5 அகதிகள் பலி..! 300 அகதிகள் பாதுகாப்பாக மீட்பு..!!

Friday, October 21st, 2016

சட்டவிரோதமாக கடல்பயணங்களை மேற்கொண்ட நிலையில், மத்தியதரைக் கடலில் தத்தளித்த 300 அகதிகளை இத்தாலி நாட்டு கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதுடன் 5 உடலங்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இத்தாலி நாட்டு கடலோரக் காவல் படையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,மத்தியதரைக் கடலில் இரு இறப்பர் படகுகள் மற்றும் மூன்று சிறிய மீன்பிடிப் படகுகளில் வந்த அகதிகள் நடுக்கடலில் தத்தளிப்பதாக அகதிகள் நலன் குழுவொன்று தகவல் வழங்கியிருந்தது.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு கடலோரக் காவல் படையினர் விரைந்து சென்றனர். அத்துடன், குறித்த இடத்துக்கு அயர்லாந்து கடற்படைக் கப்பலும் விரைந்தது வந்தது.

கடல் நீரில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த 300 அகதிகள் இதன் போது பாதுகாப்பாக மீட்கப்பட்டு இத்தாலிக்கு அழைத்து வரப்பட்டதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் படகுகள் இருந்த கடல் பகுதியில் மிதந்த 5 அகதிகள் உடல்களும் மீட்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்ட அகதிகள் குறித்த விவரங்கள் மீட்பு முகாமில் பதிவு செய்யப்பட்டன.இதேவேளை, இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இத்தாலி மற்றும் அதனை அண்மித்த கடல் பகுதியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் அகதிகளை அந்நாட்டு கடற்படையும் கடலோரக் காவல் படையும் பாதுகாப்பாக மீட்டுள்ளன.

இதேவேளை, மத்தியதரைக் கடலில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட சுமார் 3,626 அகதிகள் உயிரிழந்தனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ship-people-300x150

Related posts: