நட்சத்திர வீரரை நீக்கிய ஆப்கானிஸ்தான்!

Monday, August 12th, 2019

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷசாத்தை அடுத்தடுத்த புகார்களினால் அணி நிர்வாகம் காலவரையறையின்றி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

விக்கெட் கீப்பர் – துடுப்பாட்ட வீரரான ஷசாத், டி20 போட்டிகளில் அந்த அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்துள்ளார்.

ஆனால், அவர் மீது புகார்களும், சர்ச்சைகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக 2019 உலகக்கோப்பை தொடரின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். தான் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், தனக்கு எதிராக கிரிக்கெட் வாரியம் செயல்படுவதாகவும் ஷசாத் அப்போது குற்றம்சாட்டினார்.

மேலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் விதிகளின்படி, வெளிநாடு செல்லும் வீரர்கள் அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும். ஆனால் ஷசாத் இருமுறை அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளார். ஷசாத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளால், அவரை விசாரணைக்கு அழைத்தது ஆப்கான் கிரிக்கெட் வாரியம். அதற்கு அவர் குறிப்பிட்ட நாட்களில் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முகமது ஷசாத்தை காலவரையறையின்றி இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் சர்வதேச போட்டிகள் மட்டுமன்றி, மற்ற டி20 போட்டிகளிலும் அவரால் விளையாட முடியாது. இதுதொடர்பாக ஷசாத் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: