அமெரிக்கா, பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு !

Thursday, October 4th, 2018

வேதியியல் துறையில் சாதனை புரிந்தமைக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் பிரான்செஸ் அர்னால்ட், ஜார்ஜ் ஸ்மித் மற்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர் கிரகோரி வின்டெர் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

நொதி திறனின் பரிணாம வளர்ச்சியை பயன்படுத்தி, உயிரி எரிபொருள் முதல்கொண்டு மருந்துகள் வரை ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்தமைக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்றிருப்பவர்களில் பிரான்செஸ் அர்னால்ட் பெண் விஞ்ஞானி என்ற நிலையில், அத்துறையில் இவ்விருதைப் பெற்றுள்ள 5-ஆவது பெண் என்ற சிறப்பை அடைந்துள்ளார்.

பிரான்செஸ் அர்னால்டுக்கு, நோபல் விருதுடன் சேர்த்து மொத்த பரிசுத் தொகையான 8.7 லட்சம் யுரோக்களில் (இந்திய மதிப்பில் ரூ.7.3 கோடியில்) சரி பாதி தொகையும் வழங்கப்படவிருக்கிறது. மீதமுள்ள தொகையை ஜார்ஜ் ஸ்மித்தும், கிரகோரி வின்டெரும் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்து நோபல் பரிசு தேர்வுக் குழுவினரான, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ராயல் அகாடமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “”2018-இல் நோபல் பரிசு பெறுபவர்கள் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை பயன்படுத்தி மனிதகுலத்துக்கு தேவையான மாபெரும் பலன்களை தந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் துறைக்கான தேர்வுக் குழுவின் தலைவர் கிளேஸ் குஸ்டாஃப்சன், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது, “”விருது பெற்றுள்ள மூவரும், டார்வின் கொள்கையை சோதனைக் குழாய்களில் வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கின்றனர். பரிணாம வளர்ச்சி நடவடிக்கையில் மூலக்கூறுகளின் ஒருங்கிணைவைப் பயன்படுத்தி, ஆய்வகங்களில் அதனை மீண்டும் உருவாக்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

பிரான்செஸ் அர்னால்ட் (62)

மூன்று மகன்களின் தாயான பிரான்செஸ் அர்னால்டு, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராவார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது ஆராய்ச்சிகளின் விளைவாக, கரும்பில் இருந்து உயிரி எரிபொருளை தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சலவைத் தூள்களின் செயல்பாட்டை குளிர்ந்த நீரிலும் மேம்படுத்தும் வகையிலும் அவரது ஆராய்ச்சிகள் பலனளித்து வருகின்றன.

ஜார்ஜ் ஸ்மித் (77),  கிரகோரி வின்டெர் (67)

ஜார்ஜ் ஸ்மித், மிஸ்னஸளரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். கிரகோரி வின்டெர், கேம்ப்ரிட்ஜில் உள்ள எம்ஆர்சி ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.

பாக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் மீது வைரஸ் தாக்குதலை தொடுத்து, அதன் மூலமாக புதிய புரதங்களை உருவாக்க முடியும் என அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இதனால் முடக்கு வாதம், சொரியாசீஸ், குடல் அழற்சி நோய்கள் ஆகியவற்றுக்கான மருந்துகள் அவர்களது ஆராய்ச்சி மூலமாக கிடைக்கப்பெற்றன.  இதேபோல் நச்சுத்தன்மையை நீர்த்துப் போகச் செய்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலம் வாயிலாக பரவும் புற்றுநோய் போன்றவற்றுக்கான மருந்துகளும் கண்டறியப்பட்டன.

ஸ்மித், வின்டெர் ஆகியோரது நோய் எதிர்ப்பு மருந்துகள் என்பது வீரியம் மிகுந்ததாகவும், பக்க விளைவுகள் குறைவானதாகவும் உள்ளன என்று நோபல் பரிசு தேர்வுக் குழுவின் தலைவர் கோரன் ஹன்சன் தெரிவித்தார்.

Related posts: