நைஜீரியாவில் 80 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை!

Thursday, December 15th, 2016

நைஜீரியாவில் பசி பட்டினியால் 80 ஆயிரம் குழந்தைகள் பலியாகும் அபாயம் இருப்பதாக ‘யூனிசெப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே பசி பட்டினியால் தவிக்கும் குழந்தைகளுக்கு மனிதாபிதமான உதவிகள் தேவைப்படுவதாக அவ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது..

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் உள்ளிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக ‘போர்னோ’ மாகாணம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவின்றி தவிக்கின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறும் தீவிரவாதிகளின் தாக்குதலால் 26 இலட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உணவில்லாததால் 4 லட்சம் குழந்தைகள் பசி பட்டினியால் தவிக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் இவர்களுக்கு சர்வதேச நாடுகள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை உதவிகள் வழங்காவிடில் 5-ல் ஒரு பங்கு குழந்தைகள் உயிரிழக்கும். அதாவது 80 ஆயிரம் குழந்தைகள் பலியாகும் அபாயம் உள்ளது. இத்தகவலை ஐ.நா.வின் யூனிசெப் செயல் இயக்குனர் அந்தோனி லேக் தெரிவித்துள்ளார்..

ஆனால் ஐ.நா.வும், சர்வதேச தனியார் நிறுவனங்களும் நன்கொடை பெறுவதற்காக மிகவும் திரித்து கூறுவதாக நைஜீரிய ஜனாதிபதி முகமது புகாரி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்பே போகோஹராம் தீவிரவாதிகள் தோற்கடித்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நைஜீரியாவும், அண்டை நாடுகளும் அவர்கள் கைப்பற்றிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து விரட்டியடித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

919911col144824355_5091873_14122016_aff_cmy