தொடரை வென்றது அவுஸ்திரேலியா!

Saturday, September 24th, 2016

இலங்கை, அவுஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி, இன்னும் ஒரு போட்டி இருக்கையிலேயே தொடரை, 3-0 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவி மெக் லன்னிங், இலங்கையணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில், இலங்கையணி சார்பாக, பிரசாதனி வீரக்கொடி 31, நிபுனி ஹன்சிகா 23, அணித்தலைவி சாமரி அத்தப்பத்து 15 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணி சார்பாக, ஜெஸ் ஜொனாஸென் மூன்று, கிறிஸ்டன் பீம்ஸ், ஹொலி பேர்லிங் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 103 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 27.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கினையடுத்து ஒன்பது விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, எலைஸ் விலானி ஆட்டமிழக்காமல் 48, நிக்கோல் போல்டன் 35 ஓட்டங்களைப் பெற்றனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை, இனோகா றணவீர கைப்பற்றியிருந்தார்.

SD-Australian-women-cricket-team

Related posts: