கெய்ல் போன்று முடியாது! ஆனால் விரைவாக ஓட்டங்கள் சேர்க்க முடியும்: இங்கிலாந்து வீரர் ரூட்!

Friday, March 1st, 2019

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோ ரூட், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் போன்று சிக்சர்கள் விளாச முடியாது என்றாலும், தன்னால் விரைவாக ஓட்டங்களை குவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் தூண் போல நின்று விளையாடும் வீரர் ஜோ ரூட். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 361 ஓட்டங்கள் வெற்றி இலக்கை அடைய சதமடித்து வழிவகுத்தார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் கலக்கி வரும் ஜோ ரூட், டி20 கிரிக்கெட்டில் அதிக அளவில் விளையாடியது கிடையாது. எனினும், சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கில் சில போட்டிகளில் விளையாடினார்.

இந்நிலையில், கிறிஸ் கெய்ல் போன்று என்னால் சிக்சர்கள் விளாச முடியாது. ஆனால், விரைவாக ஓட்டங்களை குவிக்க இயலும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நான் அதிக அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. டி20 போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன்.

அதில் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கும்போது அந்த வாய்ப்பை தவற விட விரும்ப மாட்டேன். கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசுவதுபோல் என்னால் அடிக்க இயலாது. ஆனால் விரைவாக ஓட்டங்கள் குவிக்க இயலும்.

அவரைப்போல் கேலரிகளுக்கு பந்தை அனுப்ப இயலாது. ஆனால், 95 மைல் வேகத்தில் வரும் பந்தை டாப் எட்ஜ் மூலம் சிக்சருக்கு விளாச முடியும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: