எமது மக்களுக்கான வேதனைகள் இல்லாமல் இல்லை. வெளியில் தெரிகின்ற வகையிலும், வெளியே தெரியாத வகையிலும் எமது மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்க்கையினை முன்னெடுப்பதில் பல சிரமங்களுக்கு, பாதிப்புகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.

இன்று அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் தடையின்றி கிடைக்கப் பெற்றாலும், அவற்றின் விலைகளில் பாரிய அதிகரிப்புகள் காணப்படுகின்றன.

இன்னும் ஓரிரு வருடங்கள் இதனை சகித்துக் கொண்டால், ஒரு முன்னேற்றமான நல்ல நிலையினை நாம் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கையை மேனi;மதங்கிய ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகள் எடுத்துக் காட்டி வருகின்றன.

அந்த வகையில்தான் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும் எனப்தை நான் வலியுறுத்தி வருகின்றேன்.

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற அருணாசலக் கவிராயரின் பாடலைப் போல் எமது ஜனாதிபதி அவர்களது நிலைமை மட்டுமல்ல, எம் அனைவரதும் நிலைமை இருந்து வருகிறது.  நாம் பெற்ற கடனையும் அடைக்க வேண்டும், பெறுகின்ற கடன்களையும் அடைக்க வேண்டும். கம்பனின் பாடலைப் போல் தொடர்ந்தும் ‘இன்று போய் நாளை வா’ எனக் கூறிக் கொண்டிருக்க முடியாது.

இத்தகையதொரு நிலைமை நாட்டில் நிலவுகின்றபோது, பிச்சைக்காரன் பழைய புண்ணை மீண்டும் மீண்டும் தோண்டிக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே ஒரு சில தரப்பினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பிரச்சினைகளுக்கு முன்பாக வெறும் விமர்சனங்களையும், வியாக்கியானங்களையும் முன்வைத்து வருகிறார்களே அன்றி, பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நடைமுறைச் சாத்தியமான வழி விரிந்து வருகையில் அதில் பயணிப்பதற்கு முரண்டு பிடித்துக் கொண்டு நிற்கின்றனர்.

இந்த நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு தங்களது ஒத்துழைப்புகளை தருமாறு அனைத்துத் தரப்புகளிடமும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டினைப் பொறுப்பேற்ற காலம் முதல் கேட்டு வருகின்றார். தத்தமது அரசியல் நோக்கங்கள் கருதி ஆரம்பத்தில் இந்த அழைப்பினை புறந்தள்ளியிருந்த பலருள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நாட்டு நலன் கருதிய செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இன்று தங்களது ஒத்துழைப்புகளை வழங்கும் வகையில் செயற்பட்டும், கருத்துக்களை முன்வைத்தும் வருவது வரவேற்கத்தக்கது.

அதேபோல் ஏனைய அனைத்துத் தர்பபினரும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுடன் இந்த பயணத்தில் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை மிக அதிகளவில் வலியுறுத்தி வருகின்றவர்களில் நாங்களும் உள்ளடக்கம். தேசிய நல்லிணக்கத்தின் மூலமே எமது அன்றாட பிரச்சினை முதல் அரசியல் பிரச்சினை வரையில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள இயலும் என்பதில் நம்பிக்கை வைத்து, இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின் நாம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டோம்.

அந்த வகையில் எமது அனைத்துப் பிரச்சினைகiயும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளக்கூடியதொரு காலம் மீண்டும் கனிந்து வந்துள்ளதாகவே எனது அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்டுள்ளேன்.

ஒரு பக்கத்தில் இந்த நாட்டின் பொரளாதார மீட்சிக்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன், தேசிய நல்லிணக்கம் கருதிய மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது முயற்சிகளும் பாராட்டத்ததக்கதாகவே இருக்கின்றன.

அண்மையிலே வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்த அவர், எமது மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது தொடர்பில் காட்டிய அக்கறையினை நாம் மறந்துவிட முடியாது.

