தொடரை கைப்பற்றி இந்தியா!

Monday, November 12th, 2018

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மையரும் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் 6 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓட்டங்களை கடந்தது.

இந்த அதிரடி ஜோடியை சுழல்பந்து வீச்சாளர் சாஹல் பிரித்தார். முதலில் ஷாய் ஹோப்பை 24 ஓட்டங்களிலும், ஹெட்மையரை 26 ஓட்டங்களிலும் அவுட்டாக்கினார். இதையடுத்து அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது.

அடுத்து இறங்கிய டேவன் பிராவோ பொறுப்புடன் ஆடினார். ராம்தின் 15 ஓட்டங்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் சிக்கி வெளியேறினார்.

அடுத்து ஆடிய நிகோலஸ் பூரன் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக ஆடினர்.

அதன்பின்னர் அதிரடியை தொடர்ந்தனர். நிகோலஸ் பூரன் 4 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தின் அவரது அணியின் ரன்கள் உயர வழிவகுத்தார். இந்த ஜோடி 27 பந்துகளில் 50 ஓட்டங்கள் சேர்த்தது.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை எடுத்துள்ளது.

டேரன் பிராவோ 43 ஓட்டங்களுடனும், நிகோலஸ் பூரன் 25 பந்தில் 53 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்தியா சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் முறையே 5 விக்கெட் மற்றும் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரையும் இழந்து விட்டது.

182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான், அணித்தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அதில் ரோகித் சர்மா 4(6) ஓட்டங்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் 17(10) ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்ததாக ஷிகார் தவானுடன் ரிஷாப் பாண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.

தனது அதிரடி ஆட்டத்தினால் தவான் அரை சதத்தினை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து ரிஷாப் பாண்டும் தனது அரை சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.

இந்த ஜோடி பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இறுதியில் வெற்றிபெற 7 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ரிஷாப் பாண்ட் 58(38) ஓட்டங்களில் வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டு ஆட்டம் சமன் ஆன நிலையில் ஷிகார் தவான் 92(62) ஓட்டங்களில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தின் இறுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

முடிவில் மணீஷ் பாண்டே 4(6) ஓட்டங்களும் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கீமோ பால் 2 விக்கெட்டுகளும், தாமஸ் மற்றும் ஆலன் தலா1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

Related posts: