பிரித்தானிய நாடாளுமன்ற இணையதளம் முடக்கம்!

Monday, June 26th, 2017

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இணையதளம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதால், எம்.பி.க்கள் மிரட்டப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் எம்.பி.க்கள் தங்கள் இ-மெயில், மற்றும் தனி நபர் பக்கங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இக்குழப்பத்தால் சர்வர் பிரச்னை குறித்து ஆராயப்பட்டது. அப்போது மரம் நபர்களால் நாடாளுமன்றத்தின் இணையதளப் பக்கங்கள் முடக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்தை தவிர்த்து வேறெங்கும் நாடாளுமன்ற இணையப் பக்கத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், எம்.பி.க்களுக்கு அனுப்பக்கூடிய முக்கியத் தகவல்கள், செய்திகள், மெயில்கள் என எதையும் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே எம்.பி.க்களின் தகவல்களை திருடப்பட்டிருந்தால் அந்த தகவல்களை பயன்படுத்தி குறித்த கும்பலானது அவர்களை மிரட்டவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் குறித்த தகவலை மறுத்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், எம்.பி.க்களின் மின்னஞ்சல்கள் எதுவும் முடக்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு கருதி அதிகாரிகளே முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் பிரித்தானிய சுகாதாரத்துறையின் இணையதளப் பக்கங்கள் இதேபோல் மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது என வெளியான தகவல் தீவிரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.

Related posts: