உலகளவில் 42 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – 14 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்தனர் – உலக சுகாதார அமைப்புகள் சுட்டிக்காட்டு!

Monday, May 11th, 2020

கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியாகின்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்துடன்  கடந்த 24 மணி நேரத்தில் அமெரினக்காவில் 750 பேர் பலியாகியுள்ளதுடன் 20 ஆயிரத்து 329 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13  இலட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரம் அதிகரித்து வருகின்றது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்த தொற்றால் 111 பேர் பலியாகியுள்ளதுடன் 4 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் குறித்த தொற்றால் இதுவரை 2 ஆயிரத்து 212 பேர் பலியாகியுள்ளதுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் உலகலாவிய ரீதியில் இதுவரை 41 இலட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 2  இலட்சத்து 83 ஆயிரத்து 734 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த 14 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரித்தானியாவில் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை ஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கட்டஙகட்டமாக தளர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பொது போக்குவரத்துக்களை தவிர்க்குமாறு பிரித்தானிய பிரதமர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.

ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு பொது இடங்கள் திறக்கப்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் அதில் 31 ஆயிரத்து 855 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: