உலகக் கிண்ண பயிற்சி: ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி!

Thursday, May 31st, 2018

அர்ஜெண்டினா கால்பந்து அணித்தலைவர் லயோனல் மெஸ்ஸி, உலகக் கிண்ண கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் ஹாட்ரிக் அடித்து அசத்தியுள்ளார்.

2018 உலகக் கிண்ண கால்பந்து தொடர், ரஷியாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் 32 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கு முன்பாக நட்பு ரீதியிலான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் ஹைதி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான மெஸ்ஸி கோல் அடித்தார். இதன்மூலம், முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன் பின்னர், விறுவிறுப்பாக நடந்த இரண்டாம் பாதியின் 58வது நிமிடம் மற்றும் 66வது நிமிடம் என அடுத்தடுத்து மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்தார்.

மெஸ்ஸியின் இந்த ஹாட்ரிக் கோலால் அர்ஜெண்டினா 3-0 என முன்னிலை பெற்ற நிலையில், 69வது நிமிடத்தில் அந்த அணியின் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோல் அடித்தார்.

கடைசி வரை ஹைதி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதன்மூலம், அர்ஜெண்டினா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Related posts: