இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, January 25th, 2019

மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்தாமை தொடர்பில்   நாடாளுமன்றத்தின் கடந்த முதலாவது அமர்வில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியினையும் முன்வைத்துள்ளேன். அதற்கு உடனடி பதில் கிடைக்கவில்லை. உடனடி பதில் கிடைக்காமையானது, மாகாண சபைகளுக்கான தேர்தலை  நடத்தாமல் மேலும் இழுத்தடிப்புகள் இடம்பெறுமோ? என்ற சந்தேகத்தை எமது மக்களிடையே ஏற்படுத்தி இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதை வலியுறுத்துகின்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இத்தகையதொரு நிலையில், நாட்டுக்கு மிக முக்கியமானதொரு விடயத்தை கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும அவர்கள் இன்று இந்த சபைக்கு கொண்டு வந்திருப்பது தொடர்பில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நாட்டில் தமிழ் பேசுகின்ற மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கோரி, சாத்வீக வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், அத்தகைய சாத்வீகப் போராட்டங்கள் யாவும் பேரினவாத சிந்தனைகளாலும், சுயலாப தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் தோல்வி கண்டிருந்த நிலையிலேயே ஓர் ஆயுதமேந்திய போராட்டத்தின்பால் தள்ளப்பட்டிருந்தோம்.

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது அப்போதைக்கு இந்த நாட்டுக்கு புதியதொரு விடயமல்ல என்ற போதிலும், எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு வேறு வழிகளின்றிய நிலையிலேயே அதனை தேர்ந்தெடுக்க வேண்டியேற்பட்டிருந்தது.

அதற்கான தேவை அப்போது இருந்தது. அந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் பெறுபேறாகவே 13வது திருத்தச் சட்டத்தின் ஊடான மாகாண சபை முறைமை எமது மக்களுக்கு கிடைத்தது. அதன் பின்னர், ஆயுதம் தாங்கியப் போராட்டம் தேவையற்றது என்பதே எமது நிலைப்பாடாகும்.

எனினும், துரதிர்~;டவசமாக அந்த ஆயுதம் தாங்கியப் போராட்டம் திசை மாறிப் பயணித்து, ஒரு பயங்கரவாத உருவினை முழுமையாக தன்னகத்தே கொண்டு எமது மக்களை முள்ளிவாய்க்கால் வரையில் தள்ளிவிட்டு, ஏராளமான அழிவுகளுக்கு வித்திட்டுவிட்டது.

அதுமட்டுமன்றி, இந்த நாட்டில் இன, மத பேதங்களின்றியும், இன, மத பேதங்கள் பார்;த்தும், பலர் கொல்லப்பட்டும், பல அழிவுகள் ஏற்படுத்தப்பட்டும் 2009ஆம் ஆண்டில் அந்த அழிவு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

மாகாண சபை முறைமையை எடுத்துக் கொண்டால், எந்த மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், எந்த மக்களுக்கான அதிகாரங்களைப் பகிர்வதற்கும், எந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டதோ, அந்த மக்கள் வாழுகின்ற மாகாணங்கள் தவிர்ந்து நாட்டின் ஏனைய மாகாணங்கள் அந்த முறைமையால் போதிய நன்மைகளை அடைந்தன. அடைந்தும் வருகின்றன.

ஆரம்பத்தில் வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைத்து வழங்கப்பட்டிருந்த மாகாண சபையினை புலிகள் இயக்கத் தரப்பினர் தங்களது சுயலாபம் காரணமாக நிராகரித்து விட்டனர். அதன் பின்னர், அந்த மாகாண சபையை ஏற்றுக் கொண்டிருந்த தமிழ்த் தரப்பினர், அதனைக் குட்டிச் சுவராக்கி, குதாகலித்துக் களித்தனர். குறிப்பாக, அது ஒரு வாடி வீடு என நினைத்தே அதன் ஆட்சியாளர்கள் செயற்பட்டனர்.

வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணம் ஓரளவு நன்மைகளை மாகாண சபையின் வாயிலாகக் கண்டுள்ள போதிலும், வடக்கு மாகாணம் இந்த நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலைக்கே இப்போது தள்ளப்பட்டுள்ளது

கல்வியில், விளையாட்டுத்துறையில், சுகாதார வசதிகளில், ஏனைய அபிவிருத்திகளில் இந்த நாட்டில் ஒன்பதாம் இடத்தையும், வறுமையில், வேலைவாய்ப்புகள் இன்மையில், மக்களது வாழ்வாதார வசதிகள் இன்மையில் முதலாம் இடத்தையும் வகிக்கின்ற சாதனையை அது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

எதற்காக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டோம்?, எதற்காக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அத் தேரதலில் வென்றோம்? எதற்காக மாகாண சபையின் கதிரைகளில் ஐந்து வருடங்கள் அமர்ந்திருந்தோம்? என எதுவுமே தெரியாதவர்களாக அதன் கடந்தகால ஆட்சியாளர்களும் கலைந்து போய்விட்டார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக வடக்கு மாகாண சபையில் ஆட்சி என்றொன்று நடந்ததா? என்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்வதற்கு ஏதுவாக அங்கு எதுவுமே எமது மக்களுக்கென செயற்படுத்தப்படவில்லை.

இப்போது எமது மக்கள் மத்தியில் தீவிரமான விழிப்புணர்வுகள் தோன்றியிருக்கின்றன. அதாவது, எமது மக்களது அடிப்படை, அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்துக் தருகின்ற,  அபிவிருத்திகளை முன்னெடுக்கின்ற, அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருகின்ற  முயற்சியும், விருப்பமும், ஆளுமையும் கொண்ட, இதுவரைக் கால செயற்பாட்டு அரசியலில் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துள்ள, தேவைகளை நிறைவேற்றியுள்ள, எமது மக்களின் உரிமைகளுக்காக நடைமுறை சாத்தியமான முறையில் உழைக்கின்ற தரப்பினர் வசம் வடக்கு – கிழக்கு மாகாண சபைகளை ஒப்படைப்பதற்கு எமது மக்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.

இந்த மாகாண சபை முறைமையை எமது மக்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாகக் கருதுகின்ற நாங்கள், மாகாண சபைகள் முறைமை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் ஆயுதமேந்திய போராட்டத்தைக் கைவிட்டு, ஜனநாயக வழிமுறைமீது நம்பிக்கை வைத்து, இந்த வழிமுறை மூலமாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்ற அபிலாசையுடன் தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் வந்தவர்கள். அதுமட்டுமல்லாது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவும், மாகாண சபைகளின் ஊடாகவும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்ற நம்பிக்கையை தமிழ் அரசியல் களத்தில் முதன் முதலாக விதைத்தவர்களும் நாங்கள்தான்.

அதே நேரம், தமிழ் இயக்கங்களுக்கு உள்ளேயும், இயக்கங்களுக்கு இடையேயும் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கையாண்டிருந்த வன்முறைகள், சகோதர படுகொலைகள் காரணமாகவும் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கைவிடும் நிலைப்பாட்டிற்கு வந்திருந்தோம். இன்றும்கூட நாடாளுமன்றத்தை பிரதிpநிதித்துவப்படுத்துகின்ற தழிழ்த் தரப்பு உறுப்பினர்களுக்கு எமது ஆயுதமேந்தியப் போராட்டத்துடன் நேரடி பங்களிப்புகள் இல்லாவிட்டாலும், இதனை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் என நினைக்கின்றேன்.

எனவே, மாகாண சபை முறைமையை எமது மக்களின் நலன்கள் கருதிய சபையாக செயற்படுத்த வேண்டும் என்கின்ற விருப்பம், தேவை, ஆளுமை என்பன எமக்கு இருக்கின்றன. மக்களை மறந்து விட்டு, வெறும் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் வடக்கு மாகாண சபையை ஆண்ட காலம் மலையேறி போய்விட்டது. இனி, எமது மக்களுக்காக வடக்கு மாகாண சபை இயங்கவேண்டும். எமது மக்கள் விரும்புகின்ற பிரதிநிதிகளால் அது இயங்க வேண்டும்.

தற்போதைய நிலையில், நாட்டில் சப்பிரகமுவ, வட மத்தி மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்தாது சுமார் ஒன்றரை வருட காலம் கழிந்துள்ளது.

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் உத்தியோகப்பூர்வ ஆட்சிக் காலம் முடிவடைந்து சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்டுள்ளன. மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களின் உத்தியோகப்பூர்வ ஆட்சிக் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியுடன் முடிவடையப் போகின்றன.

எனவே, மாகாண சபைகளுக்கான தேர்தலை துரிதமாக நடத்த வேண்டியதன் தேவை இன்று மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

ஏற்கனவே மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஏற்பட்டிருந்த தாமதங்களின் பின்னர், இந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சிகளும் விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில் புதிய அரசியல் யாப்பு என்கின்ற ஒரு வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் நாட்டில் பல்வேறு கருத்து மோதல் நிலைகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. பௌத்த தேரர்களின் எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலைமை இன்று நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எமது மக்களின் வாக்குகளை அபகரித்து, நாடாளுமன்ற பதவிகளை எட்டிப் பிடித்துக் கொண்ட தமிழ்த் தரப்பினர், வாக்களித்த எமது மக்களையே பாதுகாக்க திராணியற்ற நிலையில், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போவதாகக் கூறிக் கொண்டு, இந்த ஆட்சியைக் காப்பாற்றி, அதன் மூலமாக தங்களது சுயநலன்களை நிறைவேற்றிக் கொண்டு வருவதோடு, எமது மக்களிடம் போய் ‘எங்களிடம் கேட்டுத்தான் அமைச்சரவை தீரமானங்கள் எடுக்கப்படும், நாங்கள் கூறித்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எல்லாமே நடக்குமென’ வீண் வம்பு பேசிக் கொண்டு, அதே வாயால் ‘இந்த புதிய அரசியல் யாப்பு வரைபில் சமஸ்ரி இருக்கிறது – அது ஒருமித்த நாடு என்ற போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டு இருக்கிறது,’ என்று, எமது மக்களுக்கு வெளிப்படைத்தன்மை அற்ற, ஒளிவு, மறைவு அரசியலை நடத்திக் கொண்டு, கோழி, ஒரேயோரு முட்டையை இட்டுவிட்டு ஊர் முழுதும் கொக்கரித்துக் கொண்டு திரிவதைப்போல், கொக்கரித்துக் கொண்டு திரிவதால்தான் இன்று இத்தகைய எதிர்ப்பு நிலை சகோதர சிங்கள மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, சுகபோகங்களை அனுபவித்து வருகின்ற இந்தத் தமிழ்த் தரப்பு, திட்டமிட்டே இத்தகைய எதிர்ப்புகளை பெரும்பான்மையின மக்களிடையே தூண்டிவிட்டு, இதையே காரணம் காட்டி – அதாவது ‘எமது மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை கொண்டு வருவதில் சிங்களத் தரப்பு எதிர்க்கிறது. எனவே நாங்கள் சர்வதேசத்தை நாட வேண்டும். அதற்கு உங்களது வாக்குகளைத் தாருங்கள்’ என அடுத்து வருகின்ற தேர்தலில் எமது மக்களிடம் வாக்குக் கேட்டுப் போக எண்ணியே செயற்பட்டு வருகின்றது என்றே தெரிய வருகின்றது.

எம்மைப் பொறுத்தவரையில், அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுiமாயக செயற்படுத்துங்கள். இதனை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, படிப்படியாக நிலையான அரசியல் தீர்வு நோக்கி முன்னேறுவோம் என்பதையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

அந்த வகையில்தான், இன்றைய நிலையில் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துங்கள். மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை முழுமையாக வழங்குங்கள். மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளால் செயற்படுத்தப்படட்டும் என வலியுறுத்துகின்றோம்.

உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்தினால் அந்தக் கட்சி வென்றுவிடும். இந்தக் கட்சி வென்றுவிடும். நாங்கள் Nhற்றுவிடுவோம் என்றெல்லாம் எவரும் எண்ணிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் தேர்தல்களே நடைபெறாத ஒரு நிலையும் வந்துவிடலாம்.

எனவே, இந்த நாட்டில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்

Related posts:


டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலி...
133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் - நாடாளுமன்றத்...