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றவர்.

இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து இன மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் மிக நன்றாகவே அறிந்து வைத்திருப்பவர். சர்வதேச உறவுகள் தொடர்பில் இறுக்கமான இணைப்பு கொண்டவர்.

இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களாக, இந்த நாட்டு மக்கள் மீது பற்றுடையவர்களாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றவர்கள், உண்மையிலேயே அத்தகைய அக்கறையும், பற்றும் இருப்பின் இந்த நாட்டை மீட்டெடுக்கின்ற மேனமைதங்கிய ஜனாதிபதி அவர்களது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும்.

ஓன்றுமில்லாத ஒரு காலகட்டத்தில், ஒன்றுமில்லாததற்காக திரண்டிருந்தவர்கள், எல்லாம் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் அவற்றை நியாயமான விலைகளில் பெறுவதற்கான வழிகளை அமைப்பதற்கு முன்வர வேண்டும்.

பிரச்சினைகளை தீர விடாமல் வழி பார்த்துக் கொண்டு, அதையே ஊதி, ஊதி பெருப்பித்துக் கொண்டிராமல், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்ற நிலையில், அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக முன்வர வேண்டும்.

போகின்ற வழி கடுமையானது எனினும், போய்ச் சேர்கின்ற இடம் இனிமையானது. இதில் நாம் அனைவரும் பங்கேற்றால் நமக்கு நாமே விளக்காவது போல் இந்த நாடு நமக்கு விளக்காகும்.

இந்த வெளிச்சமான பயணத்தில் கறுப்புக் கொடிகளைக் காட்டி, மீண்டும் இருளுக்கே வித்திடுவது, வரலாற்றில் அவரவர் தத்தமக்கே கரி அள்ளிப் பூசிக் கொள்வது போன்ற செயலாகும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்துக் கொண்டே, தாங்கள் மட்டும் அரசாங்கத்தின் பின்பக்கக் கதவினால் நுழைந்து சுய ஆதாயம் பெறுகின்றவர்கள், எமது மக்களுக்கான அரசாங்கத்தின் முன்பக்கக் கதவினை அடைத்துக் கொண்டு நிற்பது வேதனைக்குரிய விடயமாகும்.

எனவே, ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் சுயலாபம் என்ற சொல்லை விடுத்து, எமது மக்களுக்கான பொதுலாபம் என்ற ரீதியில் செயற்படுவதற்கு முன்வர வேண்டும்.

இத்தகைய எமது மக்கள் நலன் கருதிய இலக்கானது எமது ஜனாதிபதி மேன்மதங்கிய ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களது காலத்திலேயே எட்டப்பட வேண்டும்.

அது எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அரசியல் தீர்வுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி.

இந்த காலகட்டத்ததை நாம் தவற விடுவோமானால், மீளவும் இத்தகையதொரு பொன்னான காலத்தை நினைத்துப் பார்க்க இயலாது என்றே கருதுகிறேன்.

தேர்தல்களில் நாங்கள் தனித்தனியே போட்டியிடுவோம். நாட்டைக் கட்டி எழுப்புவதில் ஒன்றிணைவோம் என்ற மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது அழைப்பினையே நான் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த நாடு அனைத்து நிலைகளிலும் வீழ்ந்திருந்த நிலையில், இந்த நாடு இத்தனைக் குறுகிய காலத்துள் இந்தளவு எழுந்திருக்கும் என எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள். அது இன்று சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டி வருகின்ற மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால், எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்றில்லை. அவருக்கு எமது அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்புகள் முழுமையாக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் அவை அனைத்தும் சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.அந்த நம்பிக்கையை நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டு, விடைபெறு

Related posts:

ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
ரின்மீன் உற்பத்தியை விருத்திசெய்து ஏற்றுமதியை அதரிகரிக்க விரிவான நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப...

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்...
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...
வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்...