லண்டன் கனரி வோர்ப்பில் இரசாயன கசிவு – நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு நிலமை கட்டுப்படுத்தப்பட்டது!

Saturday, April 9th, 2022

லண்டன் கனரி வோர்ப் பகுதியில் உள்ள ஹெல்த் கிளப்பில்  ரசாயன பதார்த்தம் வெளியேறியதைத்  தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கபோட் சதுக்கத்தில் (Cabot Square) உள்ள முகவரியில் ரசாயன வாசனை வந்ததாக  கூறி  லண்டன் தீயணைப்புப் படை (LFB) சேவையின்  பணியாளர்கள் அழைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவு  தெரிவித்துள்ளது.

இரசாயனங்களின் கலவையானது கட்டிடத்தில் அதிக அளவு புகை மற்றும் நீராவியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட தீயணைப்பு படையணி,  சம்பவ இடத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் லண்டன்அம்புலன்ஸ் சேவையினரின்   சிகிச்சையை  பெற்றதாகவும்  குறிப்பிட்டுள்ளது.

இரசாயன கசிவு சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.  தீயணைப்பு படை  வீரர்கள் சோதனைகளை மேற்கொள்வதால், “ஆபத்து மண்டலத்தை கடக்க வேண்டாம்” என்ற எச்சரிக்கை வளைவு போடப்பட்டது.

இதேவேளை சம்பவ இடத்தில் தீயணைப்புக் குழுக்கள் கட்டிடத்தை துப்பரவு செய்து, உயர்ந்த அளவீடுகளைக் கண்டறிந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தை காற்றோட்டம் செய்து, புகையின் அளவைக் கண்காணித்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்த தலைமை அதிகாரி  டேவ் ஹில் தெரவித்துள்ளார்.

காலை 9 மணிக்குப் பின் படையணி சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டது. அதன் பின் முன்னெச்சரிக்கையாக கட்டிடத்தில் இருந்து சுமார் 900 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், மதியம் 12.30 மணியளவில், நிலமை கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்படதாக அறிவிக்கப்பட்டு,  மக்கள் கட்டிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

மில்வால் மற்றும் பொப்லர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும், பெத்னல் கிரீன் மற்றும் யூஸ்டன் தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு தீயணைப்பு மீட்புப் பிரிவுகளும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: