தொடரை கைப்பற்றி அசத்தியது இந்தியா!

Wednesday, November 8th, 2017

நியூசிலாந்து எதிரான கடைசி மற்றும் 3வது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3 வது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்கள் எடுத்தது.

முன்னதாக நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் தொடரை வெல்ல இப்போட்டி முக்கியமானதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் மழையினால் ஆட்டம் துவங்குவதில் தாமதமானதால், போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.இந்திய அணியில் சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோருக்கு பதில் மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் சவுத்தி அணிக்கு திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக ஓட்டங்கள் சேர்க்க தவற, இந்திய அணி, 8 ஓவரில் 5 விக்கெட்டுக்க் 67 ஓட்டங்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே துவக்க வீரர் கப்டிலை (1) வெளியேற்றினார் புவனேஷ்வர்.அடுத்த ஓவரில் பும்ரா, ஆபத்தான முன்ரோவை (7) வெளியேற்றினார்.

பின்னர் வந்த அணித்தலைவர் வில்லியன்சன் (8) பாண்டியாவின் அசத்தல் ரன் அவுட்டில் வெளியேறினார்.பிலிப்ஸ் (11) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை. நிகோலஸ் (2) ஏமாற்றினார்.

தொடர்ந்து நியூசிலாந்து அணி வெற்றிக்கு கடைசி ஓவரில், 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளை பாண்டியா மிரட்டலாக வீசினார். அடுத்த பந்தில் கிராண்ட்ஹோமே ஒரு இமாலய சிக்சர் விளாசினார்.அடுத்த பந்தை ஒயிடாக வீசினார்.

அடுத்த இரண்டு பந்தில் 2 ஓட்டங்கள் மட்டும் எடுக்கப்பட கடைசி பந்தில் 1 ரன் மட்டும் எடுக்க, நியூசிலாந்து அணி, 8 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் எடுத்து 6 ஓட்டங்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது.இதன் மூலம் இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் டி-20 தொடரை கைப்பற்றி அசத்தியது

Related posts: