சாய்ந்த கோபுரத்தைத் தகர்க்க சதி! -பாதுகாப்புஅதிகரிப்பு!!

Sunday, August 14th, 2016

 

உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தைத் தகர்க்க சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின்பேரில், இத்தாலியில் வசித்து வரும் துனீசியரை நாட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக ஐரோப்பிய நாடுகளில் தனி நபர்கள் நிகழ்த்தி வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை இத்தாலியில் வாழ்ந்துவரும் பிலால் சியாஹூய் (26) என்பவர் பாராட்டியுள்ளார்.

இத்தாலியில் வசித்து வரும் துனீசியரான அவர், அந்த நாட்டின் பைசா நகரிலுள்ள உலகப் புகழ்மிக்க சுற்றுலாத் தலமான சாய்ந்த கோபுரத்தில் தாக்குதல் நிகழ்த்தப் போவதாக மிரட்டலும் விடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில், பிலால் சியாஹூயை இத்தாலியிலிருந்து வெளியேற்ற அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளான பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் ஐ.எஸ். பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்ட நபர்கள் நிகழ்த்தியதைப் போன்ற தாக்குதல் இத்தாலியிலும் நிகழ்த்தப்படலாம் என்று அச்சம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களாக பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட ஏராளமானவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு உள்துறை அமைச்சர் ஏஞ்சலினோ அல்ஃபானோ உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: