ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் அமெரிக்கா!

Wednesday, July 3rd, 2019

வர்த்தகப் போரில் சீனாவுடன் சமரசத்திற்கு வந்த ஓரிரு நாட்களில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் விமான தயாரிப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனமும், ஐரோப்பாவை சேர்ந்த Airbus SE நிறுவனமும் மிகப்பெரிய நிறுவனங்களாக திகழ்ந்து வருகின்றன.

ஆனால், இந்த இரு நிறுவனங்களும் சம்மந்தப்பட்ட நாடுகளிடம் இருந்து பெருமளவு மானியங்களை பெறுவதாக, உலக வர்த்தக கழகத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிரடியாக வரி விதித்தன.

அத்துடன் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, அவர் எடுத்து வரும் கொள்கை முடிவுகள், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

அதன் ஒருபடியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்துக்கு சில மாதங்களுக்கு முன் டிரம்ப் இறக்குமதி வரி விதித்தார். இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மேலும் அதிருப்தியடைந்தன.

இந்நிலையில் ஆலிவ்கள், இத்தாலிய பாலாடைக் கட்டிகள், ஸ்காட் விஸ்கி உள்ளிட்ட கூடுதல் பொருட்களின் பட்டியலை அமெரிக்க வர்த்தக துறை அலுவலகம் வரி விதிப்புக்கு பரிந்துரைத்துள்ளது.

இதன்மூலம், மேலும் 4 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஐரோப்பிய இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்க வரி விதிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்க வர்த்தக துறை அலுவலகம் இதற்கு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையில் இப்பட்டியலில் மதுபானங்களையும் சேர்த்திருப்பதற்கு, அமெரிக்காவின் மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இறக்குமதிப் பொருட்கள் மீதான வரி விதிப்பை அதிகரிக்கப் போவதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் மாறி மாறி எச்சரித்து வருகின்றன. முன்னதாக, 21 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என அமெரிக்கா கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: