போர் விமானங்கள் குண்டு மழை – காசா நகர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம்!

Tuesday, May 18th, 2021

காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியதை தொடர்ந்து அங்கு போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில் கடந்த 10-ந்தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.
இருதரப்பும் மோதலை கைவிட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் நாட்டு மக்களிடம் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹ_ ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும் என சூளுரைத்தார்.
அதன்படி மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மிகவும் கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேலின் 50 போர் விமானங்கள் சுமார் 20 நிமிடங்களுக்கு காசா நகர் மீது இடைவிடாது குண்டு மழை பொழிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை அதிகாலை தொடங்கி இரவு வரை இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீதி 80 முறை வான் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் காசா நகரில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களில் 58 பேர் சிறுவர்கள் ஆவர். அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதலில் தங்கள் தரப்பில் இதுவரை 5 வயது குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: