தலைமைத்துவம் அற்றவர் டெய்லர்- மக்கலம்!

Wednesday, October 26th, 2016

தலைமைத்துவம் தொடர்பாக நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் றொஸ் டெய்லர் மீது, அவ்வணியின் மற்றொரு முன்னாள் தலைவரான பிரென்டன் மக்கலம், விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பிரென்டன் மக்கலம் வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையில், “இடம்பெறாத அந்த சதித்திட்டம்” என்ற பிரிவில், இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் தலைவராக இருந்த டானியல் விற்றோரி, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து தலைவராகப் பதவி வகித்த றொஸ் டெய்லரிடமிருந்து அப்பதவி, திடீரெனப் பறிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு மக்கலத்திடம் வழங்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரில், மக்கலத்துக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால், டெய்லருக்கு உபாதை ஏற்படவே, அவசர நடவடிக்கையாக, அணியைத் தலைமை தாங்குவதற்காக, மக்கலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், மக்கலம் அங்கு செல்வதற்கு முன்பாக முதலிரு போட்டிகளிலும் தலைமை தாங்கிய கேன் வில்லியம்ஸனே, ஏனைய போட்டிகளிலும் தலைமை தாங்குவார் என, அவருக்கு அறிவிக்கப்பட்டது. அந்தத் தொடரில், 2 டெஸ்ட்கள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் காணப்பட்ட நிலையில், ஒரேயோர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மாத்திரம், நியூசிலாந்து அணி வென்றிருந்தது.

அது தொடர்பாகக் குறிப்பிடும் மக்கலம், தான் தலைமை தாங்குவதை றொஸ் டெய்லர் விரும்பியிருக்கவில்லை அல்லது பயிற்றுநர் ஜோன் ரைட்டின் ஒழுங்கமைப்புக் குறைபாடு என்பதே, அக்குழப்பத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கிறார்.

அந்தத் தொடரின் பின்னர் ஜோன் ரைட், பயிற்றுநர் பதவியிலிருந்து நீக்கப்பட, மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம், பிளவை மேலும் வலுப்படுத்தியது என, மக்கலம் குறிப்பிடுகிறார்.

ஆரம்பத்திலிருந்தே, ஹெஸனின் நோக்கங்கள் குறித்து, டெய்லருக்குச் சந்தேகம் காணப்பட்டது எனக் குறிப்பிடும் மக்கலம், ஹெஸனைப் பற்றி அறிவதற்கு முன்னரே, ஹெஸனை அவர் ஒதுக்கிவிட்டார் போன்று காணப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.

தனது நண்பரான ஸ்டீபன் பிளமிங், அப்போதைய தலைவராக றொஸ் டெய்லரை பதவியிலிருந்து விலக்குவதற்காகவே, தனது மற்றைய நண்பரான மைக் ஹெஸனை, பயிற்றுநர் பதவிக்கு அமர்த்தினார் என்ற வதந்தி காணப்பட்டதாகக் குறிப்பிடும் மக்கலம், பயிற்றுநர் பதவிக்கு, மத்தியூ மொட்-ஐயே, தான் பரிந்துரைத்ததாகக் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் இந்தியாவில் இடம்பெற்ற தொடரிலும் நியூசிலாந்து அணி தடுமாறிய போது, அணிக்கான கூட்டங்களை மைக் ஹெஸன் ஏற்பாடு செய்த போது, தங்களது கருத்துகளை அனைத்து வீரர்களும் தெரிவித்த போதிலும், தலைவரான றொஸ் டெய்லர், எதையுமெ தெரிவிக்க மாட்டார் என, மக்கலம் குறிப்பிடுகிறார்.

அத்தொடருக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரிலும் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்திய நியூசிலாந்து, டெஸ்ட் தொடரிலும் ஆரம்பத்தில் தடுமாறியது. பின்னர் இரண்டாவது போட்டியில், சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டெய்லர், அப்போட்டியை வென்று, தொடரைச் சமப்படுத்த உதவினார்.

ஆனால் அத்தொடர் முடிவடைந்ததும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் தலைவராகும் வாய்ப்பு, தனக்கு வழங்கப்பட்டதாகவும், அதை ஏற்றுக் கொள்வதற்கு நேரத்தைக் கோரியதாகவும் தெரிவிக்கும் மக்கலம், அது குறித்துத் தனது வழிகாட்டியான ஸ்டீபன் பிளமிங்குடன் கேட்ட போது, அதை ஏற்க வேண்டாமென அவர் அறிவுரை கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆனால், டெஸ்ட் தலைவராக மாத்திரம் இருப்பதற்கு, றொஸ் டெய்லர் மறுப்புத் தெரிவிக்க, மூன்று வகைப் போட்டிகளுக்குமான தலைமையும், தன்வசம் வந்ததாக, பிரென்டன் மக்கலம் குறிப்பிட்டுள்ளார்

IN209487

Related posts: