வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, March 25th, 2019

நாட்டில் தலைநகர் கொழும்பிலும், அதனை அண்டியப் பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில்  சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிட்டு வருவதாக அண்மையில் ஒரு தகவல்கள் குறிப்பிடுகின்றது. இங்கே, போக்குவரத்து வசதிகள் இருந்தும், வாகன நெரிசல்கள் காரணமாக இந்த நிலை இம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அதேநேரம், வடக்கு மாகாணத்திலே – குறிப்பாக வன்னிப் பகுதியிலே எமது மக்கள் போக்குவரத்து வசதிகளின்மை காரணமாக தங்களது வாழ்நாளில் பல வருடங்களாக வீதிகளில் நடந்தே காலத்தைக் கழித்து வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முல்லைத்தீவு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், சுமார் 124 பாடசாலைகள் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைக்குச் செல்வதற்கென போக்குவரத்து வசதிகள் இல்லை என்றே தெரிய வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இதே நிலைமையே காணப்படுகின்றது. இதன் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி அந்தப் பகுதிகளில் வாழுகின்ற மக்களும் போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமங்களை அடைந்து வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு சாலையினால் அதிகளவிலான வருமானங்களை ஈட்டுவதாகக் கூறும் நிலையில், வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் போதிய அக்கறை காட்டாத நிலைமை தொடர்ந்து கொண்டே வருகின்றது.

எனவே, வன்னிப் பகுதியில் குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊடான போக்குவரத்துச் சேவைகளை பொதுப் போக்குவரத்துச் சேவை என்ற அடிப்படையில், விரிவுபடுத்துவதற்கும், அதிகரிப்பதற்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதேநேரம், கொழும்பிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கியதான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான ஆசன முற்பதிவுகளை மேற்கொள்கின்றபோது, பயண அனுமதிச் சீட்டுக்கும், முற்பதிவுக்குமான கட்டணத்தைவிட அதி கூடிய நிதி பொது மக்களிடமிருந்து அறவிடப்பட்டு வருவதாக எமது மக்களிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இது தோடர்பில் கௌரவ அமைச்சர் அர்ஜூன ரனதுங்க அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

1997ஆம் ஆண்டு இலங்கைப் போக்குவரத்து சபை மக்கள் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கம்பனிகளாக்கப்பட்டு, பின்னர் 2005ஆம் ஆண்டு மீண்டும் கம்பனிகள் ஒன்றிணைக்கப்பட்டு, இலங்கை போக்குவரத்து சபையாக மாற்றப்பட்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட திருகோணமலை, கந்தளாய், அம்பாறை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை போன்ற இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இதுவரையில் பங்குகளுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் உடனடி அவதானமெடுத்து, மேற்படி பணியாளர்களுக்கான நட்டஈடுகளைப் பெற்றுக் கொடுப்பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அத்துடன், வடக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளில் கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கென அண்மையில் வழங்கப்பட்டிருந்த பதவியுயர்வுகளில் ஏற்பட்டிருந்த முறைகேடுகள் மற்றும் நியாயமற்றத்தன்மை தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்கு இச்சபையில் கொண்டு வந்திருந்தேன். எனினும், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வுகளில் எதுவித மாற்றங்களும் இன்றி தொடர்வதாகவே தெரிய வருகின்றது. இது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஒரு சுயாதீன விசாரணைக் குழு அமைத்து, நடவடிக்கை எடுக்கப்படுவதும் நல்லது என்றே தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதேநேரம், ஏ – 9 வீதியில் மிக அதிகளவிலான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மிக அதிகமாக தனியார் பேரூந்துகள் விபத்துகளில் சிக்குவதென்பது ஒரு வழக்கமாகி வருகின்றது. இது தொடர்பில் ஒரு பொறிமுறை அவசியமென்பதையே இத்தகைய விபத்துகள் உணர்த்துகின்றன. இரவு வேளைகளில் – அதிகமாக அதிகாலை வேளைகளில் இத்தகைய விபத்துகள் அதிகமாகி வருவதால், அதிக வேகமும், சாரதிகளின் நித்திரைக் களக்கமுமே விபத்துகளுக்குக் காரணம் எனவும் விசாரணைகளிலிருந்து வெளிப்படுத்தப்படுகின்றன. இதற்கு ஒரு தீர்வாக பாதையில் இடைக்கிடையே போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் என்ன விடயத்தில் அக்கறை காட்டுகின்றார்களோ தெரியவில்லை, ஆனால் விபத்துகளுக்கு குறைபாடில்லை. எனவே, இது தொடர்பில் எடுக்;கக்கூடிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் ஆராய்ந்து ஒரு முடிவு எட்டப்படல் அவசியமாகின்றது.  

இந்த நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையின் இன்னொரு முக்கியத் துறையான இரயில் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தும் இந்த நாட்டில் நிறையவே பிரச்சினைகள் இருப்பதையே காணக் கூடியதாக இரக்கின்றது.

தற்போது இருக்கின்ற இரயில் சேவையினை முதலில் ஒழுங்குபடுத்துகின்ற பணிகள் தேவை. அதாவது, இரயில்களின் பராமரிப்பு தொடர்பில் கேள்விக் குறியானதொரு நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. சுத்தம் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் முற்றிலும் அற்ற நிலையிலேயே பல இரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என மக்கள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர். உரிய  காலத்திற்குக் காலம் பழுதுபார்க்கப்படாத நிலையிலேயே இரயில் பெட்டிகள், இயந்திரங்கள் என்பன தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் மொத்த பயணிகளில் நூற்றுக்கு 5 முதல் 7 வரையிலான பயணிகளே இரயில் போக்குவரத்தினைப் பயன்படுத்துகின்றனர் எனக் கூறப்படுகின்றது. அந்த வகையில், நாட்டில் அதிகரித்துள்ள போக்குவரத்துத் தேவைகளுக்கேற்ப இரயில் போக்குவரத்து சேவையின் விஸ்தரிப்பு அவசியமாகின்றது.

இந்த இரயில் சேவை விஸ்தரிப்பு தொடர்பில் அதிக அக்கறை கொள்ளாமல், இரயில் கட்டணங்களை மாத்திரம் அதிகரித்து, அதன் மூலமாக வருமானங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பு கொள்வது என்பது எமது மக்களால் ஜீரணித்துக் கொள்ள இயலாமல் இருப்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

மேலும், தினமும் காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து காலை 6.30 மணியளவில் புறப்படுகின்ற உத்தர தேவி இரயிலானது கொழும்பு கோட்டை இரயில் நிலையம் வரையிலேயே தனது சேவையினை தொடர்வதாகத் தெரிவிக்கின்ற பயணிகள், மேற்படி சேவையை கொழும்பு, கல்கிஸ்ஸை வரையில் தொடர்ந்தால் தங்களுக்கு பெரும் உதவியாக அமையுமெனத் தெரிவிக்கின்றனர். எனவே, இது தொடர்பில் கௌரவ அமைச்சர் அர்ஜூன ரனதுங்க அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, மேற்படி உத்தர தேவி இரயில் சேவையினை கொழும்பு, கல்கிஸ்ஸை வரையில் தொடர்வதற்கு எற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையினை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

பாதுகாப்பற்ற இரயில் கடவைகள் காரணமாக ஏற்படுகின்ற விபத்;துகள் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, வவுனியா ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுயிலுள்ள புகையிரதக் கடவைகளில் மிக அதிகளவிலான விபத்துகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய இரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற நிலைமைகளே காணப்படுகின்றன. இவற்றில் கடவைக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டாலும் அது நிரந்தரமற்றதாகவே அமைவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டில் இத்தகைய பாதுகாப்பற்ற இரயில் கடவைகள் 685 வரையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும், அவற்றில் வடக்கிற்கான இரயில் பாதையில் அமையப்பெற்றுள்ள பாதுகாப்பற்றக் கடவைகளிலேயே அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

மேற்படி பாதுகாப்பற்ற இரயில் கடவைகளில் கடவைக் காப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களது தொழில் நிரந்தரமற்றதாகவும், நாளாந்தம் 250 ரூபாவினை மாத்திரமே ஊதியமாகக் கொண்டதுமாக இருக்கின்றது. அத்துடன், இவர்களது நியமனங்கள் இலங்கை புகையிரதத் திணைக்களம் சார்ந்ததுமல்ல, அது பொலிஸ் திணைக்கத்;தைச்; சார்ந்ததாக இருக்கின்றது.

தங்குவதற்கு எதுவிதான வசதிகளும் வழங்கப்படாமல், விளக்குகள்கூட வழங்கப்படாமல் இவர்கள் மிகவும் சிரமங்களுக்கு மத்தியிலேயே பணிகளை நிறைவேற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவே இவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், ஆரம்பத்தில் இப்பணியில் இணைந்திருந்த பலர் இத்தகைய குறைபாடுகள் காரணமாக அந்தப் பணியிலிருந்து ஒதுங்கிச் சென்றுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

இவ்வாறு, இரயில் பாதையில் பாதுகாப்பற்ற கடவைகளில் மிக முக்கியமான பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் கவனமெடுத்து, அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். பாதுகாப்பற்ற இரயில் கடவைகளில் பல உயிர்களைப் பாதுகாக்கின்ற இத்தகைய கடவைப் பாதுகாப்பாளர்களது தொழிலே பாதுகாப்பாக இல்லாதபோது, ஏனைய உயிர் பாதுகாப்பு குறித்து எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என்ற கேள்வியே எழுகின்றது.

மேலும், வடக்கிலே இரயில் பாதையில் நகரப் பகுதிகளில் காணப்படுகின்ற கடவைகள் பலவற்றில் தன்னியக்க கடவைப் பாதுகாப்புகள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. எனவே, நகர்ப்புற கடவைகள் அனைத்திலும் தன்னியக் கடவைப் பாதுகாப்புகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

அண்மையில், வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற இரயில் கடவையில் மிகவும் கோரமான விபத்தொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த கடவையூடான பாதையானது சட்டவிரோதமானது என புகையிரதத் திணைக்களத்தினால் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள், கடந்த மாதம் 25ஆம் திகதி அப்பாதைக்கு பாதுகாப்பு வேலியொன்றை பொது அமைப்புகளின் உதவியுடன் அமைத்திருந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி புகையிரதத் திணைக்களத்தினர் அந்த வேலியை அமைப்பதற்கான அனுமதி தங்களிடம் இருந்து பெறப்படவில்லை எனக் கூறி, அந்த வேலியை அகற்றிவிட்டு, அந்த வீதியில் தண்டவாளங்கள் இட்டு, மக்களின் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அம் மக்கள் முறையிடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, அம் மக்களுக்கான போக்குவரத்து வசதிக்கு ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கிலுள்ள இரயில் நிலையங்கள் பலவும் மிகுந்த அசுத்த நிலையில் காணப்படுகின்றன. போதியளவு துப்புரவுத் தொழிலாளர்கள் இன்மையே இதற்கக் காரணமெனக் கூறப்படுகின்றது. எனவே, இதற்கான ஆளணிகளை வடக்கு பகுதியிலிருந்தே நியமிப்பதற்கு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்

அதேநேரம், இந்த நாட்டின் இரயில் பாதைகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானவை தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளை ஊடறுத்தே செல்கின்றன. குறிப்பாக, கொழும்பு, கோட்டை இரயில் நிலையத்தை பிரதானமாக எடுத்துக் கொண்டால், வடக்கு நோக்கி காங்கேசன்துறை வரை செல்கின்ற பாதை, பதுளை, மாத்தளை, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அவிசாவளை, தலைமன்னார் வரை செல்கின்ற பாதைகள் அனைத்துமே தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளின் ஊடாகவே செல்கின்றன.

அந்தவகையில், இரயில் பயணங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்ற மக்களாகவும் தமிழ் பேசுகின்ற மக்கள் இருக்கின்றனர். எனவே, இந்த மக்களுக்குப் புரிகின்ற மொழியில் அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டியது புகையிரதத் திணைக்களத்தின் பொறுப்பாகும்.

அதேநேரம்,  செல்ல வேண்டிய நேரம்,  செல்ல வேண்டிய இரயில், அது புறப்படுகின்ற நேரம், தாமதங்கள் ஏற்படுமா என்ற தகவல், சென்றடையக் கூடிய எதிர்பார்க்கப்படுகின்ற நேரம்,  தரித்து நிற்கக்கூடிய இரயில் நிலையங்கள், அவசரமான பொது அறிவிப்புகள் போன்ற அனைத்து தகவல்களையும் தங்களுக்குப் புரிகின்ற மொழியினில் அறிந்து கொள்வதற்கான உரிமை இந்த நாட்டில் அனைத்துப் பயணிகளுக்கும் உண்டு.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் 410 இரயில் நிலையங்கள் உள்ளதாகவும், இவற்றில் 177 இரயில் நிலையங்கள் பிரதான நிலையங்களாகும் என்றும், 162  உப இரயில் நிலையங்களும், 71 சாதாரண தரிப்பிடங்களுமாக இருக்கின்றன என்றும் தெரிய வருகின்றது.

இந்த இரயில் நிலையங்களில் தமிழ் மொழி மூலமான அறிவிப்புகள் எத்தனை இரயில் நிலையங்களில் வழங்கப்படுகின்றன? என்ற கேள்வி எழுகின்றது. குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளின் ஊடாகச் செல்கின்ற பாதைகளில்  முக்கிய சந்திகளில் அமையப்பெற்றுள்ள,  ராகம இரயில் நிலையம், பொல்ககவெல, மாகோ, மதவாச்சி, பேராதனை இரயில் நிலையங்களில்கூட தமிழ் மொழி மூலமான அறிவிப்புகள் இல்லை என்றே கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் ஏனைய பல்வேறு துறைகளைப் போல், பொதுப் போக்குவரத்துச் சேவையிலும் இத்தகைய மொழிப் புறக்கணிப்புகள் இடம்பெறுகின்ற நாட்டிலேயே தேசிய நல்லிணக்கம் – பொறுப்பு கூறல் என்றெல்லாம் கதைக்கப்படுவது வேடிக்கையானதாகவே இருக்கின்றது.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் உரிய அவதானங்களைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, பலாலி விமான நிலையத்தின் ஊடாக ஐரோப்பா வரையில் விமானச் சேவை நடத்தப்படவுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்திருந்தன. அது எந்தளவிற்கு தற்போது சாத்தியமான நிலையில் இருக்கின்றது? என்பது பற்றியும், பலாலியிலிருந்து இந்தியாவிற்கான விமான சேவையினை ஏற்படுத்துவது தொடர்பான விடயம் குறித்த இன்றைய நிலைமைகள் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, 

துறைமுகங்கள் விமானப் போக்குவரத்து அமைச்சு தொடர்பில் கூறுகின்றபோது, குறிப்பாக காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான கப்பல் போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க வேண்டும் எனும் கோரிக்கையை நான் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றேன். இது தொடர்பில் அண்மையில் அரச தரப்பு அவதானம் செலுத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. அது குறித்த தெளிவுகளை கௌரவ அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்கள் வழங்குவார் என்ற எதிர்பார்க்கின்றேன்.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2012அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாள...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்....