73 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

Monday, December 2nd, 2019

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதன் பின்னர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

2 வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் இரட்டைச் சதம் மற்றும் மார்னஸ் லாபுசாக்னேவின் 162 ஓட்டங்களால் வலுவான நிலையில் உள்ளது. மார்னஸ் லாபுசாக்னேவின் ஆட்டமிழந்த பின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கிறங்கினார்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், ஸ்டீவ் ஸ்மித் 23 ஓட்டங்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து 73 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். 126 இன்னிங்ஸ்களில் ஸ்மித் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹேமண்ட் 131 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ஓட்டங்கள் கடந்ததே சாதனையாக இருந்தது. மேலும் அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவனான டான் பிராட்மேனின் டெஸ்ட் போட்டிகள் ஓட்டங்களையும் (6,996 ஓட்டங்கள்) முந்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் முறையே தங்களது 134 வது மற்றும் 136 வது இன்னிங்ஸ்களில் 7,000 ஓட்டங்கள் கடந்தனர். விராட் கோலி மற்றும் இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா ஆகியோர் தங்களது 138 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்தனர்.

சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் விவியன் ரிச்சார்ட்ஸ் தனது 140 வது இன்னிங்சில் 7,000 ஓட்டங்கள் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: