செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 24 ஜனவரி 2002அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, January 24th, 2002

24 ஜனவரி 2002

கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!

இந்த நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இந்த நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கின்ற ஒரு முக்கயமான கால கட்டத்தில் நாம் இந்தச் சபையில் கூடியிருக்கின்றோம். ஆதலால் நாடு எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு முகம் கொடுத்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய திசையில் முன்னேறிச் செல்ல இது இன்னொரு நல்ல சந்தர்ப்பமாகும்.நேற்று முன்தினம் மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தச் சபையில் நிகழ்த்திய உரையும் சமாதான முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் அந்த நிலைப்பாடும் எமக்கு உண்மையிலே மனநிறைவைத் தருகின்றன. இந்த நாட்டில் சமாதானம் நிலைபெற வேண்டும் என்பதற்காகவே மேற்கொள்ளப்படும் நடவடிக் கைகளை நாம் மனப்பூர்வமாக வரவேற்பதுடன் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.

மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்கள் தனதுரையில் மூன்று முக்கிய விடயங்களைச் சுட்டிக் காட்டியிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். அவையாவன வடக்கு – கிழக்கில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் பொருளாதார நெருக்கடிகள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் என்பன என்று நாங்கள் இனங்காண்கிறோம். முதலாவதாகவும் முக்கியமாகவும் குறிப்பிட வேண்டியது வடக்கு – கிழக்கில் இடம்றெ;றுவருகின்ற யுத்தத் தைப் பற்றியேயாகும். தற்போது இந்தப் போர் மேகங்கள் கலைந்து, யுத்தமற்ற மோதல்களற்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த விடயம் பெரிதும் வரவேற்பக்குரியதும் மனமகிழ்ச்சிக்குரியதும் ஆகும்.

ஆனால் புலிகளின் அரசியல் நேர்மையில் சந்தேகம் இருப்பது போன்ற உணர்வை பிரதம அமைச்சர் அவர்களின் உரையில் அடங்கியுள்ள சில வார்த்தைகளின் மூலம் உணரக்கூடியதாக உள்ளது. இத்தகைய ஒரு சந்தேகம் தவிர்க்க முடியாதது என்றே நாம் கருதுகின்றோம். கடந்த காலப் படிப்பினைகளும் நிகழ்காலத்தில் இடம்பெற்று வருகின்ற சில சம்பவங்களும் இச்சந்தேகத்தை வளர்க்ககூடியன. அல்லது வலுப்படுத்தக் கூடியளவு எனினும் இதற்கான மாற்றுவழி. வடக்கு – கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளுக்கு புலிகள் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் வலியுறுத்துவதேயாகும். ஏனெனில் இங்கு இரு பிரதான பிரச்சினைகள் உள்ளன.

அவையாவன யுத்தம் அது தமிழ் பேசும் மக்கள மீது சுமத்தி வருகின்ற சுமைகளும் ஒருபுறமும் இனப்பிரச்சினை என்பது மறுபுறமுமாக இருக்கின்றன. இந்த இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை வரையறை செய்து அதனை கட்டம் கட்டமாக அமுல்படுத்தும போது யுத்தத்திற்கு தீனி போடும் நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது எமது நம்பிக்கை. எனினும் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு காணும் வரை மக்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வை ஒத்திப் போட முடியாது. இதனையே பிரதமரும் தமது உரையில் “அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தில் மக்களின் நலன்களைச் சிறை வைக்க நாம் ஒருபோதும் தயாராக இல்லை” எனக் குறிப்பிட்டதன் மூலம் புலப்படுத்தியிருக்கின்றாரென நம்புகின்றோம்.

“வடக்கு – கிழக்கில் வாழும் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகளே என்பதை நாம் ஒருபொழுதேனும் மறந்துவிடக்கூடாது” எனத் தெரிவித்துள்ள பிரதமரின் கூற்றின் உள்ளடக்கம் செழுமை நிறைந்ததாகும். மக்களின் நாளாந்த வாழ்க்கயைப் பாதிக்கும் நெருக்கடிகளுக்கு மனிதாபிமான ரீதியில் உடனடியாகத் தீர்வுகள் காணப்படுவதே பொருத்தமானதாகும். இன மத பிரதேச எல்லைகளைக் கடந்து மக்களின் நாளாந்த வாழ்வு செழுமைப்படுத்தப்பட வேண்டும்.

எனினும் இந்த இடத்தில் ஒரு விடயத்தை வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன். அதாவது வடக்கு – கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்கள் அனைவரதும் பாதுகாப்புக் கான உத்தரவாதத்தை நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தினது கடமையாகும். மோதல்களற்ற நிலை நீடிக்க வேண்டுமென்பதற்காகவோ முரண்பாடுகள் தோன்றக்கூடாதென்பதற்காகவோ வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமைப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் நழுவிச் செல்லக் கூடாது. விலகி நடக்கக்கூடாது. இந்தக் கடமைப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தவறுமாயின் அதனால் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாத சூழலே உருவாகும். இது ஜனநாயகக் கோட்பாடுகளுக்குப்; புறம்பானதாகும். இது இலங்கையில் இனங்களுக்கிடையிலான  ஐக்கியத்துக்கு ஆபத்தானதுமாகும். கடந்த காலப் படிப்பினைகளிலிருந்து அரசாங்கம் இத்தகைய தவறை இழைக்காதென்ற நம்பிக்கை எமக்குண்டு.மேலும் இலங்கை அரசாங்கம் நேர்மையாக நடந்து சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தினைத் தக்க வைத்துக் கொள்ளக் கொண்டுள்ள திடசங்கற்பம் மிகுந்த பாராட்டுக்குரியதாகும். புலிகள் இயக்கமும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லையென்று குற்றம் சுமத்தப்பட்டு.அதற்காகத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுககுத் தீர்வு காணாமல் விட்டுவிடும் நிலைமை மீண்டும் வந்துவிடக் கூடாதென்று மிக விநயமாக வேண்டுகின்றோம்.

இன்று நாடு மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள தென்பதை மறுக்க முடியாது. எனினும் குடாநாட்டு மக்கள் அண்மைய நாட்களில் எதிர்நோக்கி வருகின்ற விலைவாசி உயர்வுகள் குறித்து இங்கு சுடடிக் காட்டாமலிருக்க முடியாது. அங்கு சீனி ஒரு கிலோ 50 ரூபா சர்க்கரை ஒரு கிலோ 70ரூபா தேங்காய் ஒன்று 35ரூபா முதல் 40 ரூபா வரை தேங்காய் எண்ணெய் போத்தலொனறு 125 ரூபா மண்ணெண்ணெய் ஒரு போத்தல் 65ரூபா பெற்றோல் ஒரு போத்தல் 150ரூபா கோதுமை கிலோ ஒன்று 30ரூபா உருளைக்கிழங்கு ஒரு கிலோ 250ரூபா சிவப்புப் பருப்பு கிலோ ஒன்று 40ரூபா அரிசியின் விலை ஆகக்குறைந்தது கிலோ ஒன்றுக்கு 42 ரூபாவாகவுள்ளது. மரக்கறி வகைகள் கிலோ 100 ரூபா முதல் 150ரூபா வரை விற்பனையாகின்றன. இத்தகைய விலைவாசிகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கப் படும்போது விவசாயிகள் உழைப்பாளிகள் என்ற பெயரொடு வாழும் மக்களின் மனதில் எவ்வாறு மகிழ்ச்சிப் பிரகாரம் பொங்க முடியும்? சட்டத்திற்குப் புறம்பான வரி அறவீடுகளும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கொள்கை இலாப நோக்க வியாபாரிகளின் செயற்பாடுகளும் இந்த விலைவாசி உயர்வுகளுக்குக் காரணமாகும். மீன்பிடித் தடைகள் தொடர்கின்றன.நிவாரணங்கள் கிடைப்பதாக இல்லை.

நாங்கள் அந்த மீன்பித் தடையை அகற்றுவதற்கான எண்ணத்துடன்தான் செயற்பட்டுக் கொண்டிருந்தோம். அந்த வகையில்தான் அந்த மீன்பித் தடை இன்னும் அகற்றப்படவில்லையென்பதை நான் இங்கு சொல்ல வருகின்றேன். (இடையீடு) அந்தக் காலத்தில் செய்ய முடியாமற் போனவற்றைச் செய்ய முடியுமென்று உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்ட வகையில் அது இன்னும் செய்யப்படவில்லை.அது செய்யப்பட வேண்டுமென்பதைத்தான் நான் சொல்லுகின்றேன்.(இடையீடு) எங்களுடைய காலத்தில் அது செய்யப்பட முடியவில்லை என்பதற்காக இந்தக் காலத்தில் அதைச் செய்யக் கூடாதென்பதல்ல.

அந்தத் தகுதி உங்களுக்கும் இல்லையென்று நான் நினைக்கின்றேன்.

நான் என்ன சொல்ல விரும்புகிறெனென்றால் இன்றைய சந்தர்ப் பத்தில் (இடையீடு) நீங்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிவகை களை ஆராயாமல் வந்து பிரச்சினைகளை கூட்டுவதற்கான வழிவகை களைத்தான் ஆராய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

நிவாரணம் கிடைப்பதாக இல்லை. உலர் உணவு விநியோகம் தாமதப்படுகிறது. இந்த நிலையில் எப்படி மகிழ்ச்சி கொள்ள முடியும். எனினும் எவர் எவரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் இங்கே அதைக் குறிப்பிடவில்லை. அதேபோல அரசாங்கத்தைச் சங்கடங்களுக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகவும் குரல் கொடுக்கவில்லை. மாறாக நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் உண்மையான நலன்களையும் நிகழ்காலத் தேவைகளையும் எடுத்துரைப்பதற்காகவும் இவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவுமே இவற்றை இங்கே சுட்டிக்;காட்டுகின்றேன். இருந்த போதும் அரசாங்கம் எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பது என்ற கோணத்திலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தை அணுகக்கூடாது என்பது எமது வேண்டுகோளாகும். ஏனென்றால் அரசாங்கத்தின் ஆளுமைக்கு சவால் விடும் ஆயுத ரீதியான எதிர்ப்புத் தோன்றவும் வளரவும் இன முரண்பாட்டுக்குத் தீர்வு காணப்படாமையே காரணமாக அமைந்தது. சர்வதேச சக்திகள் தலையிடுவதற்கு அதுவே களமமைத்தது. எனவே இலங்கைத் திருநாட்டின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் திரிகரணசுத்தியாக ஏற்றக்கொண்டு தமிழ் பேசும் உணர்வுகளைப் பிரதிபலிக்க முற்பட்டு நிற்பது எந்த அளவுக்குச் சிரமமான காரியம் என்பதை அரசாங்கமும் தென் இலங்கை அரசியல் சக்திகளும் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்புமாகும்.

மேலும், பிரதமர் தமது உரையில் “இயல்பு நிலையை இழந்திருக்கம் வடக்கு- கிழக்கு மக்களுக்கு” என்று குறிப்பிட்டிருந்தார். ஆதலால் எதிர்பார்க்கப்படுகின்ற இயல்பு நிலை அல்லது வழமை நிலை என்ன என்பது தொடர்பான எமது கருத்துக்களையும் இங்கு முன்வைப்பது பொருத்தமானதாக இருக்கும். சிலர் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் படையினர் பிரவேசிப்பதற்கு முன்பு இருந்த நிலையை அதாவது 1990ம் ஆண்டிலிருந்து 1995ம் ஆண்டு வரைக்குமிடையிலான காலப்பகுதியிலே காணப்பட்ட நிலைமையை இயல்பு நிலைமை என்று கருதுகிறார்கள். இன்னும் சிலர் 1983ம் ஆண்டு ஜூலைக்கு முந்திய நிலை இயல்பு நிலை என்கின்றனர். இன்னும் ஒரு சாரார் 1977க்கு முற்பட்ட காலத்து இயல்புநிலை என்று கருதக்கூடும். ஆனால் நாங்கள் 1970க்கு முன்பு இருந்த நிலைமையை இயல்பு நிலையாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக்கருதுகிறோம். அதாவது அவசரகால நிலை பிரகடனஞ் செய்யப்படுவதற்கு முன்பாக  வடக்கு – கிழக்கிலும் சரி தெற்கிலும் சரி அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் பிரயோகங்கள் தோன்றியிருக்காத அந்த நாட்களின் வாழ்க்கை நிலைமை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றோம். எதிர்காலம் குறித்து தொலை நோக்குடன் அந்தக் காலத்து தலைவர்கள் செயற்பட்டிருக்காதமையின் துர்ப்பாக்கியத்தை அனுபவித்து உணர்ந்தவர்கள் என்ற வகையிலே நாங்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும் என்பதைக் கூறவிரும்புகின்றேன்.

மூன்றாவதாக ஜனநாயகக் கோட்பாடுகளின் நடைமுறைப்படுத்தல் களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்ளைகளை நாம் வர வேற்கிறோம். மக்களால் மக்களுக்காக மக்களாட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றி வெவ்வேறு விதமான விளக்கங்கள்  – வியாக்கினங்கள் – முன்வைக்கப்படுவது உண்டு. நடைமுறையில் எண்ணிக்கைப் பெரும்பான்மைப் பலத்துக்குக் கட்டுபட்டு எண்ணிக்கையில் சிறுபான்மையினர் செயற்பட வேண்டுமென்பதே எதிர்பார்பாகவுள்ளது. ஆனால் இதுவே எண்ணிக்கையில் சிறுபான்மை யினரின் உணர்வுள் புறக்கணிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்து விடுவதைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கம் இலங்கையில் ஜனநாயகக் கோட்பாடுகளை அமுல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கிறது. எனினும் எந்த விதத்திலும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காத ஏகன் பிரதிநிதித்துவக் கோரிக்கைகளும் இங்கு ஒலிக்கின்றன.ஜனநாயக நடைமுறைகளின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி இங்கு இடம்பிடித்துக் கொண்டிருப்பவர்கள். அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளைப் புறகணிக்கும் வகையில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டோரின் உயிர்வாழ்வையே மறுதலிக்கும் ஜனநாயக விரோதப் போக்குகளை வெளிப்படுத்தி வருவது மிகுந்த சங்கடங்களைத் தோற்றுவிப்பதாகும். இதேவேளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவரும் புலிகள் இம்முறை திசை திருப்பும் கைங்கரியங்களில் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவர்களுக்காகப் பேசுபவர்களின் கடமைப் பொறுப்பாகும்.

யார் யாருடன் பேசுவது? எந்த இடத்தில் பேசுவது? பேச்சுவார்த்தைகள் எங்கிருந்து நடத்தவது என்பன போன்ற விடயங்களே தற்போது பூதாகரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் பேச்சவார்த்தைக் கான நிகழ்ச்சி நிரல் என்ன? என்ன விடயங்கள் பேசப்படவுள்ளன? எத்தகைய இணக்கங்கள் காணப்படவுள்ளன. என்பவைகளே கவனத் துக்குரியவையாகும். ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அடிப்படைப் புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இவ்விடயங்கள் பற்றி பிரதமர் தெரிவித்திருக்கின்றார். ஆகவே இவ்விடயங்கள் குறித்து பேசி தவறான அபிப்பிரயாயங்களை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் யார் குற்றினாலும் அரிசி தான் வேண்டும் என்பதைப் போல் எவர் என்ன செய்தாலும் அமைதி சமாதானம் நிலைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.எனினும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பு ஏற்றுக்கொள்ள சிரமமான கோரிக்கையை மறுதரப்பு முன்வைத்து விடாப்பிடியாக வலியுறுத்துவது சுமுகமான நிலைமை தொடருவதற்கு உதவிக்கரமாக இருக்க முடியாதென்றே கருதுகின்றோம். இந்தியாவில் தங்கியிருக்க வசதி வேண்டும் தடை நீக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் சுமுகமான சூழல் தொடராமல் போய்விடுவதற்கான அறிகுறிகளாக இருக்குமா என்பது எமது அம்சமாகும்.

இறுதியாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி எனது அந்த உரையை நிறைவு செய்ய விளைகிறேன். வைத்தியர்கள் மருந்துகளைச் சிபார்சு செய்யலாம். அறிவுரைகளைக் கூறலாம். ஆனால் நோயிலிருந்து விடுபட வேண்டுமென்ற நோயாளியின் உளப்பூர்வமான விருப்பமும் அதற்காக விடாமுயற்சியுடன் உழைப்பதுமே நோயைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல எமது பிரச்சினைகளக்குத் தீர்வு காண வேண்டுமென்ற ஆவலும் திடசித்தமும் எமக்கு மிக முக்கியம். இனங்களுக்கிடையில் ஐக்கியம் வளரவும் அரசியல் கருத்து வேறுபாடுகள் ஆயுதங்களால் அடக்கப்படாத நிலை உருவாக்கவும் இன்றைய தருணத்தில் தொலைநோக்குடன் சிந்தித்துச் செயற்பட முன்வருவோமாக. நன்றி. வணக்கம்.

24 ஜனவரி 2002

Related posts:

‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க! டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் தெர...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் - ...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின்  பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும் தீர்க...
இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் - நாடாளுமன்றில்...