தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் – மதிக்கப்படும் சூழலை உருவாக்க வாருங்கள் நாடாளுமன்றில் அமைச்சர் தேவா அழைப்பு!

Friday, December 11th, 2020

பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 10.12.2020 அன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் –
இன்று எமது மக்கள் மிகவும் நெருக்கடிமிக்க வாழ்க்கையின் சவால்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். கடந்த ஆட்சியின் தீர்க்கதரிசனமற்ற நிர்வாகத்தின் மூலமாக திணிக்கப்பட்டுள்ள பொருளாதர வீழ்ச்சி நிலைமைக்கு மத்தியில் ஒரு பக்கம் கொவிட் 19 கொரோனா தொற்று அனர்த்தம் காரணமாகவும், மறுபக்கத்தில் புரெவி புயல் காரணமாகவும், தொடர்ந்த மழை வெள்ளம் காரணமாகவும் எமது மக்கள், வாழ்வாதார, சுகாதார, பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதுதான் யதார்த்த நிலையாக இருக்கின்றது. இத்தகைய நிலையில், மக்கள் அடைந்து வருகின்ற துன்ப, துயரங்களை கண்டு கொள்ளாமல், மக்களின் அவலங்களை வெளிப்படையாக மூடி மறைக்கின்ற வகையில், மக்களது உண்மை பிரச்சினைகளை வேறு திசைகள் நோக்கியதாக கொண்டு செல்கின்ற நடவடிக்கைகளிலேயே கடந்த கால அரசாங்கம் செயற்பட்டு வந்திருந்தது. இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது தலைமையின் கீழ், கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களது வழிகாட்டலில் இந்த அரசு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்ளதை உள்ளவாறு எடுத்துக் கூறுவதுடன், இக்கட்டான பொருளாதார நிலைமையிலும் மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டி வருகின்றது.
ஆனால், ஒரு தரப்பினர், மக்களது பிரச்சினைகளை வேறு திசை நோக்கி திருப்பிவிடுகின்ற செயல்களில் போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும், அதிதீவிர போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும் ஈடுப்பட்டு வருகின்ற அதேவேளை, இவர்களது இச் செயற்பாடுகள் எமது மக்களை மீண்டும் ஒரு காரிருள் சூழ்ந்த சூனியத்திற்குள் தள்ளிவிடுகின்ற அபாயத்தையும் காணக்கூடியதாக இருக்கின்றது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.
இந்தத் தமிழ்த் தரப்பு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
எமது மக்கள் முகங்கொடுத்துள்ள உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல், அந்தப் பிரச்சினைகளை மேலும் வளரவிடுவதும். அதனோடு மேலும் பல பிரச்சினைகளை கோர்த்து விடுவதும் இவர்களது வரலாற்று செயற்பாடுகளாகவே தொடர்கின்றன.
எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதாக இவர்கள் எமது மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, வாக்குகளையும் அபகரித்துக் கொண்ட பின்னர், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், அந்தப் பிரச்சினைகளுடன் மேலும் பிரச்சினைகளை சேகரித்துக் கொடுக்கின்ற அட்டூழியங்களால், எமது மக்கள் பிரச்சினைகளின் கடனாளிகளாகவே வாழ்க்கையை தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
புரெவி புயல் வந்துவிட்டுப் போய் விட்டது. ஆனால், இந்த போலித் தமிழ்த் தேசியவாதிகளின் பிறவிக் குணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆயிரம் புரெவிகள் வந்தாலும் இவர்களது பிறவிக் குணங்கள் மாறுமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.
இறுதி யுத்தத்தின்போது யார், யார் எங்கிருந்தார்கள் என்பது பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச அவர்களுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த ஏனைய தமிழ்த் தரப்பினரை அழைத்தபோது, அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை.
புலிகள் இயக்கத்தினர் அழிய வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள். இதை வெளிப்படையாகக் காட்டாமல், ‘புலிகள் நின்றடிப்பார்கள். விட்டடிப்பார்கள். 40 ஆயிரம் சவப்பெட்டிகளைத் தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டு, அழிவுக்கு துணை போனார்கள்.
அன்று ஆடு நனைய ஓநாயாக அழுதுவிட்டு, இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
‘ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்ற பழமொழிக்கு உதாரணமாகவே இருக்கின்றது இவர்களது செயற்பாடுகள்.
எமது மக்களின் தலையாய பிரச்சினைகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, எமது மக்களுக்கு ஒருபோதும் உதவியிராத தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தடை செய்வதா? தடை செய்யக் கூடாதா? என்ற தலைப்பினை இந்த பேரிடர் காலத்தில் எடுத்துக் கொண்டு, வாய்ப்பாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் பேரினவாதம் என்பது குறிப்பிட்ட தரப்பினரிடையே சலூன் கதவு போல் பொருத்தப்பட்டுக் கிடக்கின்றது. அதனை தமிழ் இனவாத கருத்துக்கள் அடிக்கடி திறக்கச் செய்வதால், மொட்டையடிக்கப்படுவது எமது சமூகமாகவே இருக்கின்றது.
இந்த நாட்டில் பேரினவாதத்திற்கும் குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் இருக்கக் கூடாது என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
எமது மக்களுக்கு அன்றாட, அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் உண்டு. அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கும் இதே பிரச்சினைகளுடன் மத ரீதியிலான பிரச்சினைகளும் உண்டு.
கடந்த வருட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்க்கைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை எழுந்திருந்தது. முஸ்லிம் மக்களுக்கு மத உணர்வு ரீதியிலான வாழ்க்கை பிரச்சினை ஏற்பட்டு, கொவிட் 19 கொரோனா தொற்று அனர்த்தத்தின் பின்னரும் அது தொடர்கின்றது.
இவை அனைத்தும் அரசியல் ரீதியாக, அல்லது குறைந்தபட்சம் மனிதாபிமான ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். அத்றகென நாங்கள்தான் அரச தரப்பிடம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பெரும்பான்மை பலத்துடன், பெரும்பான்மையினரின் பலத்துடன் இந்த அரசு இருக்கின்றது. அதற்காக எம்மை நாம் இந்த அரசுக்கு அடகு வைக்க வேண்டியதில்லை. அடம்பிடிக்காமல் நாமும் இலங்கையர் என்ற உரிமையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அரசுடன் பேசுவதென்பது தங்களது சுய நலன்கள் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அது, எமது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால், எமது அனைத்து மக்களினதும் பிரச்சினைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, பதின்மூன்று பேர் சேர்ந்து, எமது மக்களை தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தாமல், எமது மக்களை மதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை இந்த நாட்டில் ஏற்படுத்தவதற்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
பாதை தெளிவாகவே இருக்கின்றது. அதில் உங்களது பயணங்கள்தான் எமது மக்களுக்கான அழிவைத் தேடியே தொடர்ந்தும் நகர்கின்றன. அழிவு சுலபமானது. ஆக்கம் கடினமானது. அழிவைத் தவிர்த்து, ஆக்கத்தை நோக்கிய செயற்பாட்டில் நகரும் எங்களுக்கு அதனது கஸ்டங்கள் தெரியும்.
எனவே, இறுதி யுத்த தருவாயில், அதனை தடுத்து நிறுத்துவதற்கு நான் விடுத்த அழைப்பைப் போல் மீண்டும், மீண்டும் நான் அழைப்பு விடுக்கின்றேன். வாருங்கள். அரசுடன் பேசுங்கள். எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வாருங்கள் என பகிரங்க அழைப்பினை விடுக்கின்றேன்.
எமது மக்களின் நலன்கருதி இந்த அழைப்பையும் உங்களது சுய இலாபங்களுக்காக கோட்டைவிட்டு விடாது, கைகோர்த்து வரும்படி கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

Related posts:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதில் தாமதம்: நிலையை சீர்செய்யுமாறு...
உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் - நாடாளும...
விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...

யுத்த வடுக்களற்ற புதிய தேசத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
களுத்துறை சிறை தாக்குதலில்  நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...